மன்பதைக்குப் பயன்படக்கூடிய
இலக்கை வரையறுத்துக் கொள்ளுங்கள்!
மாவட்டக் கல்வி அதிகாரி அறிவுரை
தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘கவிதை சொல்லுதல்’ போட்டியில்
கலந்து கொண்ட தேவகோட்டை மாவட்டக் கல்வி அதிகாரி மாணவர்களிடம்
மன்பதைக்குப் பயன்படக்கூடிய இலக்கை வரையறுத்துக் கொள்ளுங்கள் எனப்
பேசினார்.
கவிதை சொல்லுதல் போட்டிக்கு வந்தவர்களை மாணவர் சீவா வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசும்போது, நமது வாழ்க்கை,
மன்பதைக்குப் பயன்படக்கூடிய வகையில் இலட்சியத்தோடு இலக்கை நோக்கிக்
குறிக்கோள் கொண்டு செல்ல கூடியதாக இருக்க வேண்டும்.
மணி அடிப்பதற்காகப் பள்ளிக்குச் செல்லக் கூடாது. மணி அடிப்பது திட்டத்திற்கான நேரச் செயலபாடு. அவ்வாறு இயங்கக் கூடாது. நம்முடைய இயக்கமானது தடையில்லாத இயக்கமாக இருக்க வேண்டும். திருவள்ளுவர், பாரதியார், காந்தி போன்றோர் தங்களுக்கு என்று முத்திரை பதித்தனர். அது போல் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் முத்திரை பதிக்க இலக்கை வகுத்து கொள்ள வேண்டும். கலாம்
வாழ்க்கையின் மூலமாகப் பல நல்ல தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
பாரதியார் “காலை எழுந்ததும் படிப்பு” எனப் பாடியுளார். அதற்குக் காரணம் அதி
காலையில் நமது மனம் மிகவும் விரைவாகச் செயல்படும். அந்த நேரத்தில் நாம்
படித்தால் நமது மனத்தில் அனைத்து விவரங்களும் நன்றாக நிற்கும். முதியோர் இல்லங்களுக்கு எந்தக் காலத்திலும் பெற்றோர்களை நன்கொடையாகக் கொடுக்காதீர்கள்!
எதை வேண்டுமானாலும் நன்கொடையாகக் கொடுங்கள். ஆனால் பெற்றோர்களை முதியோர்
இல்லத்துக்கு அனுப்பாதீர்கள். பெற்ற தாய் தந்தையரைப் பேணிக் காக்க
வேண்டும்.இவ்வாறு பேசினார்.
கவிதை சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் முத்தையன், ஆகாசுகுமார், அம்மு சிரீ, சனசிரீ, கிருத்திகா, மாதரசி, இராசேசு, பார்கவி இலலிதா ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கினார்.
நிறைவாக மாணவர் விசய் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக