ஐ.நா அவையின்  பட்டயம் சமற்கிருத மொழியிலேன்

  அமெரிக்காவின் சான்பிரான்சிசுகோ நகரில் பன்னாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு 1945ஆம் ஆண்டு அட்டோபர் 24ஆம் நாள் நடைபெற்றது. அதில் ஐ.நா அமைப்பை உருவாக்குவதற்காக உலக நாடுகளிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் உரிமை ஆவணமாக இயற்றப்பட்டது.
  இந்த அறிக்கை/பட்டயம்(charter) ஐ.நா-வின் ஆறு அலுவல் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஐ.நா மன்றத்தின் அலுவல் மொழிகளாக அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இரசியம், எசுப்பானியம் (Spanish) ஆகிய ஆறு மொழிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஆறு மொழிகளோடு ஏழாவது மொழியாக சமற்கிருத மொழியிலும் ஐ.நா. பட்டயம் தற்பொழுது மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாம்.
  ஐ.நா மன்றத்தின் அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சமற்கிருத மொழியில் ஐ.நா பட்டயம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இஃது எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. ஒருவேளை, ஐ.நா மன்றத்தின் அலுவல் மொழியாகவே சமற்கிருதம் ஏற்றுக் கொள்ளப்படுமோ என்னவோ, அதுவும் விளங்கவில்லை. அதற்கான முயற்சியில் மோடியின் ‘இந்துத்தன’ அரசு ஈடுபட்டாலும் வியப்படைவதற்கில்லை.
  ஐ.நா-வுக்கான இந்தியத் தூதர் சையது அக்ருபதீன் தனது சுட்டுரையில் (twitter), “ஐ.நா. பட்டயம் தற்பொழுது சமற்கிருத மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக அரும்பாடுபட்ட சிதேந்திரகுமார் திரிபாதிக்கு நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
  யார் இந்த சிதேந்திரகுமார் திரிபாதி? இலக்கினோவைச் சேர்ந்த அகில பாரதிய சமற்கிருத பரிசத்தின் செயலாளர் இவரே ஆவார்.
  அகில பாரதிய சமற்கிருதப் பரிசத்தின் செயலாளர் ஒருவரால் ஐ.நா மன்றத்தின் பட்டயத்தைச் சமற்கிருத மொழியில் மொழிபெயர்க்கச் செய்ய முடிந்திருக்கிறது. மோடி அரசின் பக்கத்துணை அவருக்கு இருந்திருக்கிறது.
  ஐ.நா-வுக்கான இந்தியத் தூதர் மேற்படி செய்தியைத் தனது சுட்டுரையில்(twitter) தெரிவித்திருப்பதோடு, ‘சமற்கிருதப் பரிசத்தின் செயலருக்கும்’ நன்றி தெரிவிக்கிறார் என்றால் என்ன பொருள்? மோடி அரசின் தூண்டுதலால் ஐ.நா-வுக்கான இந்தியத் தூதர் சமற்கிருத மொழியில் ஐ.நா பட்டய மொழிபெயர்ப்புக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் என்பது வெளிப்படை. சமற்கிருத வல்லாளுமை உலகளாவிய நிலையில் எந்த அளவுக்கு வலுப்பெற்றிருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  தமிழ்நாட்டுக் கோயில்களுக்குள்ளும் திருமண மேடைகளுக்குள்ளும்தாம் சமற்கிருதம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. அதை எதிர்த்துத்தான் திராவிட இயக்கங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில் சமற்கிருத மொழி வளர்ச்சிக்காக மைய அரசு செய்து வரும் செயல்கள் பற்பலவாம். இந்தியாவின் 325 பல்கலைக் கழகங்களிலும் சமற்கிருதத்துக்கெனவே தனித்துறைகள் இயங்குகின்றன. இந்தியாவுக்குள் சமற்கிருதத்துக்கெனப் பத்து அமைப்புகள்(samasthan) உருவாக்கப்பட்டு மைய அரசுச் சார்பில் ஏராளமான நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 23 நிகர்நிலைப் பள்ளிகள் சமற்கிருதத்திற்கென மட்டும் இயங்குகின்றன.
  இவை போதாவென, மத்திய அரசின் நிறுவனமான பள்ளிக் கல்வி நடுவண் வாரியத்தின் (CBSE) இயக்குநர் சார்பில் நான்கு பக்கச் சுற்றறிக்கை ஒன்று பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆகத்து மாதம் இரண்டாவது கிழமையை (week) ‘சமற்கிருதக் கிழமை’யாகக் கொண்டாட வேண்டும் என்று கடந்த சூன் மாதம் 30ஆம் நாள் அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையில், “சமற்கிருதத்தைக் கற்பிக்கவும் பயிற்றுவிக்கவும் ப.க.ந.வா உறுதி பூண்டுள்ளது. இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர் சமற்கிருதம்தான். மாணவர்களிடையே சமற்கிருதம் பற்றிய விழிப்புணர்ச்சியை வலுப்படுத்திட முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கலைஞர் கருணாநிதி, முரசொலி (22-7-2014) இதழில் வன்மையாகக் கண்டித்து மடல் தீட்டியுள்ளார்.
  உத்திரப் பிரதேச மாநிலம், இலக்கினோவில் ‘மகாபியான்’ என்னும் திட்டத்தின் தொடக்க விழாவில் உள்துறை அமைச்சர் இராசநாத(சிங்கு) கலந்து கொண்டுள்ளார். மகாபியான் என்பது அனைத்து இல்லங்களுக்கும் சமற்கிருத மொழியைக் கொண்டு சேர்ப்பதற்கான திட்டம் ஆகும். அவ்விழாவில் பேசிய இராசநாத(சிங்கு) “அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் மீயுயர் கணினியை (Super Computer) வடிவமைத்தனர். அப்பொழுது அந்தக் கணினியின் பயன்பாட்டுக்குச் சமற்கிருத மொழி மிகவும் ஏற்புடையது என நாசா அறிவியலாளர்கள் தெரிவித்தனர்” என்று கதை விட்டுள்ளார்; நாசா அறிவியலாளர்களே சமற்கிருதத்தின் பெருமையை ஒப்புக் கொண்டு விட்டார்களாம், மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகிறார். அது ஐ.நா மன்றம் வரை சமற்கிருதத்தைத் தூக்கிக் கொண்டு போய் நிறுத்துகிறது. இன்று ஐ.நா. பட்டயம் சமற்கிருத மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யப்படும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
  சமற்கிருதத்திற்கு அந்தத் தகுதி இருக்கிறதா? பேச்சு வழக்கில் இல்லாத – செத்துப் போன – ஒரு மொழிக்குக் கிடைத்துள்ள ஏற்புடைமையை என்னவெனச் சொல்வது?
 சமற்கிருத வல்லாளுமையை எதிர்த்துக் கி.வீரமணி தலைமையில் மானமுள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம், முழக்கம் செய்தாலும், ‘தென்மொழி’ இயக்கம் சார்பில் தமிழ் அரிமா பூங்குன்றன் தலைமையில் சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத்தி முழங்கினாலும் மோடி அரசின் காதில் இவை விழ மாட்டா. இந்துத்தன மாயையில் சிக்கி உள்ள மத்திய அரசின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்; சமற்கிருதத்தைத் தூக்கித்தான் பிடிக்கும். அந்த மாயையிலிருந்து விடுபடப் பெரியார் வழியில் சூளுரை மேற்கொள்வோம்! அண்ணா, கலைஞரின் வழித்தடத்தில் வீறு கொண்டு எழுவோம்! சமற்கிருத வல்லாண்மையை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்போம்!
பேரா.முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன்
 தமிழாலயம்,
குமுக இலக்கிய இருமாத இதழ் | மார்ச்சு-ஏப்பிரல் 2017.
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்