பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு” – என்று முரசறைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
ஏப்பிரல் 29-இல் அவரது 127-ஆவது பிறந்தநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து, அவர் பிறந்த மாநிலமான புதுவையில், மாநில அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்றும், அவருக்கு மேலும் சிறப்புகளைச் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைக்குரல், தமிழன்பர்கள் மத்தியில் வலுவாக எழுந்திருக்கிறது.
தமிழுக்கு வளமும் நலமும் சேர்த்தவர் கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மொழிப்பற்றையும் இனப்பற்றையும் தன் உணர்ச்சிமிகும் கவிதைகள் மூலம் மக்கள் மனத்தில் ஆழமாக விதைத்ததோடு, மன்பதை(சமுதாய)ச் சீர்த்திருத்தக் கருத்துகளையும் வீறுகொண்டு முழங்கியவர் அவர். தமிழகம் கையிலெடுத்த மொழிப்போரில், அவரது கவிதைகளே தமிழ் இளைஞர்களிடம் ஆயுதங்களாகப் பளீரிட்டன.
தமிழகம் தொடங்கி, உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ
அங்கெல்லாம் இன்றும் புரட்சிக்கவிஞரின் பாடல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.
தமிழ்மேடைகள் தோறும் அவரது கவிதைகள் மணந்து வருகின்றன. கடல் கடந்த
நாடுகளிலும் அவருக்கான விழாக்கள் அங்கங்கே சிறப்புற நடத்தப்பட்டும்
வருகின்றன.எனினும் புரட்சிக்கவிஞர் பிறந்த மாநிலமான புதுவையில், அவருக்கு
மேலும் சிறப்பு சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கைதான் தற்போது
வலுத்திருக்கிறது.
பல்வேறு இலக்கிய அமைப்புகள் இது
தொடர்பான கோரிக்கைகளைத் தொடர்ந்து புதுவை அரசுக்கு வைத்துவரும் நிலையில்,
புரட்சிக்கவிஞரின் மகன் வழிப் பேரனும், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான
பேராசிரியர் கலைமாமணி கோ.பாரதி, அண்மையில் புரட்சிக்கவிஞர் தொடர்பான
கோரிக்கைகளோடு புதுவை முதல்வர் நாராயணசாமியைச் சந்தித்தார்.
இதுகுறித்து நாம் பாரதியிடம், “உங்கள் கோரிக்கை என்ன” என்றோம்.
பாரதியோ “ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியராகத்
தனது வாழ்வைத் தொடங்கிய எங்கள் தாத்தா பாரதிதாசன், தமிழுக்காகத் தன்னை
முழுதாக ஒப்படைத்துக் கொண்டார். தலைவணங்காத் தமிழ்க் கவிதையாகவே அவர்
வாழ்ந்தார். தனது ஆசானான பாரதியின் கனவுகளை நிறைவேற்றப் பெரிதும்
பாடுபட்டார்.
பாரதி, செய்யுள் நடையிலிருந்து எளிய கவிதை
நடைக்கு இறங்கிவந்த புதுமைப் புலவர். வெளிநாட்டுக் கவிஞர்களை நிறைய
அறிந்துவைத்திருந்த பாரதியார், அவர்களைப் போல் தமிழ்க்கவிஞர்கள்
பெருகவேண்டும் என்றும், ‘சிரீசுப்பிரமணிய பாரதி கவிதாமண்டலம்’
என்ற பெயரில் கவிதைகளுக்கான இதழை நடத்தவேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
அவரது இந்த விருப்பத்தை, அவர் காலத்திற்குப் பிறகு நிறைவேற்றியவர்
பாரதிதாசன்.
தளபதி போன்ற கவிஞர்கள் எவரும்
பாரதிக்குக் கிடைக்காத நேரத்தில், அவர் விரும்பியபடி புதுவையில்
பாரதிதாசன் கிடைத்தார். தன்னைப் பாரதிதாசன் சந்தித்தது பற்றி ‘என்னை ஒரு
கவிராயர் சந்தித்தார். அவர் நன்கு பாட்டெழுதுகிறார்’ என்று பாரதி
பூரித்தார். வ.வே.சு.(ஐயரைப்) போன்றவர்கள் பாரதியிடம்,
’எளிய நடை காரணமாக, உன்னையே கவிராயராய் இங்கே பலரும் ஏற்றுக்கொள்ள
மறுக்கிறார்கள். அப்படியிருக்க அவரை எப்படி கவிஞராக ஏற்பார்கள்?’ என்று
கேட்க, பாரதியோ, “சுப்பு, ஒரு பாட்டுப்பாடு” என்று பாரதிதாசனுக்கு
ஆணையிட்டார். உடனே பாரதிதாசன், “எங்கெங்கு காணினும் சக்தியடா..” என்ற பாடலைப் பாடினார். இதை நன்கு சுவைத்த பாரதியார், ‘சிரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த சுப்புரத்தினம் எழுதியது’ என்ற குறிப்போடு அந்தக் கவிதையைச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி அதை வெளிவரச்செய்தார். இப்படி பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான உறவு நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பாரதிதாசனுக்கு அவர் வாழ்ந்த காலத்தில், எந்த அரசு விருதும் கொடுக்கப்படவில்லை. அவர் மறைந்தபிறகு, அவரது ‘பிசிராந்தையார்’ என்ற நாடக நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது கொடுத்தார்கள். பின்னர்த் தமிழக முதல்வராக இருந்த கலைஞர், பாரதிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, எங்கள் குடும்பத்திற்கு 10 இலட்ச உரூபாயை வழங்கினார். அதைக் கொண்டுதான் எங்கள் பெருங்குடும்பம் கொஞ்சம் காலூன்றி நடக்க ஆரம்பித்தது.
இன்று உலகமெங்கும் தமிழ்க்கவிதையின்
அடையாளமாகப் போற்றப்படும் பாரதிதாசனுக்குப், பரவலாக விழாக்கள்
எடுக்கப்படுகின்றன . ஊரெல்லாம் சிலைவைத்துக் கொண்டாடப்படுகிற அவருக்கு,
அவர் பிறந்த மாநிலமான புதுவையில் மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்பது, எங்கள்
விருப்பமாகும். தமிழகத்தில் பிறந்த பாரதிக்குப் புதுவை மாநில அரியாங்குப்பத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் புதுவையிலேயே பிறந்த பாரதிதாசனுக்குப் புதுவையில் இதுவரை மணிமண்டபம்
இல்லை. அதே அரியாங்குப்பத்தில் அதற்கான இடவசதி இருக்கிறது. எனவே புதுவை
அரசு, அங்கே பாரதிதாசனுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும்.
அதேபோல், பாரதிதாசன் பிறந்தநாளான ஏப்பிரல் 29 ஆம் நாளை, தமிழக முதல்வராக இருந்த செயலலிதா, ’தமிழ்க் கவிஞர் நாளாக’த் தமிழகத்தில் அறிவித்தார். இதேபோல், புதுவை அரசும், பாரதிதாசன் பிறந்தநாளைக் ’கவிஞர்கள் திருநாளாய்’ மனமுவந்து அறிவிக்கவேண்டும். மேலும், தமிழகத்தில் பாவேந்தர் பெயரில் எம்ஞ்சிஆர்.
தனது ஆட்சிக் காலத்தில் விருதை உருவாக்கினார். அதேபோல் புதுவை அரசும்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் விருதை உருவாக்கி, ஆண்டுதோறும் சிறந்த
கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து மதிப்போடு வழங்கவேண்டும். இவை புதுவை மாநில
மக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாகும். இதைத்தான் புதுவை முதல்வரிடம்
எடுத்துச் சொன்னோம். முதல்வர் நாரயணசாமி தமிழ் மீது அதிகப் பற்றுடையவர். பாரதிதாசன் மகனான என் தந்தையார் மன்னர்மன்னனிடம்
மிகுந்த அன்பு பாராட்டக் கூடியவர். எனவே, எங்கள் கோரிக்கைகளை முழுமையாகக்
கேட்டுக்கொண்டவர், அமைச்சரவையைக் கூட்டி ஆவன செய்வதாகச் சொன்னார். நாங்கள்
நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்” என்றார் மிகுந்த எதிர்பார்ப்போடு.
“புதுவை அரசு பாரதிதாசனைச் சிறப்பிக்கவே
இல்லையா?” என்றோம். பாரதியோ, “71-இல், நாங்கள் வாழ்ந்து வந்த எங்கள் சொந்த
வீட்டைக் கையகப்படுத்தி, அங்கே பாரதிதாசன் அருங்காட்சியகம்
அமைத்திருக்கிறார்கள். அப்போது நூறாயிரம் உரூபாய் மதிப்பிலான வீட்டைச் சில
ஆயிரங்களைக் கொடுத்துக் கையகப்படுத்தியது அரசு. இதேபோல் ஆண்டுதோறும்
பாரதிதாசன் விழாவை 3 நாட்கள் கொண்டாடியது அரசு; போதுமான நிதி ஒதுக்கீடு
இல்லாததால் சில ஆண்டுகளாக, அந்தவிழாவை அரைநாள் விழாவாகச் சுருக்கிவிட்டது.
பாவேந்தர் விருப்பப்படி இன்று புதுவை மாநிலத்தில் கவிஞர்கள் எண்ணிக்கை
அதிகம். பெண் கவிஞர்களே 700 பேருக்குமேல் இருக்கிறார்கள்.
இப்படிக் கவிஞர்கள் தழைத்திருக்கும் புதுவையில் பாரதிதாசன் விழா
சிறப்புறக் கொண்டாடப்பட வேண்டும் என்பது மாநில மக்களின் விருப்பமாகும்.
இதேபோல் பாரதிதாசன் நினைவில்லத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தையும்
எண்மிய வசதியோடு நவீனப்படுத்தினால், தமிழுக்குப் பெரும் நன்மை கிடைக்கும்’
என்கிறார் அழுத்தமான குரலில்.
மலர்மாமணி புலவர் இளஞ்செழியனோ “புதுவையின் முதன்மையான அடையாளம் புரட்சிக் கவிஞர்தான். அந்த அடையாளத்தைப் பெருமிதத்தோடு தக்கவைத்துக்கொள்ள, புதுவை அரசு புரட்சிக் கவிஞரை மேலும் மேலும் கொண்டாடவேண்டும்” என்கிறார்.
பாவேந்தருக்கு மணிமண்டபம், அவர் பெயரில்
விருது, அவர் பிறந்தநாளைக் கவிஞர்கள் திருநாளாக அறிவிப்பது ஆகிய
கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்கள் பலரும் புதுவை
முதல்வர் நாராயணசாமிக்கு மின்னஞ்சல் மூலமாக கோரிக்கைகளை வைத்து
வருகின்றனர்.
கவிக்கோ அப்துல்ரகுமான் “தமிழுக்கு முகவரி கொடுத்தவர் புரட்சிக்கவிஞர். அவரைப் புதுவை அரசு தோளில் தூக்கிக் கொண்டாட வேண்டும்” என்கிறார். கவிஞர் மு.மேத்தாவோ
“புரட்சிக் கவிஞர் விருதை உருவாக்கி, அதைப் புதுவை மண்ணின் மைந்தர்களான
கவிஞர்களுக்குத் தொடர்ந்து வழங்கவேண்டும்” என்கிறார். கவிஞர் ஈரோடு தமிழன்பனோ
“புரட்சிக்கவிஞரின் கவிதைகளை உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்க
வழிவகை செய்யவேண்டும். உலகப் பல்கலைக் கழகங்களில் பாவேந்தர் பெயரிலான
அமர்வுகளை ஏற்படுத்தவும் முயலவேண்டும். அது தமிழின் உயரத்தை மேலும்
உயர்த்தும்” என்கிறார்.
புரட்சிக் கவிஞரின் ஒரே மைந்தரும் மூத்த தமிழறிஞருமான 87அகவை மன்னர்மன்னன்
நோய்வாய்ப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். அவர், “புதுவை
அரசு, புரட்சிக்கவிஞர் தொடர்பான கோரிகைகளை நிறைவேற்றும் என்று பெரிதும்
நம்புகிறேன்” என்கிறார் விழிகளில் நம்பிக்கை பளீரிட.
உலகத் தமிழர்கள் மகிழ்ச்சியடையும் வண்ணம் புதுவை முதல்வரிடமிருந்து அறிவிப்பாணைகள் பிறக்குமா?
– ஆரூர் தமிழ்நாடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக