ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

வடக்கை வாழ வைக்கும் தெற்கைப் புறக்கணிப்பது ஏன்? – கார்க்கோடன்




வடக்கை வாழ  வைக்கும் தெற்கைப் புறக்கணிப்பது ஏன்?

  தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் தமிழ் அரசியல்வாதிகளைவிட அதிகம் குரல் கொடுத்து வரும், தன்னைத் தமிழ்த்தாயின் தத்துபிள்ளை என்று சொல்லிக் கொண்ட தருண் விசய்,  இந்தியாவின் இன-நல்லிணக்க நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும் தற்காத்துப் பெருமைபடுத்திப் பேசுவதாக நினைத்து, “ நாங்கள் (இந்தியர்கள்) இனவெறியர்கள் அல்லர். எங்களைச் சுற்றியும் கறுப்பு நிறத் தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள். நாங்கள் இனவாதிகளாக இருந்தால் தென்னிந்தியர்களோடு எப்படிச் சேர்ந்து வாழ்கிறோம்?”  என்று பேசியுள்ளார்..
   அவர் பேசிய நோக்கம் எதுவானாலும்,  சொற்கள் தென்னிந்தியர்களை அயன்மைப்படுத்தி(அன்னியப்படுத்தி)க் காயப்படுத்துவதாக அமைந்திருப்பது உண்மை. ஏதோ போனால் போகிறதென்று கறுப்பர்களான தென்னிந்தியர்களோடு வட இந்தியர்கள் பெருந்தன்மையுடன் சேர்ந்து வாழ்வது போலத்தான் புரிந்து கொள்ளப்படும். தான் அந்தப்பொருளில்  சொல்லவில்லை என்று அவர் மறுத்திருப்பதுடன், தன்  சொற்கள் தென்னிந்தியர்கள் மனத்தைப் புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
  தென்னிந்தியர்கள் அனைவருமே கறுப்பு என்பதே தவறான கருத்து. அதேபோல வட இந்தியாவில் அனைவருமே வெள்ளை என்பதும் உண்மையில்லை. உ.பி., பீகார், மே.வங்காளம் போன்ற பல மாநிலங்களில் கறுப்புத் தோல் கொண்ட வட இந்தியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தருண் விசயை விட்டுவிட்டு, அவரது பேச்சின் சொற்களை மட்டும் பார்த்தால், பொதுவாகவே வட இந்தியர்களுக்கு (வடக்கு, வட மேற்கு) தக்காணப் பீடத்திற்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர்கள் ஏதோ வட இந்தியர்களைவிடச் சில அளவைகள் தரம் குறைந்தவர்களாகத் தெரிவது தொன்று தொட்டு நிகழ்ந்து வருவதுதான். தென்னிந்தியாவிலிருந்து வரும் எவரையும் ‘மதராசி’ என்று வடக்கில் கிண்டலடிப்பது   இயல்பு.  ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பகுதி மதராசு மாகாணமாக இருந்தது, இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். திராவிடம் தமிழ்நாட்டில் தலைதூக்கிய காலம் முதல், வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது என்ற அறிஞர் அண்ணாவின் குரல் இன்றும் ஒலிக்கத்தான் செய்கிறது. இந்தக் குரல் வெறும் இனவெறி முழக்கம், அரசியல் வேடம் என்று முழுதாக ஒதுக்கிட முடியாது.
  இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தென்னிந்தியர்கள் (தமிழ்நாடு, கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள், புதுச்சேரி போன்ற  ஒன்றியப்பகுதிகள்) 20  விழுக்காடு. ஆனால், இந்தியாவின் மொத்த வருமானத்தில் தென்னிந்தியா 30  விழுக்காடு பங்களிக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product அல்லது GDP)யில்  தென்னிந்தியா 25  விழுக்காடு பங்களிக்கிறது. மனிதவள மேம்பாட்டிலும், கல்வி, மின்சாரம், சாலை கட்டமைப்பு,  நல்வாழ்வு, தொழில் வளர்ச்சியிலும் ‘இந்தி வளையம்’ எனப்படும் வடநாட்டைவிடப் பலமடங்கு வளர்ச்சி பெற்று விளங்குகிறது தென்னகம். குழந்தைகள் வளர்ச்சியில் வட நாட்டைவிடத் தென்னாடு ஏழு மடங்கு உயர்ந்துள்ளது. கல்வித் திறனில் தென்னாட்டு மாநிலங்கள் தோராயமாக 80  விழுக்காடு பெற்றுள்ளன;   வட நாட்டு கல்வியறிவுத் திறனைவிட பத்து  விழுக்காடு புள்ளிகள் அதிகம்.
உலகிற்கே மருத்துவத் தலை நகரமாகச் சென்னை விளங்குகிறது. மென்பொருள் திறனில் அதாவது தகவல்தொழில்நுட்பத்திறனில் பெங்களூரு, சென்னை, ஐதராபாத்து இந்தியாவின் மொத்த தகவல்தொழில்நுட்பத் திறன்,  வல்லுநர்கள் எண்ணிக்கை, வெளி நாட்டில் பணிபுரிந்து அதன்மூலம் இந்தியாவிற்கு அயலகச் செலாவணி வருவாய் என்ற வகையில் 70  விழுக்காட்டிற்கு மேல் பெற்று இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குகிறது. கேரளாவிலிருந்து  வளைகுடா நாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டி இந்தியாவிற்கு அனுப்பும் பணம் இந்தியாவின் அத்தகைய அந்நியச் செலாவணி வருமானத்தில் மிகக் கணிசமான பகுதி.
  வட இந்தியாவில் பல  ஊர்ப் பகுதிகளில் இன்னும் கழிவறை வசதிகளே கிடையாது. மின்சாரம் இல்லாத  சிற்றூர்கள் பலப்பல. மலைப்பகுதிகளில் சாலைகளே இல்லாத  சிற்றூர்கள் இன்றும் இருக்கின்றன.
 மகப்பேற்றிற்காகப் பல  கல் தொலைவு நடந்துபோக வேண்டிய அவலம் வட இந்திய மாநிலங்களில் பல இடங்களில்  இயல்பாகும். இந்தியாவின் வரி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு கொடுக்கும் 20  விழுக்காட்டு மக்கள் தொகையான தென் மாநிலங்கள் மாற்றாக மத்திய அரசிடமிருந்து பெறும் வருமானம் வெறும் 18 விழுக்காடுதான்.  அஃதாவது தென்னக மாநிலங்கள் சம்பாதித்துக் கொடுத்து, பல வட இந்திய மாநிலங்கள் வாழ்கின்றன.  எடுத்துக்காட்டாகத் தமிழ்நாடு, தான் செலுத்தும் ஒவ்வோர் உரூபாய் வரி வருமானத்திலும் வெறும் 40  காசினையே மத்திய நிதியாகப் பெறுகிறது. இத்தனைக்கும் உ.பி. போன்ற மாநிலங்களில் தென் மாநிலங்களைவிட இயற்கை வளங்கள், நதிகள் அதிகம். மன்பதைச் சீர்த்திருத்தங்களிலும் தென்னகம்தான் நாட்டில் முன்நிற்கிறது. சாதிப் போர்களும், மதக் கலவரங்களும் தென்னகத்தைவிட வடக்கில் அதிகம். நகரங்கள் என்று எடுத்துக் கொண்டால், தலைநகர்  தில்லிக்கு நகர வளர்ச்சிக்காக 2016இல் 20,000 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னை, பெங்களூரு, ஐதராபாத்து, கொச்சி நகரங்களுக்கு 2016இல் மொத்த நிதி ஒதுக்கீடே 20,000 கோடிக்குக் குறைவுதான்! வேலை வாய்ப்பிலும் தெற்குதான் வடக்கை வாழவைக்கிறது.
அதிக மக்கள் தொகை கொண்ட, கல்வித்திறன் குறைந்த, தொழில்,  நல்வாழ்வு, கட்டமைப்பு வசதிகள் குறைந்த உ.பி., ம.பி., பீகார், தில்லி போன்ற மாநிலங்களுக்கு தென்னகம்தான் ‘புரவலர்’,. கலை, மொழி, பண்பாடு, இவற்றிலும் தெற்கு  என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மைதான். சிந்துச் சமவெளியில் அகழ்வாராய்ச்சி செய்ய நூறு கோடிகள் பணம் கொட்டும் மத்திய அரசு, தமிழகத்தில் கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்ய காரணமில்லாமல் மறுக்கிறது – தயங்குகிறது. தென்னகத்தில் அகழ்வாராய்ச்சிக்குச் செலவிடப்படும் தொகை வட மாநிலங்களில், வட மேற்கில் செலவிடப்படும் தொகையில் ஒரு  விழுக்காடுகூட இல்லை.
இந்தி மொழியைப் பரப்புவதற்காக  ஆண்டிற்கு  ஏறத்தாழ 120 கோடி செலவு செய்யும் மத்திய அரசு, மற்ற இந்திய மொழிகளுக்குச் செய்யும்  ஆண்டு செலவு வெறும் 4 கோடி! 16 மொழிகள் தேசிய மொழியாக (National languages) அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் இந்திக்கு மட்டும் வருடத்திற்கு 120 கோடி. தமிழ் உட்பட பிற மொழியில் அத்தனையும் சேர்த்தாலே 60 கோடி – பிற வட இந்திய மொழிகளையும் சேர்த்து! புராணம், பரம்பரையம் என்று கொண்டால்கூட, இந்து மதக் கடவுள் சிவன் தென்னாட்டவர். இராமர், தென்னாட்டிலிருந்து வடக்கு சென்ற மனுவின் வம்சத்தவர்;  கிருட்டிணர், காளி  முதலான பல கடவுள்களும் கறுப்பு நிறத்தவர்கள்தான்!
 தென்னகத்து மாநிலங்கள் மட்டும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தால், உண்மையான திராவிடத் தேசமாக செயல்பட்டிருந்தால், தலைநகரம் தென்னகத்திடம் இப்படி வாலாட்டாது. மாநிலத் தன்னடாட்சி்யை ஆதரிப்பதாகச் சொல்லும்  தலைமையமைச்சர் மோடி, அதை  மெய்யாகவே நடைமுறைப்படுத்த நினைக்கிறாரா என்று புரியவில்லை.
  மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடும் உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும். தேசியப் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, மாநிலங்களுக்குள் ஒருங்கிணப்பு, பணப் புழக்கம், பொதுச் சட்டம், நதிநீர்ப் பங்கீடுகள், தேசியக் கட்டமைப்பு போன்ற துறைகள் மட்டுமே மத்திய அரசு வசம் இருக்க வேண்டும். அந்தந்த மாநிலங்களின் வருமானத்தில் 90  விழுக்காடு அந்தந்த மாநிலத்திற்கே நிதி ஒதுக்கீடாகக் கொடுக்கப்பட வேண்டும். காசுமீரிலும், வட கிழக்கில் சில மாநிலங்களிலும், மத்திய அரசின் நிதியைப் பெற்றுக் கொண்டு, அந்தக் காசில் இந்தியாவையே குறிபார்த்துக் கல்லெறியும் கொடுமையை இன்னும் எவ்வளவு நாள்  பொறுத்துக் கொள்வது, சகித்துக் கொண்டிருப்பது? மத்தியிலுள்ள அரசு மட்டுமல்ல, தங்கள் உழைப்பு விழலுக்கிறைத்த நீராகப் போவதை வேறுவழியின்றி வேடிக்கை பார்க்கும் தென்னக மாநிலங்களும்தான்.
தென்னகத்தில் மொத்த  நா.உறுப்பினர்கள் 129. இந்தி வளையத்தின்  நா.உ. 208. வட கிழக்கு, வட மேற்கு பகுதிகள் 205. மக்கள் தொகையை மட்டும் வைத்து பிரித்தானிய காலத்தில் ஏற்படுத்திய தொகுதி அமைப்புகளை மாற்றி, வருமான விகிதத்தை வைத்துத் தென்னகத்தின் பாராளுமன்றத் தொகுதிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். நம் உழைப்பும் வருமானமும் தேவை என்றால் நமது உரிமைகளும் தேவைகளும் பாதுகாக்கப்படுவதுடன் அது நியாயமாகவும் இருக்க வேண்டும். இதனால் தேசத்தைத் துண்டாட வழி செய்யச் சொல்லவில்லை. துண்டாகாமல் காப்பாற்ற வழிசொல்லி எச்சரிப்பது நம் கடமை.
  நியாயங்கள் மறுக்கப்படும் போதுதான் புரட்சியும் போராட்டமும் வெடிக்கிறது. தக்கண பீடத்திற்குக் கீழே இருப்பதால் நம்மை கீழோர் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. இந்தியாவின் அடிப்பாகம் தென்னகம் – அடிப்படை தென்னகம் – அடிக்கல் தென்னகம். அது அசையாமல் இருந்தால்தான் மேல்மாடிகள் பாதுகாப்பாக இருக்க முடியும். புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும்.
கார்க்கோடன்
தமிழக அரசியல் : 19.04.2017
கார்க்கோடன் எழுதிய
“தேயும் ‘தெற்கு’ திரண்டு நின்றால்…”
என்னும் கட்டுரையின் பெரும்பகுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக