இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் ! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கொழும்பு, மார்ச்சு 23  இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலைக் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புடன் அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட இறுதிப் போரில் 1,40,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.  இவை அனைத்துக்கும் அப் போதைய இலங்கை அதிபர் இராசபக்சேவும் முதன்மைக் காரணமாக இருந்தார் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இலங்கை அரசுத் தரப்பு தகவலின்படி இறுதிப் போரின் போது 20,000 தமிழர்கள் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை நாடாளு மன்றத்தில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இலங்கை இனப்படுகொலைக் குற்றம் குறித்து முழுவதும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திடம் நாங்கள் எடுத்துச் செல்வோம். இலங்கை அரசமைப்புச் சட்டம், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதில்லை என்று கூறுவது தவறானது என்றார்.