kizhakkuthamizheezham-aayvaalar kizhakkuthamizheezham-kinaru02 kizhakkuthamizheezham-kinaru03

வந்தாறுமூலை பிள்ளையார் கோவிலில்

கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட

கிணறு, நாகக்கல் கண்டுபிடிப்பு

  மட்டக்களப்பு, வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு, நாகக்கல் ஆகியன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
  வரலாற்றுதுறைப் பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன், தொல்லியல் ஆய்வுக்குழுவினர் ஆகியோர் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயக் காணியினுள் மேற்கொண்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் அமைக்கப்பட்ட கிணறு, கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக் கல் என்பன கண்டுபிடிக்கபட்டன.
  இதுபற்றிப் பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகையில்,
  இலங்கையின் பூர்வீகக் குடியினராகக் காணப்பட்ட தமிழர் மூதாதையரான ஆதி இரும்பு காலத்துப் பெருங்கற்காலப் பண்பாட்டு நாக மரபினர், தென்னிந்தியாவின் சோழ மண்டலக் கடற்கரையிலுள்ள காவிரிப் பூம்பட்டினம் போன்ற துறைமுகப் பட்டினம் மூலமாக மட்டக்களப்பு தேசத்திற்கு கடல் வழியாகக் குடியேறினர்.
  இவ்வாறு கடல் வழி வந்த ஆதி இரும்பு காலத்துப் பெருங்கற்காலப் பண்பாட்டு நாக மரபினர், ஆற்று வழியாகவும், தரைவழியாகவும் தங்களது குடியேற்றங்களையும் குறுநில அரசுக்களையும் நதிக்கரைக்கு அண்மையில் உள்ள உயர்வான இடங்களிலும், மலைச்சாரல்களிலும், காடுகளை எல்லைகளாக கொண்ட பகுதிகளிலும், வில்லு புல் நிலங்களிலும், வெட்டவெளி, சமவெளி நிலங்களிலும் நிறுவினர்.
  வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையாரடியில் நாகரால் நிறுவப்பட்ட குறுநில அரசானது கடல்வழி, ஆற்றுவழி, தரைவழி என்பவற்றோடு தொடர்வுடையதாகவும் காடுகளை எல்லையாகவும் சமவெளி நிலமாகவும் காணப்பட்டுள்ளது.
  இங்கே கண்டுபிடிக்கபட்ட கிணறானது 3அடி x 3அடி பரப்பளவுடைய சதுரவடிவத்தில் 20அடி ஆழமுடைய கருங்கல் தூணினால் அமைக்கப்பட்டுள்ளது.
   தூணில் ‘வேள் நாகன்’ என்று தமிழ் பிராமி வரி வடிவம் காணப்படுகின்றது. 3அடி உயரமும் 2அடி அகலமுடைய நாகக் கல் காணப்படுகின்றது.
 இதில் மணி நாகன் என்று தமிழ் பிராமி வரி வடிவம் காணப்படுகின்றது. கிணறுகள் மூலமாக நீரினை பெற்று பயன்படுத்தும் முறையுனையும் தோட்டப் பயிர் செய்கையினையும் இங்கு குடியேறிய நாக மரபினர் உருவாக்கினர்.
இவ்விடம் நாகர்களின் வழிபாட்டுத் தலமாக காணப்பட்டதோடு கருங்கல் தூணினால் ஆலயத்தை அமைத்துள்ளனர். ஆனால் பிற்காலத்தில் ஆலயத்தில் உள்ள தூண்களை எடுத்து மக்கள் இளைப்பாறும் அம்பலம் ஒன்று ஆலயத்திற்கு அண்மையில் அமைத்துள்ளனர்.
ஆனால் அம்பலத்தின் எச்சம் மட்டும் தற்போது காணப்படுகிறது. இங்கே கண்டுபிடிக்கபட்ட சான்றுகள் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவானவை எனவும் நாகரின் குறுநில அரசு மண்டிலமாகவும் காணப்பட்டுள்ளது எனவும் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டார்.
-தொல்காப்பியன் பொற்கோ