ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

தலைவாசல் கல்லைப் பாதுகாக்கும் மலைவாழ்மக்கள்

தலைவாசல் கல்லைப் பாதுகாக்கும் மலைவாழ்மக்கள்

seithy_thalaivaasal_vaigaianeesu+1
  தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பவை கல்வெட்டுகளே. பண்டைய தமிழ்நாட்டின் அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு இக்கல்வெட்டுகளே துணை புரிகின்றன. வரலாற்றின் பல்வேறு காலக் கட்டங்களின் நிலையைக் காட்டும் காலத்தின் கண்ணாடிகளாக இவை துணை புரிகின்றன. ஒரு வீட்டிற்கு எப்படி வாசல்படி முதன்மையோ அது போல மலைப்பகுதி ஊர்களில் தலைவாசல் கல் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மலைப் பகுதி ஊரிலும் நான்கு தலைவாசல் கல்கள் உள்ளன. ஒன்று நுழைவு வாயிலாகவும் மற்றொன்று இறப்பு போன்ற நிகழ்வுகள் நடந்தால் கொண்டு செல்வதற்கு முதன்மையான வாயிலாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. மற்ற இரண்டு வாயில்களையும் உணவுப்பொருட்கள், வேட்டைக்குச் செல்லும் வாயில்களாகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
  பண்டைய தமிழர்கள் போர்களத்திலும் சரி, உணவு உண்ண பயன்படுத்தப்பட்ட பொருள்களிலும் சரி தன்னுடைய வீரம், கொடை, ஈகை, போர்த்திறன், தன்னுடைய நாட்டின் சின்னம் பலவற்றையும் ஆங்காங்கே கல்வெட்டாகவும், கற்சிலையாகவும் படைத்துள்ளான். அந்த வகையில் கோயில் கொத்தளங்களிலும் ஊரின் நுழைவு வாயிலிலும் தலைவாசல் கல் என்ற கல்வைத்து அந்தக்கல்லில் போர்த்திறன், தன்னுடைய சின்னம் போன்றவற்றைப் பொறித்துள்ளான். மலைவாழ் மக்கள், தலைவாசல் கல்லைத் தூய்மையாக அன்று முதல் இன்று வரை பேணி வருகிறார்கள். மது அருந்தி வருபவர்களோ வீட்டிற்குத் தூரமாக இருக்கும் பெண்கள்,விலைமாதர்களிடம் சென்ற ஆண்களோ இந்தத் தலைவாசல் வழியாகச் செல்ல இசைவு கிடையாது. மேலும் வேட்டைக்குச் செல்லும்போது வேட்டையாட பயன்படுத்தப்படும் ஈட்டி, அம்பு போன்ற ஆயுதங்களைத், தலைவால் கல் முன்னே வைத்து வணங்கிவிட்டு வேட்டைக்குப் புறப்படுகிறார்கள். இன்றும் கூட கொடைக்கானல் மலைத்தொடரில் காட்டில் காவலுக்குச் செல்லும்போது தலைவாசல் கல்முன்னே ஆயுதங்களை வைத்து வணங்கிச் செல்வதை மரபாக வைத்துள்ளனர்.
ural,ammi,thiruvai_grinding_stones01
  ஆட்டுஉரல், அம்மி, குளவி, திருக்கை இவை அனைத்தும் பண்டைய காலத்தில் பெண்கள், படைவீரர்கள் பயன்படுத்திய முதன்மையான பொருள்களாகும். இன்று காலம் மாறி மின்னம்மி(மிக்சி), மின்னுரல்(கிரைண்டர்), எனப் படிநிலை வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் இருந்த இவ்வகைப்பொருட்களைக் கல்வெட்டுக்கள் மூலம் சில இடங்களில் அறிந்து கொள்ளலாம்.
  காலமாற்றத்தால் காணாமல் போன உரல் இன்றும் கண்ணாடியாகக் காட்சியளிக்கிறது. பண்டைய காலத்தில் உரல், உலக்கை, திருக்கை, ஆட்டுக்கல், செக்கு போன்றவற்றில் பல கொடைகள் பற்றியும், சீதனங்கள் பற்றியும் கல்வெட்டாகப் பொறித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் சேர மன்னனுக்கும் பாண்டியமன்னனுக்கும் நடந்த போரில் படைவீரர்களுக்கு உணவு சமைப்பதற்காக 100க்கும் மேற்பட்ட உரல்கள் கல்வெட்டுடன் இணைத்து வெட்டப்பட்டுள்ளன. இதே போலத் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சமணர்கள் மருந்து தயாரிப்பதற்கும் குருகுல மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்கும் உரல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 செக்கு கல்வெட்டு
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள கச்சிராயப்பன்பட்டியில் வட்டெழுத்துப் பொறித்த கி.பி.10 ஆம் நூற்றாண்டு கல்செக்கு ஒன்று கிடைத்துள்ளது. வழுதிவளநாட்டிலுள்ள மிழலூரினைச் சார்ந்த அப்பனூழன் என்பவன் ~பொற்கொடிவீரர்~ என்ற வீரர் குழுவின் பெயரால் இச்செக்கினைச் செய்வித்ததாக அதிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. வழுதிவளநாடு என்பது திருவைகுண்டம் வட்டச்தைச் சார்ந்த பழமையான உள்நாட்டுப்பிரிவாகும். இந்நாட்டில் இருந்த அப்பனூழன் பாண்டியநாட்டின் வடபகுதிக்கு வந்து இச்செக்கினை செய்துவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாண்டிநாட்டில் ~வீரக்கொடியார் பெயரில் வீரர் குழுவினர் இருந்திருக்கின்றனர். எனவே படைப்பிரிவில் ~கொடிவீரர்~ பிரிவு ஒன்று இருந்தமை இதன் மூலம் தெளிவாகிறது.
உரல் கல்வெட்டு
மதுரை மாவட்டம் கீழவளவிலுள்ள சமணப்பள்ளியில் சிரீகட்டி, காளந்அரட்டி உரலில், என்று பொறிக்கப்பட்ட கி.பி.9-10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன. இவை சமண முனிவர்கள் மருந்தினை இடிப்பதற்காகப் பயன்படுத்தியுள்ளார்கள்.
-வைகை அனீசு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக