தாய்த்தமிழ் காத்துயர்வோம்!
மக்களால் பேசப்படும் மொழியே வாழும்!
நம் தாய் மொழியாகிய தமிழ் தமிழர்களாகிய
நம்மில் அறுதிப் பெரும்பான்மையினரால் பிழையாகவும், பிற மொழிக் கலப்புடனும்,
குறிப்பாக ஆங்கிலக் கலப்புடனும் பேசப்பட்டு வருகின்றது. இதனால், நம்
மொழிச் சொற்கள் மறையத் தொடங்கி விட்டன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ்
சொற்களாகப் பாவித்துப் பேசி வருகின்றனர் நம் தமிழர்கள். எடுத்துக்
காட்டுகள் – காஃபி, டீ, ப்ரஷ், பேஸ்ப், சோப், டவல், டிஃபன், லஞ்ச், ஸ்கூல், காலேஜ், ஆஃபீஸ், ஆட்டோ, பஸ், ட்ரெயின்.
இவ்வாறு ஆங்கிலச் சொற்களையே பேசிக் கொண்டு வந்தால், காநீர், தேநீர்,
பல்துலக்கி, பற்பசை, வழலை, துண்டு, சிற்றுண்டி, நண்பகலுணவு, பள்ளி,
கல்லூரி, அலுவலகம், தானி, பேருந்து, தொடர் வண்டி ஆகிய தமிழ்ச் சொற்கள்
எவ்வாறு துலங்கும்? பேச்சு வழக்கின்றி மறையத்தானே போகின்றன. எனவே ‘‘தமிழ்ச்
சொற்களை அறிந்து நாம் பேச வேண்டும்’’ என்ற உறுதி மேற்கொள்ள வேண்டும்.
தமிழர் நம் இல்லங்களில் தமிழிலேயே பேச
வேண்டும். ஆனால் பெரும்பான்மையினர், தமிழ் & ஆங்கிலம் = ‘தமிங்கிலம்’’
எனப்படும். கலப்பு மொழி தான் பேசுகின்றனர். எடுத்துக் காட்டுகள் – லேட் ஆயிருச்சு. பஸ் வந்திரும். சார்ஜர் எங்கே? லஞ்ச் பிரேக்ல எனக்கு கால் பண்ணு. மீட்டிங் இருக்கு. வர்றதுக்கு நைட் ஆயிரும்.
இவ்வாறு பேசினால், ஆங்கிலச் சொற்கள் நிலைத் தோங்க. தமிழ்ச் சொற்கள்
மறைந்து அழியும். தமிழர் நாம் சந்திக்கும் பொழுதும் தனித் தமிழ் பேச
வேண்டும். ‘‘இன்னும் சில நூற்றாண்டுகளில், இவ்வுலகில் பேசப்படும் மொழிகள்
12 ஆக இருக்கும். அவற்றில் ஒன்றாகத் தமிழ் இருக்க வாய்ப்பில்லை’’ என்று
யுனெசுகோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாடு நிறுவனம்)
விழிப்புணர்வூட்டுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ஓர் அபாயச்
சங்கொலி எனக் கருதி ஒவ்வொரு தமிழ் மகனும், தாய் மொழியை மற்றும்
தமிழினத்தைக் காத்திடத் தனித்தமிழ் பேசுதல் வேண்டும். இது காலத்தின்
கட்டாயம்.
‘‘ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின், பெரும்
படை பலம் தேவையில்லை. அவ்வின மொழியை அழித்தாலே போதும்’’ என ஐரிசு அறிஞர்
டிவேலரா குறிப்பிட்டுள்ளார். இக்கூற்றின் அடிப்படையில் சிந்தித்தோ மானால்,
ஆங்கிலேயரோ அல்லது ஆங்கிலமோ தற்போது நம் மீதோ அல்லது நம் மொழி மீதோ
ஆதிக்கம் செலுத்தி, நம்மினத்தையும் மற்றும் மொழியையும் அழித்திட முயவில்லை
என்பதும், நாமாகவே ஆங்கிலத்தின் மீதுள்ள தீராத மோகத்தால், அதைத் தமிழுடன்
கலந்து பேசி, தாய் மொழி மற்றும் தமிழின அழிவிற்கு வழி வகுத்து வருகின்றோம்
என்பதும் தெரிய வரும். இச்செயல் முறையற்றது. குறையும் மற்றும்
குற்றமுமுடையது. இதனைத் தவிர்த்து, மொழியும், இனமும் தழைத்தோங்கத்
தனித்தமிழ் பேசுவதே நம் தலைமைக் கடன்.
‘‘பொருள் மிக்க தமிழ் மொழிக்குப்
புரிந்திடுவீர் நற்றொண்டு – புரியீராயின்
இருள் மிக்க தாகி விடும் தமிழ் நாடும்
தமிழர்களின் இனிய வாழ்வும்”
என புரட்சிப் பாவலர் பாரதிதாசன்
பாடியுள்ளார். தனித்தமிழ் பேசுவதே ஒவ்வொரு தமிழ் மகனும், தாய்த்தமிழுக்குச்
செய்திடும் தலையாய தமிழ்த் தொண்டாகும். மொழியின் பெருமை பேசுவது,
இலக்கியம் பேசுவது, தமிழ்க் கூட்டங்கள் நடத்துவது, நூல்கள் எழுதுவது,
ஆய்வுகள் நடத்துவது ஆகிய தமிழ் வளர்ச்சிக்கென நடைபெறும் செயல்பாடுகள்
தொடரட்டும் வளர்ந்தோங்கி, ‘‘மொழிக்கு மூச்சு, பேச்சே’’ என்பது உண்மை. எனவே
தங்கத் தமிழர்களாகிய நாம் அனைவரும் தனித்தமிழ் பேசுவோம்.
தனித்தமிழ்ப் பயிற்றகம்
தமிழைப்
பிழையின்றிப் பேசவும் மற்றும் தனித்தமிழ் பேசவும் பயிற்சி வழங்கும்
அமைப்பே தனித்தமிழ்ப் பயிற்றகம். இப்பயிற்றகம், சென்னை துரைப்பாக்கம்
காவேரி பதின்நிலைப் பள்ளியில், 22.06.2013இல் தொடங்கப்பட்டு,
மாணவர்களுக்குத் தொடர் பயிற்சி வழங்கி வருகின்றது. முனைவர் ஆ.கோ.
குலோத்துங்கன் தலைமை ஏற்க, 22 தமிழ்ச் சான்றோர்களின் வழிகாட்டலுடன்
முறையாகச் செயல்பட்டு வருகின்றது. பயிற்சியின் இறுதியில் மாணவர்களுக்கு
நற்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
அனைவர்க்கும் அன்பான வேண்டுகோள்
பள்ளிதோறும், ஊர்தோறும், தொகுதி தோறும்
சுருங்கக் கூறின் தமிழ் நாடெங்கும் தனித் தமிழ்ப் பயிற்றகங்கள் உடனடியாகத்
தோற்றுவிக்கப்பட வேண்டும். மாணவர்க்கு மட்டுமன்றி, பெற்றோர்க்கும்,
மற்றோர்க்கும், தனித்தமிழ்ப் பேச்சுப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். இது
முடியுமா? என்று வினா எழுப்பிவிட்டு, முடியாது என்று தாங்களே பதிலும்
கூறிக் கொண்டு சோம்பியிருந்து விடல் கூடாது. மொழிப் பற்றுடன் முயற்சி
மேற்கொள்ள வேண்டும். முயற்சி திருவினையாக்கும்.
தமிழ்நாட்டிலுள்ள கல்விக் கூடங்கள், தமிழ் மன்றங்கள், சங்கங்கள், பேரவைகள், சாதிச் சங்கங்கள், நேயர்(இரசிகர்)
மன்றங்கள், கோவில் திருப்பணிக்குழுக்கள் ஆகிய அனைத்தும், தனித்தமிழ்ப்
பயிற்றகம் தோற்றுவித்துப் பயிற்சி வழங்கி அருந்தொண்டாற்றிட பேரார்வத்துடன்
முன்வர வேண்டும்.
தமிழக அரசு, தமிழகமெங்கும் தனித் தமிழ்ப்
பேச்சுத் தொடரவும் மற்றும் வளரவும், திட்டமிட்டு ஆவண செய்திட வேண்டும்.
இதுவே தமிழுக்குச் செய்யும் தலையாய தொண்டாக அமையும்.
தாய் மொழியில் பேசுவதோ, தாய்மொழியை
வளர்ப்பதோ, பிற மொழிகளை வெறுப்பதாகாது. ஒரு மனிதன், எத்தனை மொழிகள்
வேண்டுமாயினும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவனது தாய்மொழியின் மீது மட்டுமே
பற்றுக் கொள்ள வேண்டும். நம் தாய்மொழியுடன் வேறு எம் மொழியையும் கலந்து
பேசக்கூடாது என்பவையே இப்பயிற்றகம் வலியுறுத்தும் கருத்துக்களாகும்.
தன்மானத் தமிழன்பர்களே! நாம் தனித்தமிழ் பேசி, தாய்மொழி மற்றும் தமிழினங் காப்போம்.
தனித்தமிழ்ப் பயிற்றகத்தகவலறிய
அழையுங்கள்: 9095902217
பொதுச் செயலாளர்,
தமிழ் ழகரப் பணி மன்றம்
தனித்தமிழ்ப் பயிற்றகம், துரைப்பாக்கம், சென்னை – 600 097.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக