நாள் வைகாசி 16, 2045, மே 30, 2014 பக்கம் 16
“தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடந்ததைக் கேள்விப்பட்டோம். தமிழ்க்காப்புக்கழகம், மாநிலக்
கல்லூரித் தமிழ்த்துறையுடனும் பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து இந்த
நிகழ்ச்சியை நடத்தி யிருந்தது. இது குறித்து மேலும் அறியத்
தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனைச் சந்தித்தோம்.
அப்பொழுதுதான் இது சாதாரணமான கூட்டம் அல்ல! அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது
எனப் புரிந்து கொண்டோம். அவரிடம் பேசிய விவரம் வருமாறு:
தமிழுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு எதற்கு? தமிழில் கலந்து எழுதவா?
தமிழில் பிற மொழி எழுத்துகள்
பயன்படுத்துவதை அடியோடு தடுக்க வேண்டும். எனவே, அது பற்றிக் கூறவில்லை.
தமிழ்ப் பெயர்ச் சொற்களைப் பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் எவ்வாறு
எழுத வேண்டும் என்பது பற்றிய ஒலி பெயர்ப்பு முறை பற்றித்தான் கூறுகிறோம்.
எடுத்துக் காட்டாக, நாம் தமிழ் என்பதை ஆங்கிலத்தில் டமில்/tamil என்றுதானே
கூறுகிறோம். அவ்வாறில்லாமல் தமிழ் என்னும் ஒலிப்பை உணர்த்தும் ல ளழ, ணநன,
ரற வேறுபாடுகளை உணர்த்தும் வகையில் பயன்படுத்த வேண்டும். அதே நேரம் ஒவ்வொரு
பேச்சொலிக்கும் ஒவ்வொரு வரிவடிவத்தை அறிமுகப்படுத்தித் தமிழைச்
சிதைக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.
இப்பொழுது ஒலி பெயர்ப்பு முறை நடைமுறையில் உள்ளது அல்லவா?
ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து
தமிழைக்கற்று நூல்கள் எழுதத் தொடங்கிய பொழுது ஆங்கில ஒலிபெயர்ப்பு முறையைத்
தெரிவித்துள்ளனர். இதில் அறிஞர் போப்பு அவர்களின் ஒலி பெயர்ப்பு முறை
சிறந்தது எனக் கூறி அதனைத் தழுவிப் பேராசிரியர் சி.இலக்குவனார், தம்முடைய
தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்பில் பயன்படுத்தினார். அதற்கும்
முன்னதாகவே, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேகராதியில் ஒலி பெயர்ப்பு
முறை குறிக்கப் பெற்றுப் பலராலும் பயன்படுத்தப்படுகின்றது.
இவற்றில் என்ன சிக்கல் உள்ளது?
இவை மட்டுமல்ல. மேலும், பல ஒலி பெயர்ப்பு
முறைகள் மொழிபெயர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. ஆனால்,
ஆளாளுக்கு ஒவ்வொரு முறையைப் பயன்படுத்துவது என்பது குழப்பத்தைத்தான்
ஏற்படுத்துகின்றது. எனவே, தரப்படுத்தப்பட்ட ஒரே முறைதான் நடைமுறையில்
இருக்க வேண்டும்.
எப்படி எழுத வேண்டும் என்று சொல்கிறார்கள்?
ஆழாக்கு என்னும் சொல்லை ‘azhaakku’ என்று
நெடில் ஓசையுடனும் தமிழுக்கரிய சிறப்பு ழகரத்தை வேறுபடுத்தியும்
எழுதுவதுதான் மரபு. ஆனால், இவர்கள் ‘alakku’ என்று குறிக்க வேண்டும்
என்கிறார்கள். இவ்வாறு தமிழ் எழுத்தொலிகளைப் புறக்கணிக்கிறார்கள். அதே
நேரம் தேவையற்ற பேச்சொலிகளுக்கு முதன்மை அளிக்கிறார்கள்.
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், திடீரென்று இது பற்றி இப்பொழுது பேசுவது ஏன்?
கணிணியில் உலகெங்கும் ஒவ்வொரு மொழியிலும்
சீரான எழுத்துருவை அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கிப் பயனிற்குக்
கொண்டுவருவதற்காகச் சீருரு கூட்டாயம் (Unicode consortium) என்னும் அமைப்பு
உள்ளது. சீருரு என்பதை ஒருங்குகுறி என்றும் சிலர் சொல்கின்றனர். இந்த
அமைப்பில் தமிழ்ப்பின்னங்களைக் கணிணியில் ஏற்றுவதற்கும் அவற்றை எவ்வாறு ஒலி
பெயர்ப்பில் குறிக்க வேண்டும் என்பதற்கும் முனைவர் கணேசன், முனைவர் இரமணர்
என இருவர் முன் மொழிவுகளைதீர்மானங்களைஅளித்துள்ளனர். இது குறித்துத்
தமிழ்நாடு இணையக் கல்விக்கழகமும் தன் கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
எனினும் தமிழறிஞர்களைக் கலந்து பேசி முடிவெடுக்குமாறு சீருரு கூட்டாயம்
கேட்டுக் கொண்டது. அதன்படி இணையக் கல்விக்கழகம் ஒரு கூட்டத்தை நடத்தியது.
கூட்டத்தில் என்ன நடந்தது!
இக்கூட்டம் தமிழறிஞர்களைக் கொண்டு நடத்த
ஏற்பாடு செய்யப்படவில்லை. தொழில் நுட்பர்களையும் தொழில் நுட்ப
வல்லுநர்களையும் கொண்ட உத்தமம் அமைப்பினரைக் கொண்டு நடத்தப்பட்டது.
தமிழறிஞர் யாரையும் அழைக்காமல், சமசுகிருத அறிஞரை மட்டும் அழைத்து நடத்த
ஏற்பாடு செய்தனர். இதிலிருந்தே தமிழைப் புறக்கணிக்கும் இவ்வமைப்பின் போக்கு
நன்கு தெரிகிறது. உடனடியாக எதிர்ப்பைத் தெரிவித்தோம். பின்வருமாறு
அரசிற்கு, தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியவற்றின்
சார்பில் மடல் அனுப்பினோன்.
அரசு என்ன செய்தது?
தகவல் தொழில்நுட்பத்துறைச்செயலர் இணையக்
கல்விக்கழக இயக்குநரைக் கூப்பிட்டு விசாரித்தார். கூட்டம் நடத்துவதற்கான
ஏற்பாடுகள் நடந்து விட்டமையால், கூட்டம் நடக்கட்டும் என்றும் அரசிற்குத்
தீர்மானம் வரும் பொழுது அரசு தக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அரசு
முடிவெடுத்தது.
இதனால் ஏதும் பயன் விளைந்ததா?
தமிழறிஞர்கள் கருத்திற்கு இணங்கவே
முடிவெடுக்க வேண்டும் என்பதை அக் கூட்டத்தின் தலைவரான முனைவர் பொன்னவைக்கோ
ஆதரித்தார். எனவே, ஒரு குழுவை அமைத்து ஆவன செய்யப்படும் என்றார். ஆனால்,
மாலையில் நடைபெற்றக் கலந்துரையாடலில் மீண்டும் அவர்கள் தெரிவித்தவாறான
தவறான ஒலி பெயர்ப்பு முறையைப் பரிந்துரைத்துப் பேசினர். காலையில் குழு
அமைப்பதாகக் கூறிவிட்டு, இப்பொழுது ஏன், இவ்வாறு பேச வேண்டும் என்றும்,
கசம், சிரஞ்சீவி முதலான அயல்மொழிச் சொற்களுக்கு எல்லாம் எதற்கு முதன்மை
அளிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தேன்.
இவ்வாறு இந்த அமைப்பினர்மட்டும்தான் ஒலிபெயர்ப்பு முறையில் தமிழுக்குக் கேடு செய்கின்றனரா?
இல்லை. ஒரு பிரிவினர், தேவாரத்தைத் தமிழ் படிக்க அறியாதார் உரியவாறு பாடம் வேண்டும் எனக்கூறி 100 ஒலிபெயர்ப்பு வடிவங்களை உருவாக்கியுள்ளனர்.
தமிழுக்கேற்ற வரி வடிவங்களைப் பிற மொழிகளில்தானே உண்டாக்குகின்றனர். இதனால் தமிழுக்கு என்ன தீமை?
ஆங்கிலம் உலக மொழிகள் பலவற்றில்
இருந்தும் சொற்களை ஈர்த்துக் கொண்டது. ஆனால், அதற்கு என அமைத்துக் கொண்ட
இலத்தீன்உரோமன் எழுத்துகளைத் தவிர, அம் மொழி புதியதாக எந்த ஓர் எழுத்தையாவது சேர்த்துக் கொண்டதா?
இவ்வாறுதான் எல்லா மொழியினரும் தத்தம் மொழி எழுத்துகளுக்கேற்பத்தான் பிற
மொழி ஒலி வடிவங்களை உச்சரிப்பர். பிற மொழிகளுக்கெனப் புதிய வரி வடிவங்களை
உண்டாக்கிக் கொள்ள மாட்டார்கள்.
எனவே, இவர்கள் ஆங்கிலத்தில்
தமிழ்த்திருமுறைகளை ஒலிப்பதற்கென வரிவடிவம் அறிமுகப்படுத்துவதாகக்
கூறினாலும் உண்மை அதுவல்ல. தமிழ் தெரியாத தமிழர்கள்தான் அதைப்
பயன்படுத்துவர். பின்னர், தமிழில் ஒரே ‘க’ அல்லது ஒரே ‘ப’ தான்
இருக்கின்றன. எனவே, புதிய வடிவங்களைப் பயன்படுத்தலாம் எனக்கூறி அவற்றைப்
பரவலாகப் பயன்படுத்தித் தமிழ் அழிய வழி வகுப்பர். புதிய எழுத்து வடிவங்கள்
உருவாக்ப்பட்டுத்தானே தமிழ்மொழி சிதைந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது.
மேலும், புதிய வரிவடிவம் மூலம்
திருமுறைகளைப் புரிந்து கொள்வதற்கு மாற்றாக, நேரடியாகத் தமிழைக் கற்றுத்
தமிழிலேயே அவற்றைப் படிக்கலாம் அல்லது ஓதலாம் அல்லவா? பிற மொழிப் பாடகர்கள்
தத்தம் மொழியில் எழுதி வைத்துத்தான் தமிழ்ப்பாடல்களைப் படிக்கின்றனர்.
ஆனால், சிறுவர்கள் கேள்வியறிவு மூலமே பிற மொழிப் பாடல்களை உச்சரிப்பு
மாறாமல் பாடுகின்றனர் அல்லவா? எனவே, திருமுறைகளைப் பரப்ப வேண்டும் என்றால்
இசைப் பாடல்களைக் கேட்கச் செய்து சரியாக உச்சரிக்கச் செய்யலாம்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் ‘எண்ணும் எழுத்தும் கண்’ என்றார்.
திருமுறைகளைப் பரப்புவதற்காக எழுத்தைச் சிதைக்கின்றார்கள் என்றால் தமிழ்த்தாயின் கண்களைப் பறிக்கின்றார்கள் என்றுதானே பொருள்? நாளும் தமிழால் பாடுவதற்கென்றே இறைவன் படைத்தான் என்று வாழ்ந்த சமயக் குரவர்கள் பாடல்களைப் பரப்புவதற்காகத் தமிழை அழிக்கலாமா? சைவச்சமயத்தைப் பரப்புவதாகக் கூறி, தமிழ் மக்களிடம் நன்கொடை பெற்று, தமிழ்த்தாயை அழிக்கும் முயற்சியில் ஈடுபடலாமா
என இச் சைவ அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இது சைவத்தைப் பரப்பும்
முயற்சி அல்ல. தமிழை ஒழிக்கும் முயற்சி, அதன் மூலம் சைவத்தை அழிக்கும்
முயற்சி என்பதைச் சைவச் சமய அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.’’
உண்மையிலேயே நீங்கள் எச்சரிப்பது சரிதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக