படைப்பிலக்கியங்களால் மட்டுமே குழந்தைகளின்
மன உலகை மாற்றிட முடியும்!
குழந்தைகள் கதை நூல்
வெளியீட்டு விழாவில் பேச்சு
அகநி வெளியீட்டகத்தின் சார்பில்
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு
விழா நடைபெற்றது. இவ்விழாவில், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில்
கணிப்பொறிமுன்னே அமர்ந்திருக்கும் குழந்தைகளின் மன உலகைப்
படைப்பிலக்கியங்களால்தான் மாற்றிட முடியும் என்று நூலாசிரியர் கவிஞர்
மு.முருகேசு பேசினார்.
இவ்விழாவிற்கு இராமலிங்கம் குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மு.சீவா அனைவரையும் வரவேற்றார்.
கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘படித்துப் பழகு‘
குழந்தைகள் கதை நூலை வந்தவாசி ஒன்றியக்குழு உறுப்பினர்
எம்.எசு.தரணிவேந்தன் வெளியிட, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர்
அ.மு.உசேன் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் படிகளை ந.சுரேசுமுருகன்,
இலயா அறக்கட்டளைச் செயலர் மா.யுவராசு, வெ.அரிகிருட்டிணன் ஆகியோர் பெற்றுக்
கொண்டனர்.
நூலை வெளியிட்ட எம்.எசு.தரணிவேந்தன்
பேசும்போது, குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வதாக நினைத்து, அவர்களிடம்
பெற்றோர்கள் எதையும் நாம் திணிக்கக் கூடாது. குழந்தைகளோடு அன்பாகப் பேச
வேண்டும். அவர்களது எண்ணத்தைப் புரிந்துகொண்டு பேசினால் மட்டுமே குழந்தைகள்
நாம் சொல்வதைக் கேட்பார்கள். அப்படிக் குழந்தைகளை மென்மையாக அணுகுவதற்கு
மு.முருகேசு எழுதியுள்ள இந்தக் கதைப் புத்தகம் நமக்குப் பெரிதும் உதவியாக
அமைந்துள்ளது என்று பேசினார்.
விழாவிற்குத் தலைமையேற்ற
இரா.சிவக்குமார் பேசும் போது, குழந்தைகள் படிக்கிற மாதிரி எளிமையாகக் கதை
எழுதுவது மிகவும் கடினமானது. கடந்த 25 ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கான கல்விப்
பணியில் செயல்பட்டுவரும் மு.முருகேசு, குழந்தைகளின் மனவோட்டத்தை அழகாகப்
புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பிப் படிக்கும் சுவையோடு குழந்தைக் கதைகளை
எழுதியுள்ளார். இது நாளைய குழந்தைகளுக்கான நம்பிக்கை, புதுவரவு என்று
குறிப்பிட்டார்.
நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு
ஏற்புரையாற்றும்போது, குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள் என்பதை நாம்
முதலில் மனதார ஏற்க வேண்டும். இன்றைய தலைமுறை குழந்தைகள் தொலைக்காட்சிப்
பெட்டி முன்னும், கணிப்பொறி முன்னும் அமர்ந்து நிறைய நேரத்தைக்
கழிப்பதற்குக் காரணம், அவர்கள் எடுத்துப் படிக்கத் தூண்டும் வகையிலான எளிய
கதைப் புத்தகங்கள் தமிழில் மிகக் குறைவே. குழந்தைகளுக்குப் பிடித்தமான
மொழியில் நேரடியான அறிவுரை சொல்லாத படைப்பிலக்கியங்களால் குழந்தைகளின் மன
உலகை உறுதியாய் மாற்றிட முடியும் என்று கூறினார்.
நிறைவாக, மா.குமரன் நன்றி கூறினார்.
தரவு : முதுவை இதாயத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக