திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

3

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி (திருவள்ளுவர், திருக்குறள் 245)

“அருள் உள்ளம் கொண்டவர்க்குத் துன்பம் இல்லை. அதற்குச் சான்று காற்று இயங்கும் வளம் உடைய பெரிய உலகம்” என்கிறார் திருவள்ளுவர்.
காற்று எல்லாக் காலத்தும் எல்லா இடத்தும் எல்லா உயிர்க்கும் உதவி நிலைத்து நிற்கிறது. அருள் உள்ளவர்கள் எல்லாரிடமும் எப்போதும் அருள் உள்ளத்துடன் நடந்து கொண்டால்  துன்பமின்றிப் புகழால் நிலைத்து நிற்பர். காற்று வழங்கும் இப்பெரிய நில உலகில் பிறரிடம் அருள் உள்ளத்துடன் நடந்து அல்லல் உறாதவர்கள் பலர் உள்ளனர். அவர்களை முன் எடுத்துக்காட்டுச் சான்றாகக் கொண்டு  அருள் உள்ளத்துடன் திகழ வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
அருளுடையார்க்கு அல்லலில்லை என்பதற்குச் சான்று இவ்வுலகம் என்று மட்டும் திருவள்ளுவர் கூறியிருக்கலாம். ஆனால், அவ்வாறு கூறவில்லை. வளம் மிகுந்த காற்று இருக்கும் பெரிய உலகம் என்கிறார்.
காற்று ஓரிடத்தில் நில்லாமல் உலவிக் கொண்டே இருப்பதால் ‘உலவி’ என்றும் அதற்கு  அறிவியல்  பெயர் உண்டு. பல கோடி பல கோடி உயிர்கள் பற்பல கோடி யாண்டுகள் உயிர்ப்புடன் இருக்கும் செழிப்புடையது காற்று.  செழிப்புடைய காற்று உள்ளமையால் உலகமும் செழிப்புடையதுதான். எனவேதான் ‘மல்லல்’ என்கிறார்.
‘மல்’ என்றால் வளம் எனப் பொருள். அதிலிருந்து பிறந்த மல்லல் வளமை, செழுமை, பெருமை, வலிமை,செல்வம், மிகுதி, பொலிவு, அழகு எனப்பல பொருள்கள் உடையது.
தொல்காப்பியர் “மல்லல் வளனே” என்கிறார். (வளன் + ஏ = வளமையும் பெருக்கமும்)
‘ஞால்’ என்றால் பிடிப்பு இல்லாமல் தொங்குதல் எனப் பொருள்.
எப்புறமும் பிடிப்புத் துணை இன்றி விண்வெளியில் தொங்கும் உலகம் என்னும் ஆழ்ந்த பொருளை உடையது ‘ஞாலம்’ என்னும் சொல். இத்திருக்குறளில் ஞாலம் என்னும் சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் அந்தரத்தில் பூமி இருக்கும் அறிவியல் உண்மையை நினைவு படுத்துகிறார். பொருள்கள் மீது பற்றின்றி இருந்தால்தான் நமக்கு அருள் உள்ளம் வாய்க்கும் என்பதை உணர்த்த இச்சொல்லைத் திருவள்ளுவர் கையாண்டார் போலும்.
கரி என்பதற்கு யானை, கரிய நிறம், நெருப்புக்கரி, சான்று எனப் பல பொருள்கள் இருப்பினும் இங்கே சான்று என்னும் பொருளில் பயன்படுத்தப்பெற்றுள்ளது.
அருளாளர்களுக்கு அல்லல் இல்லை எனச் சொல்ல வந்த திருவள்ளுவர் பூமியில் உள்ளவர்களை எடுத்துக்காட்டாகக் கூறி அதற்கு அடைமொழியாகப் புவியில் காற்று நிலவும் அறிவியல் உண்மையைப் பயன்படுத்தி உள்ளார். அத்துடன் விண்வெளியில் பற்றின்றித் தொங்கிக் காெண்டிருப்பதை உரைக்கும்  ஞாலம் என்றும் அறிவியல் கலைச்சொல்லையும் பயன்படுத்தி உள்ளார்.
அருள் உள்ளத்தை வலியுறுத்த வந்த பொழுதும் அறிவியல் உண்மைகளை எடுத்துரைக்கும் திருவள்ளுவரின் வல்லமைதான் என்னே!
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 24.07.2019