திங்கள், 29 ஆகஸ்ட், 2016

15 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு




தலைப்பு-15ஆவதுஉலகத்தமிழ் இணைய மாநாடு : thalaippu_uthamam_15aavadhumaanaadu

15 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு

   “உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்” – “உத்தமம்” எனும் பெயரில் இயங்கி வருகிறது. 1997 ஆமாவது ஆண்டில் திரு. கோவிந்தசாமி அவர்களின் முழு முயற்சியில் வித்திடப்பட்டு 2000 ஆமாவது ஆண்டில் திரு. சுசாதா, திரு. தமிழ்க்குடிமகன், பேராசிரியர் அனந்தகிருட்டிணன் ஆகியோரின் அன்பு வழியில்இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பா முதலான பல நாடுகளில் “உத்தமம்” அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளில் தொடர்ந்து தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது “உத்தமம்” அமைப்பு. இதுவரை பதினான்கு உலகத்தமிழ் இணைய மாநாடுகளை “உத்தமம்” பல்வேறு நாடுகளில் நடத்தியுள்ளது. ஒவ்வொரு மாநாடும் பல தமிழ் ஆசிரியர்களுக்கும் கணிணித் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும் தங்களது வளர்ச்சிக்கு பல வழியிலும் வழி வகுத்தது.
  இப்பயணத்தின் தொடர்ச்சியாக வரும் ஆவணி 24 – 26, 2047 / செட்டம்பர் 9,10,11 ஆகிய நாட்களில் தமிழகத்தின் “காந்திகிராமியப் பல்கலைக் கழகத்தில் ” 15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. அதன் கருப்பொருள் கணிணியெங்கும் தமிழ், கணிணியெதிலும் தமிழ்’’ என்பதாகும். கணினி வழி தமிழ் பல வகையிலும் வளர வேண்டும் எனும் எண்ணத்தோடு இம்மாநாட்டின் இக்கருப்பொருளைக் கொண்டோம். இம்முயற்சி உங்களது தொடர்ந்த முயற்சியோடு பெருகவேண்டும்! வளரவேண்டும்! உலகளாவிய நிலையில் பெருமை பெறவேண்டும்.
  இம்மாநாடு ஆய்வு அரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் என மூன்று பிரிவுகளாக செயல்படஉள்ளது. தமிழை பல கோணங்களில் காணும் முயற்சி இது! அன்புடையீர், வருகை தாருங்கள்! நம் தமிழை வளர்ப்போம்! தமிழர்களாகிய நாம் இவ்வழியில் வளர்வோம்!
ஆய்வு அரங்கம்
  இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் திரு. ஏ. சி..இராமகிருட்டிணன் ஆய்வுக்குழுத் தலைவராக இருந்து இம்மாநாட்டை வழி நடத்தி வருகிறார். இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் திரு. சுரேசு சுந்தரம், ஐதராபாத்து பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. நாராயணமூர்த்தி,  சென்னை சி.சு.நா.பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் திரு. நாகராசன் ஆகியோர் ஆய்வுக்குழுவின் அங்கத்தினராக உள்ளனர்.
மக்கள் அரங்கம்
  15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டின் ஓர் அங்கமாகச் செல்பேசிச் செயலிகளை உருவாக்குதல், இயந்திரக் கற்றல், கட்டற்ற மென்பொருள்கள் ஆகிய தொழில்நுட்பங்களில் இலவசப் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் அதில் கலந்து கொள்ளலாம்.
கண்காட்சி அரங்கம்
  மக்கள் அரங்கையும், கண்காட்சி அரங்கையும் ஒரே இடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. புதிய தொழில்முனைவோர் தங்கள் மென்பொருட்கள் சார்ந்த அம்சங்களை மக்களிடையே பரப்ப இதுவொரு பொன்னான வாய்ப்பு. கண்காட்சி அரங்கில் பங்கேற்கப் பல நிறுவனங்கள் இசைந்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
  வளர்ந்து வரும் நவீன உலகில் “தமிழ்க்கணிமை” தனித்துவமாக ஒளிரவும், மிளிரவும் இது போன்ற முயற்சிகள் அவசியம். அவற்றுக்கு முன்னின்று ஏற்பாடு செய்யும் “உத்தமம்” அமைப்புக்கு உங்கள் பங்களிப்பும், ஆதரவும் என்றென்றும் தேவை.
  தமிழ் வளர! தமிழர்கள் வளர! இம்முயற்சிக்குத் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்! நாம் அனைவரும் இணைந்து இணையம் வழித் தமிழையும் தமிழர்களையும் வளர்க்க முனைவோம்!
  தொடர்ந்து இணைந்திருங்கள்! தொடர்ந்து வளரட்டும் நம் தமிழ்! கணினி வழி! இணையம் வழி!வளர்பிறை போல வழிவழிப் பெருகி வளர்ந்து வரும் இந்நிறுவனம் என்றென்றும் முழு நிலவாக இயங்க வேண்டும். மலர் இலகின! வளர் பரிதியின் ஒளி மணி மார்பை மிளிரச் செய்தது! தமிழ் மணி மிளிர வேண்டும்! தமிழ் இணைய நிறுவனம் ஒளிர வேண்டும்! இணைவோம்! இணைப்போம் அனைத்துத் தமிழர்களையும்!தமிழகத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் இணையம் வழி இணைவோம் இணையத் தமிழ் மாநாட்டில்!
இனிய நேரு
தலைவர்
உத்தமம்

தளம் Home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக