செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்




தமிழின் தனிப்பெருந் தன்மைகள்

  1. தூய்மை
    தமிழ் குமரிநாட்டில் தானே தோன்றி வளர்ந்த தனிமொழியாதலாலும், அதை நுண்ணறிவு மிக்க பொதுமக்களும் புலமக்களும் பண்படுத்தி வளர்த்தமையாலும், நீராவியையும் மின்னியத்தையும் துணைக் கொள்ளாத எல்லாக் கலைகளையும் அறிவியல்களையும் பண்டைத் தமிழரே கண்டறிந்துவிட்டமையாலும், ஆயிரக்கணக்கான உலக வழக்குச் சொற்களும் நூல் வழக்குச் சொற்களும் இறந்துபட்ட இக்காலத்தும், எப்பொருள்பற்றியும், பழஞ்சொற் கொண்டும் புதுச்சொற் புனைந்தும், முழுத் தூய்மையாகப் பேசத் தமிழ் ஒன்றில்தான் இயலும். இவ் வுண்மையை அறிந்தே, தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவுஞ் செய்யும்   என்று கூறினார் கால்டுவெலார்.
  செந்தமிழ்ச் சொல்வளத்தைக் காண, ஒரு பருக்கைப் பதமாக நிலைத்திணைச் சொற்களை நோக்கினும் போதும். குமரிநாட்டுத் தமிழ்ப் பொதுமக்கள், இலைகளை நால்வகையாக வகுத்து, வேம்பும் வாழையும் போல மெல்லிதாயிருப்பதை இலையென்றும். நெல்லும் புல்லும் போலத் தாளை (தண்டை)யொட்டி நீண்டு சுரசுரப்பாக விருப்பதைத் தாள் என்றும், சோளமுங் கரும்பும் போலப் பெருந்தாளாக நீண்டு தொங்குவதைத் தோகை யென்றும், தென்னையும் பனையும் போலத் திண்ணமா யிருப்பதை ஓலையென்றும் வழங்கினர்.
  பூ நிலைகளை ஐவகையாகக் கண்டு தோன்றிய நிலையில் அரும்பு என்றும், மலரத் தொடங்கிய நிலையிற் போது என்றும், மலர்ந்த நிலையில் மலர்  என்றும், உதிர்ந்து விழுந்த நிலையில் வீ யென்றும், வாடிச் சிவந்த நிலையிற் செம்மல்  என்றும், சொல்லினர்; காய்நிலைகளை நால்வகையாகக் கண்டு, தோன்றிய நிலையிற் பிஞ்சு என்றும், சற்றுப்  பருத்த நிலையிற் பிருக்கு என்றும், முற்றும் பருத்த நிலையிற் காய் என்றும், பழுத்த நிலையிற் பழம் (மஞ்சள் நிறமானது) அல்லது கனி (கனிவாயிருப்பது) என்றும், பெயரிட்டனர். இனி, பிஞ்சு நிலையிலும் வாழைக்குக் கச்சல் என்றும், மாவிற்கு வடு என்றும், பலாவிற்கு மூசு என்றும், தென்னை பனைக்குக் குரும்பை என்றும், பிறவற்றிற்குப் பிறவாறும், சிறப்புப் பெயர் குறித்தனர்.
    ஆங்கிலம் இலக்கக்கணக்கான சொற்களைக் கொண்டிருந்தும், ஏறத்தாழ எல்லா மொழிகளினின்றுங் கடன் கொண்டும், காயைப் பழுக்காத பழம் என்று குறிப்பதும், வெயிலையும் நிலவையுங் குறிக்கத் தனிச் சொல் இல்லாதிருப்பதும், இங்குக் கவனிக்கத்தக்கது.
    தமிழின் இயல்பை யறியாத சிலர், ஆங்கிலம் போல் தமிழையுங் கருதிக்கொண்டு, ஒரு மொழி பிற மொழியினின்று கடன் கொண்டால்தான் வளர முடியுமென்றும், மொழித் தூய்மை யென்பது பொருளற்ற மொழிவெறி யென்றும், கூறுவர். காலதர், சாளரம், பலகணி என முச்சொல் லிருக்கவும், சன்னல் என்னும் போர்த்துக்கீசியச் சொல்லை வேண்டாது வழங்கியதால், அம் முச்சொல்லும் வழக்கற்றுப் போய்த் தமிழ் வறுமை யடைந்துள்ளமை காண்க. “தமிழர்க்குள்ள பெருமையெல்லாம் அவர் தொன்றுதொட்டுத் தூய்தாக வழங்கி வருந் தமிழ்மொழியினையே சார்ந்திருக்கின்றது” என்று, மறைமலையடிகளார் கூறியிருப்பதை இனிமேலாயினுங் கருத்தாய்க் கவனிக்க.
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் :
  செந்தமிழ்ச் சிறப்பு
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக