உலகெங்கும் பேசப்படும்
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளுக்கும் தனித்தனி எழுத்தமைப்புகள் உண்டு.
ஒரு மொழியில் அமைந்துள்ள சில சிறப்பு எழுத்துகள் பிறவற்றில் இருக்கா.
மொழி, ஒலி வடிவை அடிப்படையாகக் கொண்டது.
அம் மொழியில் உள்ள ஓர் அலகைத் தனியாகப் பிரித்து அந்த அலகிற்கு ஓர் எழுத்து
என்று வகைப்படுத்தி, அதற்கு வரிவடிவம் கொடுத்தனர். ஒலி வடிவத்திற்கு
வரிவடிவம் கொடுத்தது மொழியியல் உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாகும்.
தமிழ் மொழியின் எழுத்து வடிவத்திற்கு மிக
நீண்டகால வரலாறு உண்டு. தமிழ் எழுத்துகள் கீறப்பட்ட பானையோடுகள் தொல்லியல்
அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள்
என தொல்லியல் பொருள்கள் பலவற்றிலும் தமிழ் எழுத்துகள் காணக்கிடக்கின்றன.
இந்தியாவில் வேறு எந்த எழுத்திற்கும் இந்தத் தொன்மை இல்லை. உலகின் பழமையான
சில மொழிகளுக்கே எழுத்துப் பதிவுகள் கிடைக்கின்றன. அவ்வாறு எழுத்துப்
பதிவுகள் கிடைத்து, இன்றும் வழக்கிலிருக்கும் மொழி தமிழ்.
தமிழ்மொழியின் எழுத்தமைப்பும்
தமிழ்மொழியைப் போன்றே சிறப்புடையதாகும். முதல் இலக்கண நூலான தொல்காப்பியம்
தமிழ்எழுத்துகளை, பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்யும் என மொத்தம்
முப்பது என்று வரையறுத்திருந்தாலும் உயிர்மெய் என்ற கூட்டெழுத்துகளைச்
சேர்த்து ஓர் அட்டவணைப்படுத்தித் தமிழ் எழுத்துகளை வகைப்படுத்தியுள்ளனர்.
ஒரு மொழிக்கான எழுத்தமைவு அட்டவணை அந்த
மொழிக்கே உரிய சிறப்புக்குரியதாகும். அதைச் சீர்குலைப்பது மொழியைச்
சீர்குலைப்பதற்கு ஒப்பாகும். அதில் வேறு மொழி எழுத்துகளைச் சேர்ப்பதோ,
இருப்பதை நீக்குவதோ அம் மொழியை அழிக்க வழிவகுக்கும்.
இந்தியாவில் இரு மொழிப்பிரிவுகள் உள்ளன.
ஆரிய மொழியமைப்பைப் பின்பற்றிச் சில மொழிகளும் தமிழ்(திராவிட)மொழியமைப்பைப்
பின்பற்றிச் சில மொழிகளும் இயங்கி வருகின்றன.
ஆரிய மொழியிலிருந்து உருவாக்கப்பட்ட
சமற்கிருதத்திற்கு ஒரு வரிவடிவ அமைப்பும் இன்றுவரை உருவாகவில்லை.
கிரந்தத்தையோ, தேவநாகரி எழுத்து முறையையோதான் அவர்கள் பயன்படுத்தித் தங்கள்
மொழியைப் பதிவு செய்து வந்தனர்.
தமிழியக்குடும்ப மொழிகளான தெலுங்கு,
கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் சமற்கிருத மொழிச் சொற்களை ஏராளமாக
நுழைத்துள்ளனர். அம்மொழிகளில் சமற்கிருதச் சொற்களைப் பிரித்துவிட்டால்
அவை தூய தமிழாகவே விளங்கும் என்பது வெளிப்படை.
இதேபோல் அவற்றின் எழுத்தமைப்பிலும்
சமற்கிருத எழுத்தமைப்பைப் புகுத்தியுள்ளனர் என்பதும் அவ்வாறு
புகுத்தியதால்தான் அவை தமிழ்மொழியிலிருந்து பிரிந்தன என்பதும் நாம்
மனங்கொள்ளவேண்டிய செய்தியாகும்.
மலையாள மொழியில் எழுத்தச்சன் என்பவரால்
எழுத்துகள் உருவாக்கப்பட்டுத்தான் அது பிரிந்துபோனது. அவ்வாறு எழுத்தச்சன்
உருவாக்கிய எழுத்து வரிசை சமற்கிருத எழுத்து வரிசையின் அடிப்படையில்
உருவானது.
தமிழ் எழுத்தமைவிலிருந்து சமற்கிருதம்
முகாமையாக வேறுபடும்கூறு என்பது ‘வருக்க எழுத்துமுறை’ இடம் பெற்றுள்ளதே.
‘க,ச,ட,த,ப’ என்ற வல்லெழுத்துகளின் மாற்றொலிகளுக்கு எழுத்து வரிவடிவம்
கொடுக்கப்பட்டுள்ளதே முகாமைக் கூறாகும்.
தமிழ் எழுத்தமைவு அட்டவணையில் பல சிறப்பு எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.
‘ழ’ கரம் தமிழியக் குடும்ப மொழிக்கே உள்ள
சிறப்பு எழுத்தாகும். அதேபோல ‘ண, ற, ன’ மூன்றும் இடவேறுபாட்டிற்குத்தக
வேறுபடுத்தவல்லவை. இதேபோல் ரகர, றகரமும், லகர ளகரமும் ஒரேபோல்
இடத்திற்குத்தக மாற்றி ஒலிக்கத்தக்கன.
கப்பல், தங்கம், பகல் – இம்மூன்று
சொற்களில் வரும் ககரத்தை ஒரேபோன்று மக்கள் ஒலிப்பதில்லை. இதைத்தான்
மாற்றொலியன் என்று மொழியியலில் பெயரிடுகிறார்கள். இதுபோல் மொழியில் உள்ள
எல்லா எழுத்துகளையும் அதற்குரிய ஒலி அமைப்பிலேயே மக்கள் அனைவரும்
பலுக்குவார்கள் என்றும் கூற முடியாது.
தமிழ் எழுத்தமைப்பில் ‘க,ச,ட,த,ப’ என்ற
ஐந்து எழுத்துகளுக்கும் இடத்திற்குத் தக ஒலிப்புமாற்றி ஒலிக்கக்கூடிய
எழுத்தொலிகளுக்குத் தனித்தனி வரிவடிவங்கள் இடம் பெறவில்லை. இது சமற்கிருதம்
சார் மொழிகளுக்கும் தமிழ், தமிழியக்குடும்ப மொழிகளுக்கும் உள்ள முகாமையான
வேறுபாடாக இருந்தது.
நாளடைவில் வடமொழிச் சொற்களை ஏராளமாக
ஏற்றுக்கொண்ட தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நுழைந்துள்ள சில
வடமொழிச் சொற்களைப் படிப்பதற்காக வேறு புதியபுதிய எழுத்து வடிவங்களை
உருவாக்கவேண்டிய தேவை வந்தது.
தமிழில் சில பிறமொழிச் சொற்கள் கலந்தாலும் அவற்றை அந்தந்த மொழியில் உள்ள எழுத்தோடு கடன் பெறும் வழக்கமில்லை.
எனினும் தொடர்ச்சியாகத் தமிழ்மொழியில்
பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழின் தனித்தன்மையைக் கெடுக்கவேண்டும் என்ற
நோக்கத்துடன் செயல்படுவோர் பலர் உண்டு.
அவர்கள் தமிழில் உள்ள சொற்களில்
மட்டுமல்லாமல் தமிழ் எழுத்தமைப்பிலும் கலப்புச் செய்து வந்தனர். ‘ஜ’, ‘ஷ’,
‘ஹ’, ‘ஸ’ போன்ற வடமொழிக்கான ஒலிகளுக்கு வரிவடிவங்களை நுழைத்தனர் என்பதும்
கண்கூடு.
அதேபோல் ‘க,ச,ட,த,ப’ போன்ற எழுத்து
வரிசையிலும் மாற்றொலியனுக்குத்தக எழுத்துகளை நுழைக்க நேரம்
பார்த்துக்கொண்டுள்ளனர் என்பதை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சமற்கிருதத்திற்கு இன்றுவரை ஒரு தனிப்பட்ட
எழுத்து உருவாகவில்லை. மேலும் மக்கள் வழக்கிலிருந்தே அது அகன்றுபோனதால்
அவர்கள் அதைப் புதுப்பிக்க எண்ணுகின்றனர். அம் மொழிக்கு மொழி, இன அடையாளம்
அழிந்துபோனதும் இதற்குக் காரணம்.
அதனால் இந்தியாவில் உள்ள பிறமொழிகளில்
தங்கள் சமற்கிருதச் சொற்களைப் புகுத்துவதும் அம் மொழிகளின் மரபைச்
சீர்குலைப்பதுமான முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளன.
ஒவ்வொரு துறையிலும் கணினிவழி முன்னேற்றம்
தலையெடுக்கத் தொடங்கிவிட்ட இக்காலத்தில் மொழியியலிலும் அம் முன்னேற்றம்
ஏற்பட்டு மொழியையும் கணினிவழிச் செயற்பாட்டுக்குக் கொண்டுவந்து அவரவரும்
தங்கள் மொழியை இணையத்திலும், மின் அஞ்சலிலும் பயன்படுத்தத்
தொடங்கிவிட்டனர்.
இதற்கும் மேலாகக் கணினி நிறுவனமான ‘மைக்ரோ
சாப்டு’ (Microsoft) நிறுவனம் உலகில் பரவலாக உள்ள மொழிகளுக்கு ஓர்
ஒருங்குகுறி அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மொழிகள் அனைத்திற்கும்
ஒருங்குகுறிச் செயற்பாடு நடைபெற்று அம் மொழிகளில் மென்பொருள்
உருவாக்கம்பெறும் அளவிற்கு முன்னேற்றம் பெற்று வருகின்றன.
இந்த ஒருங்குகுறியமைப்பில் சமற்கிருதம்
சேருவதற்குத் தேவையான தனி எழுத்தமைப்பு அதனிடம் இல்லை. யாருமே பேசாத ஒரு
மொழிக்கு ஒருங்குகுறி அமைப்பு உருவாக்க அமெரிக்க நிறுவனமும் ஒப்பவில்லை.
தமிழகத்தின் ஒரு சிறு பகுதியைச் சிறிது
காலம் ஆண்ட பல்லவனின் காலத்தில் சமற்கிருதம் ஆளுமைப் பெற்றிருந்தது. தமிழ்
எழுத்தினின்று சில மாற்றங்களுடன் கூடிய எழுத்து(கிரந்த)முறை ஒன்றை,
சமற்கிருதத்தில் வலிந்து உருவாக்கிக் கொண்டு, அதில் சில கல்வெட்டுகள்
உருவாக்கப்பட்டன. தமிழ் எழுத்துக்களும் கலந்த கலவையான அவற்றை யாரும்
எளிதில் படித்திட முடியாது. அவை சிறு கால இடைவெளியில் சில ஆண்டுகளே இடம்
பெற்ற செய்திகளை அடக்கியவை.
அவற்றை ஒரு காரணமாகக் காட்டி அக்
கல்வெட்டுகளை மின்னியம் (னுபைவைணைந) செய்யவேண்டும் என்றும் வலியக்கூறி,
கிரந்தத்திற்கு ஒருங்குகுறி வேண்டும் என்று ஒரு கூட்டத்தினர்
பெருமுயற்சியெடுத்து வருகின்றனர்.
தமிழில் அவை இடம்பெறுமாறு ஒரு நுழைவை
இடையில் கரவாக ஏற்படுத்தினர். இதை விழிப்பாக இருந்து தமிழறிஞர்களையும்,
கணினி அறிஞர்களையும் ஒருங்கிணைத்து, நாம் அன்று எதிர்த்துத் தடுத்து
விட்டோம்.
1938-இல் தொடங்கி தொடர்ந்து நாம்
எதிர்த்துக்கொண்டிருந்தாலும், இன்றும் எந்த நேரம் அயர்ந்திருப்போம் என்று
பார்த்துத் தொடர்ந்து இந்தித்திணிப்பு எவ்வாறு நடைபெற்றுக்கொண்டு வருகிறதோ,
அதேபோல் சமற்கிருத விரும்பிகள் ஒருங்குகுறியில் தங்கள் மொழி நுழைவு
பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்மொழிமேல் படையெடுத்து அதைச்
சீர்குலைப்பதன்வழி கிரந்தத்தின் வழியாகவும் வேறு வழியாகவும் தொடர்ந்து
அவர்களின் படையெடுப்பை நடத்திக்கொண்டுதான் உள்ளனர்.
இந்தியெதிர்ப்பை மேற்கொள்வதற்குத் தமிழ்
உணர்வாளர்களின் ஆர்வம் இன்று குறைந்துவருவதுபோல் கணினி உலகில் தமிழ்
ஒருங்குகுறியின்மேல் திணித்துக் கொண்டிருக்கும் மொழிக்குலைவுப்
படையெடுப்புகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிடக்கூடாது.
தமிழறிஞர்களும் உணர்வாளர்களும் கணினியில்
ஈடுபட ஆர்வம் கொள்வதில்லை. கணினி தொழில்நுட்பத்தைப்
புரிந்துகொண்டிருப்பவர்களுக்குத் தமிழ் உணர்வு இல்லை.
இதைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழைச்
சீர்குலைக்கும் அடுத்தடுத்தப் படையெடுப்புகள் சிலரால்
முன்னெடுக்கப்படுகின்றன. இதன் விளைவு தெரியாது ‘உத்தம’த்துப் பொறியாளர்கள்
சிலர்கூட தமிழ் மொழிமரபு குலைந்துபோகத் துணை நிற்கிறார்கள்.
தமிழ் ஒருங்குகுறியில் இடம்பெறும் தமிழ்
எழுத்துகளுக்கு உரோமன் எழுத்தில் ஒலிவடிவம் கொடுக்கவேண்டியுள்ளது.
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துகளிலேயே அவற்றின் ஒலி வடிவம்
கொடுக்கப்படவேண்டும். எந்தவொரு நெருக்கடி வந்தாலும் ஆங்கில எழுத்தின் 26
எழுத்துகளில் எந்த மாற்றத்தையும் யாரும் ஏற்படுத்துவதில்லை. ஆங்கிலத்தில்
இருக்கும் மரபை யாரும் குலைப்பதுமில்லை.
‘C’ என்ற எழுத்திற்கு ‘ச, க’ என்ற இரு
ஒலிகளையுமே இடத்திற்குத்தகப் பயன்படுத்துகின்றனர். ‘க’வும், ‘ச’வும் ஒரே இன
ஒலி வகையில்லை. ஒன்றுக்கொன்று மாற்றொலியனும் இல்லை. அதுமட்டுமன்றி
ஓரெழுத்து சில இடங்களில் அமைதி (Silent) கொள்வது என்றெல்லாம் பல
முரண்பாடுகள் ஆங்கில எழுத்தமைப்பில் உள்ளன.
தமிழில் உள்ள ஒருங்குகுறி எழுத்துகளுக்கு
இவ்வாறான குறைபாடுடைய 26 ஆங்கில எழுத்துகளின் ஒலி வடிவத்தைக் கொண்டே
கொடுக்க வேண்டும் எனும் நிலையில், ஆங்கில மரபு கெடக்கூடாது என்று எவ்வாறு
அக்கறை காட்டப்படுகிறதோ அவ்வாறே தமிழ் மரபும் குறைவுபடக்கூடாது என்பதிலும்
தமிழறிஞர்கள், கணினித்தமிழ்ப் பொறியாளர்கள் அக்கறை கொள்ளவேண்டும்.
கப்பல், தங்கம், பகல் என்ற மூன்று
சொற்களிலும் வரும் எழுத்துகள் மாற்றொலிகளாக ஒலிக்கப்பட்டாலும் ‘க’ என்ற ஒரே
எழுத்தைப் பயன்படுத்துவதுதான் தமிழ்மொழி மரபு. அதே வகையில் ஆங்கிலத்தில்
‘K’ என்ற ஒரே எழுத்தைப் பயன்படுத்துவதுதான் குறிமாற்ற முறையாக இருந்து
தமிழ் மரபைக் காப்பாற்றும்.
பலுக்கல் முறையில் ஓர் எழுத்தின் ஒலிக்கு
மாற்றொலிகளாகப் பயன்படுத்தப்படும் ஒலிகளுக்கெல்லாம் வெவ்வேறு எழுத்துகளைப்
பயன்படுத்தத் தொடங்கினால், தமிழின் எழுத்து மரபு கட்டுக்குலைந்துபோகும்.
உரோமன் எழுத்துகள் 26ஐ மட்டுமே உலகமொழி அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றால் அதை விரிவாக்கம் செய்து சீர்படுத்த வேண்டும் .
அதைவிடுத்து, மீண்டும் மீண்டும் ஆங்கிலச்
செருப்பிற்குத் தக்கவாறு தமிழ் முதலான அனைத்து மொழிகளின் கால்களையும்
வெட்டிவிட முன்வரும் போக்கை அறவே தவிர்க்கவேண்டும்.
எந்தவோர் அரசும் தமிழ் வளர்ச்சியில் அக்கறை
காட்டாத நிலையில், தமிழறிஞர்களும் கணினிப் பொறியாளர்களும் மட்டுமே தமிழ்
மென்பொருள்கள் பலவற்றை உருவாக்கித், தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டுக்
கொண்டிருக்கையில், மீண்டும் மீண்டும் ஒருங்குகுறியில் சிக்கல்களை
ஏற்படுத்திக் கொண்டிருப்பதைக் கவனத்துடன் இருந்துத் தடுத்தல் வேண்டும்.
- தென்மொழி ஆசிரியவுரை, சித்திரை 2045 / ஏப்பிரல் 2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக