இந்தித் திணிப்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அரசேற்பு அளிப்பதா?
வைகோ கண்டனம்
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு
விளைவிக்கும் வகையில் மத்திய அரசு எங்கும் எதிலும் இந்தி மொழி கட்டாயம்
என்பதைச் செயல்படுத்தி வருகின்றது. பா.ச.க. அரசின் இந்தித் திணிப்பு
முயற்சிகளுக்கு அரசேற்பு அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் இனி இந்தி
மொழியில்தான் பேசவும், எழுதவும் மற்றும் அறிக்கை வெளியிடவும் வேண்டும்
என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டு இருக்கின்றார். முன்னாள் அமைச்சர்
ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த
பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, மத்திய அமைச்சர்களாக
இருப்பவர்கள் இந்தி அறிந்து இருக்க வேண்டும் என்று கட்டாய உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றதோ என்கிற ஐயப்பாடு எழுகின்றது. பல்வேறு மொழி,
பண்பாடுகளைப் பின்பற்றும் பல தேசிய இனங்களின் கூட்டு அமைப்புதான் இந்தியா
என்பதை மத்திய அரசு உணராமல் போனால் வேற்றுமையில் ஒற்றுமை என்பது
கேள்விக்குறி ஆகும்.
மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ்
இயங்கும் மை.ப.க.வா.( C.B.S.C.) மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இனி
பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்றும்
குடியரசுத் தலைவரின் ஆணையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
நரேந்திர மோடி தலைமையில் பா.ச.க. அரசு
பொறுப்பு ஏற்ற பின்னர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தி மொழித் திணிப்பு கண்
மூடித்தனமாக அனைத்துத் துறைகளிலும் வேகமாக நடந்து வருகின்றது. அதைப் போலவே
சமக்கிருதத்தை முதன்மையான மொழியாக முன்னிறுத்துவதற்கான முயற்சிகளும்
செய்யப்பட்டு வருகின்றன. அதற்காகப் பதிமூன்று பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய
அரசு அமைத்தது. அக்குழு “சமக்கிருத வளர்ச்சிக்கான போக்கு மற்றும் திட்ட
வரைவு – பத்தாண்டுக் கால முன்னோக்குத் திட்டம்” எனும் தலைப்பில் அறிக்கை
ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளித்துள்ளது. இதில்
சமக்கிருதத்தையும், வேதங்களையும் வளர்ப்பதற்கும், அவற்றைப்
பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளையும் திட்டங்களையும்
தொகுத்து அளித்துள்ளது.
அதன்படி, பள்ளிக் கல்வி, பட்டயப்
படிப்பு, தொழிற்கல்வி, அறிவியல், சமூகவியல் ஆராய்ச்சி என அனைத்து
நிலைகளிலும் சமக்கிருதத்தைப் பாடமாக்குவது;
குறிப்பாக 12 ஆம் வகுப்பு வரை
அனைவருக்கும் சமக்கிருதத்தைக் கட்டாயப்பாடமாக்குவது; பள்ளிகளிலும்,
கல்லூரிகளிலும் சமக்கிருத ஆசியரை நியமிப்பது;
மத்தியப் பல்கலைக் கழகங்கள் அகில இந்திய
தொழில்நுட்பக் கல்விக் குழு, அரசொப்பு வழங்கப்பெற்ற தொழில்நுட்பக்
கல்லூரிகள் ஆகியவற்றில் சமக்கிருதத்திற்கான தனிப் பிரிவுகள் தொடங்குவது;
அவற்றுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது போன்றவை மத்திய அரசுக்குப்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
வேத மற்றும் சமக்கிருத இடைநிலைக்
கல்விக்கான மத்தியக் கல்வி வாரியம் ஒன்றை உருவாக்குவது, சமக்கிருத மற்றும்
வேத பள்ளி, கல்லூரிகள் மற்றும் சமக்கிருதப் பல்கலைக் கழகங்கள் அமைப்பது
உள்ளிட்ட பரிந்துரைகளும் மேற்கண்ட குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இந்துத்துவக் கொள்கைகளைத் திணிப்பதன்
மூலம் இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வகையில் மத்திய பா.ச.க.
அரசு செயல்பட்டு வருவதும், இந்தி, சமக்கிருதத் திணிப்பைச் சட்டமாக்குவதும்
கடும் கண்டனத்துக்கு உரியவை.
இந்தியைக் கட்டாயமாக்கும் எந்தவித
முயற்சிகளையும் 1937 ஆம் ஆண்டில் இருந்து இந்தியை எதிர்த்துப் போராடி வரும்
திராவிட இயக்கம் முறியடிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
(வைகோ, புழல் சிறையில்
தன்னைச் சந்திக்க வந்த வழக்கறிஞர் நன்மாறனிடம்
தெரிவித்துள்ள கருத்துகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக