ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

எமது போராட்டம்: வெறும் நிகழ்வா? அல்லது வரலாறா?

எமது போராட்டம்: வெறும் நிகழ்வா? அல்லது வரலாறா?

எமது போராட்டம்: வெறும் நிகழ்வா அல்லது பெருமைக்குரிய வரலாறா என்பதை நீங்கள்தான்  வரையறுக்க வேண்டும்

- கலாநிதி இராம் சிவலிங்கம்

 SivalingamDr.Ram-TGTE01
அணையாமல் இருக்க  காற்றோடு  போராடுவதை வாழ்வாகக் கொண்ட  மெழுகுவர்த்தி போல்,  ஈழம்வாழ்  எம் உறவுகளும் அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் மத்தியிலே, சிங்கள அரசின் இன அழிப்பிலிருந்து  தம்மைத் தாமே காப்பாற்ற, போராட வேண்டிய துயரய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு யாரப்பா காரணம்? தரமில்லா புலம் பெயர் அணிகளும், தகுதியில்லா அதன் தலைமைகளுமல்லவா?
எமது பூமியையும், அதன் பூர்வீகக்குடிகளான எம் உறவுகளையும் நாளுக்கு நாள் வேகமாக இழந்துவரும் வேளை, அவர்களுக்கு  உதவவேண்டியது எமது தலையாய கடமையல்லவா? ஐ.நா மனித உரிமைக்கான செனிவா மாநாட்டில், நீதியும் நியாயமும் நிலைக்க வேண்டும் என்று போராடும் உலகம் தம்மாலான பணியைத் தயங்காது செய்துவருகையில், பங்காளிகளாகச் செயற்பட வேண்டிய புலம்பெயர் அணிகள், பார்வையாளர்களாகத் தம்மைப் பதிவு செய்யப் பறந்து செல்லும் பரிதாப நிலைகண்டு வருந்துகிறேன்.
அறியாமையால் தீங்கு செய்வோரும், எம்மவர் முன்னேற்றத்திற்குத் தடையாக இயங்குவோரும்  திருந்த வேண்டும் என்ற அவாவில்தானே அவர்களின் தப்பான போக்கையும், தவறான செயல்களையும்  சுட்டிக்காட்டினேன்.  எம் இனத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக இயங்குவதும்  இரண்டகமே என எடுத்து விளக்கினேன்.  கட்டபொம்மன் ஆண்டபோது  ஓர் எட்டப்பன்,  பண்டார வன்னியன் ஆட்சியில் ஒரு காக்கை வன்னியன், தேசியத் தலைவர் காலத்தில் ஒரு கருணா என்ற நிலை மாறி, நாம் ஓர் அணியாக இயங்க வேண்டும். இதுவே என் ஆசை.
எமது அரசியல் போரை அதன் அந்தத்திற்குக் கொண்டு சென்று எமது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அவாவில்தானே  செய்வதறியாது காலத்தைக் கடத்தி எமது வாய்ப்புக்களை வீணடிக்கும் அணிகளையும், அறிக்கைமூலம் அரசியல் நடாத்தும் ஞானிகளையும் ஒதுங்கிநின்று, திறமையும், நம்பிக்கையும் கொண்ட  வல்லவர்களுக்கு வழி விடுமாறு வேண்டினேன்.
இன்று நாம் நடாத்துவது குடியியல் பயிலும் பத்தாம் வகுப்பல்ல, எமது சட்டபூர்வமான உரிமையப் பெறுவதற்காக அரசியல்தந்திரம் நிறைந்த உலகத் தலைவர்களுடன், நாம் நடாத்தும் மூளைக்கும் மூளைக்குமான போர். நீதி வேண்டும் உலகில் நியாயத்துக்கான போர். எமது அரசியல் போருக்குத் தேவையான  அடையாளத்தையும்,தேவைக்கும் அதிகமான  ஆதாரங்களையும் முள்ளிவாய்க்கால் எமக்குத் தந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் முன்னேற்றம் ஏதுமின்றி நாம் முடங்கி நிற்பது ஏன்? தரமானோர் பங்களிப்பு போதாமையே. தகுதியும், தகைமையும் கொண்ட  பற்றுறுதியுமானவர்கள் இணைந்துவிட்டால்…. வழியா இல்லை இப்பூமியில்.
இன்று, வெற்றியின் விளிம்பில் மீண்டும் நிற்கும் நாம், எமது வெற்றியை உறுதிப்படுத்த :வேண்டுமானால்,  தன்மானம் கொண்ட தமிழ்த் தலைவர்களின் தன்னலமற்ற பங்களிப்பும், புத்தியாளர்களின் ஒப்பிலா ஒத்துழைப்பும், எம் உறவுகளான உங்களின் உணர்வு பூர்வமான ஆதரவும் மட்டற்ற அளவில் தேவை.  இந்த வரம் மட்டும் எமக்குக் கிடைத்துவிட்டால்; தகுதிக்கும், தகைமைக்கும்,பற்றுறுதிக்கும் முதலிடம் கொடுத்து எமது இலக்கை அடைவோம், இலட்சியத்தை நிறைவு செய்வோம். இது திண்ணம்.
எண்ணிலடங்கா ஈகங்களும், எழுத்திலடங்கா ஒப்படைப்புகளும்  நிறைந்த எமது போராட்டம், வெறும் நிகழ்வாக முடிவுபெற வேண்டுமா? அல்லது பெருமைக்குரிய வரலாறாக  நிலைக்க வேண்டுமா? என்பதை  வரையறுக்க  வேண்டியவர்கள் வேறு யாருமில்லை, எம் உறவுகளான, நீங்களே.
தொடர்புக்கான தொ. இல: கனடா 416 829 1362 ,மின்வரி கீழே.
 பாவம் செய்தால் மட்டும் பாவமல்ல, பாவம் செய்வதைப் பார்த்துக்கொண்டு இருப்பதுவும் பாவமே.
கலாநிதி இராம் சிவலிங்கம்
sivalingham@sympatico.ca
அகரமுதல இதழ் 24

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக