பாரதியார் வாழ்ந்த வாரணாசி வீட்டை
விடுதலைப் போராட்ட நினைவகமாக
அறிவிக்க வலியுறுத்துவேன்! – தருண் விசய்
பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டுக்
கடந்த ஆவணி 26, / செப்.11 அன்று தில்லித்தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதியார்
உருவச்சிலைக்குத் தமிழார்வலரான உத்தரகண்டு நா.உ. தருண்விசய் மாலை
அணிவித்தார்.
“தமிழ் மொழிக்குத் தேசிய அளவில் முழுமையான
அறிந்தேற்பு கிடைக்க வேண்டும்.” என்று அவர் அப்பொழுது தெரிவித்தார்.
மேலும், பாரதியார் வசித்த வாரணாசி வீடு மத்திய, மாநில அரசுகளால்
கண்டுகொள்ளப் படாமல் இருப்பதை அறிய வந்ததாகத் தெரிவித்தார்.
“இரவீந்திரநாத்து தாகூர்போல், நாட்டு
ஒருமைப்பாட்டிற்காகக் கவிதைகள் எழுதியவர் பாரதியார். நாட்டில் விடுதலை
வேட்கையை ஏற்படுத்திய புரட்சிகரக் கவியாக விளங்கியவர் அவர். இன்னும் நமது
நெஞ்சங்களில் வாழ்கிறார். அவர் வாரணாசியில் இருந்த பொழுது வசித்த வீட்டை
விடுதலைப் போராட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்துவேன்” என்றும்
குறிப்பிட்டார்.
அவ்வாறு அறிவித்ததற்கிணங்க அடுத்த வாரம்,
மத்திய அரசின் சுற்றுலா- பண்பாட்டுத் துறையின் தனிப்பொறுப்பிலான இணை
அமைச்சர் சிரீபாட யசோ (நாய்)க்கை (Shripad Yasso Naik) நேரில் சந்தித்துப்
பேசினார். அவரிடம் இவ்வீட்டைத் தேசிய நினைவகமாக மாற்றுமாறு முறையீடு
அளித்துள்ளார். அவரும் விதிகளுக்கிணங்கக் கருதிப்பார்த்து ஆவன செய்வதாக
உறுதி அளித்துள்ளார். அவரைப் பாரதி வாழ்ந்த வீட்டிற்கு அழைத்துச்
செல்வதாகவும் கூறியுள்ளார். அப்பொழுது வாரணாசி தொகுதி நாடாளளுமன்ற
உறுப்பினரான பாசக தலைவர் அமீத்து சாவையும் உடன் அழைத்துச் செல்வதாகக்
குறிப்பிட்டுள்ளார்.
பாரதியாரின் தந்தை இறந்த பிறகு(1898
சூன்) அவரை, அவரது அத்தை உருக்மணி அம்மாள் என்னும் குப்பம்மாள், தான்
வாழும் வாரணாசிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்; அங்கே கங்கையாற்றங்கரையில்
உள்ள கேதார்காட்டுப் பகுதியில் உள்ள வீட்டில்தான் 6 ஆண்டுகள் வாழ்ந்தார்.
இங்கே பாரதியார் இருக்கும் பொழுதுதான் விடுதலைப் போராட்ட உணர்விற்கு
ஆட்பட்டார். இந்த வீடு இப்பொழுது சிவமடம் என்ற பெயரில் உள்ளது. இதனுள்
சித்தேசுவரர் கோயில் உள்ளது. இந்த வீட்டில் இப்பொழுது பாரதியாரின்
அத்தையின் மகள் வழிப் பேரனான கே.வி.கிருட்டிணன் என்னும் 88 அகவை முதியவர்
உள்ளார்.
காசியிலேயே பிறந்து வளர்ந்தவரான அவர்,
காசி இந்துப் பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். பாரதியின் கவிதைகளை
இந்தியில் மொழிபெயர்த்தவர். வீட்டிற்கு அருகிலேயே சாலையோரப் பூங்காவில்
பாரதி சிலை அமைத்தவர்.
பாரதியார் இங்கிருந்த பொழுது அத்தை கணவர்
கிருட்டிணசிவன் தவைராக இருந்து நடத்திய இடம்தான் சிவ மடம். இங்குதான்
பாரதியார் முதலில் தன் குடுமி எடுத்த தலையை மறைக்க அத்தையால் முண்டாசு
கட்டி அழைத்து வரப் பெற்றார். எனவே, பாரதியார் உண்மையில் வாழ்ந்த வீடு
வேறு. அப்பொழுது வந்து சென்ற இடம்தான் சிவ மடம் எனப்படுகிறது. இது
குறித்தும் ஆராய வேண்டும். எனினும் பாரதியின் வாழ்வோடு தொடர்புடைய அவரது
நினைவைப் போற்றும் இடமாகச் சிவமடம் உள்ளது.
தொடர்ந்து தமிழுக்காகத்தமிழக அரசியல் கட்சிகளைவிட முனைப்பாகக் குரல் கொடுக்கும் தமிழார்வலர் தருண்விசய்க்குப் பாராட்டுகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக