செருமனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசு பள்ளிகளே!
தங்க நகையே அணியாத நாடு செருமன்!
வாழ்க்கையில் கல்விதான் நண்பன்!
  “வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்” எனச் செருமனியிலிருந்து வந்திருந்த பெண் ஆராய்ச்சியாளர் சுபாசினி திரெம்மல் பேசினார்.
  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.
  விழாவில் செருமனி தமிழ் மரபு அறக் கட்டளைச் செயலரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான மலேசியாவைச் சார்ந்த சுபாசுனி திரெம்மல் மாணவர்களிடையே பேசுகையில், “தமிழகத்திற்கு ஒரு முறை வந்தபோது, கல்வெட்டுகளில் கிறுக்கல்கள் இருந்தன. அதில் உள்ளதைப் படிக்க முயன்றபோது கல்வெட்டு ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது. செருமனியில் இலத்தீன் மொழியில் கல்வெட்டுகள் உள்ளன. அங்குள்ள பாடப்புத்தகங்கள் பெரிய அளவில், பெரிய படங்களுடன் உள்ளன. செருமனியில் எல்லாப்பள்ளிகளும் அரசு பள்ளிகள்தான். ஆங்கிலம் வந்ததற்குச் செருமன் மொழிதான் காரணம். பள்ளிகளில் வகுப்புகள் 1 ஆம் வகுப்பு, 2 ஆம் வகுப்பு, 3 ஆம் வகுப்பு, 4 ஆம் வகுப்பு எனவும், பிறகு விரும்பிய பாடங்களை படிக்கும் வண்ணமும் இருக்கும். 5ஆம் வகுப்புக்கு இரண்டாவது மொழியாக இத்தாலி, இலத்தீன் எதையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
  பிறகு “செருமனியில் கோடைக்காலம், இளவேனில்(வசந்த) காலம், குளிர் காலம், இலையுதிர் காலம் என நான்கு பருவக்காலங்கள் உள்ளன. செருமனியில் கோதுமை, கம்பு, சோளம், கடுகு முதலியன மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. கடுகில் இருந்து எண்ணெய், எரிவளி ஆக்கப்படுகின்றன. அங்கு 800 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழமையான கீல்சு பல்கலைகழகம் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த திரையர் என்ற பழமையான தேவாலயம் உள்ளது” என்றார்.
  இவ்வுரையைக் கேட்டதும் மாணவ ,மாணவிகளுக்குச செருமனிக்குச் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. தமிழகத்திற்கு இது வரை 16 முறை வந்துள்ளதாகத் தெரிவித்தார்; தமிழகத்தில் மிகவும் பிடித்த இடம் திருவண்ணாமலை அருகே சமணக்கோவில் உள்ள திருமலை என்கிற இடம்தான்; செருமனியில் பிடித்த இடம் பெருலின்   என்று கூறினார். தாய் மொழியால் மட்டுமே அனைவரும் நல்ல நிலைமைக்கு வர இயலும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
   “கல்வி கற்பது வாழ்வில் இன்றியமையாதது. கல்வி கற்பதன் மூலம் பல வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு வழி பிறக்கும். சிறந்த கல்வியாளர்களாக வர வேண்டும். வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கல்விதான் சிறந்த உற்ற நண்பனாக இருக்க முடியும்.
  வீதிகளில் பல இடங்களிலும் பார்க்கும் போது ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. குப்பைகளைக் கொட்டக் கூடாது. அதற்கான இடங்களில் கொட்ட வேண்டும். யாரேனும் குப்பையைக் கொட்டினால் அதைஎடுத்துத் தொட்டியில் போடவேண்டும். குப்பைகளைக் கண்ட இடங்களில் போட்டால் ஏற்படும் கெடுதல்களைப்பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இளம் அகவையிலேயே கீரை போன்ற சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்” என்றார்.
  தனலெட்சுமி, பரமேசுவரி, சௌமியா, சந்தியா, காயத்திரி, முனீசுவரன், செகதீசுவரன், ஐயப்பன் முதலான பல மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு விடையளித்தார்.
 விழாவில் ஆயுள்காப்புறுதிக்கழகக், கோட்ட மேலாளர் வினைதீர்த்தான், மணலூர் அழகு மலர் பள்ளித் தாளாளர் (இ)யோகலட்சுமி, திருச்சி கடல் ஆராய்ச்சி மாணவர் அப்துல்இரகுமான் பேசினர். ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
-இலெ .சொக்கலிங்கம்
09786113160