வியாழன், 18 ஏப்ரல், 2013

சிற்பங்களின் மலை!

சிற்பங்களின் மலை!
கழுகு மலையின், கற்சிற்பம் மற்றும் ஒரே கல்லிலான கோவிலின் சிற்பக்கலையை விளக்கும், வெங்கட்ராமன்: மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், வரலாற்றுப் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். யுனெஸ்கோவின் புராதனச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்று, உலக அளவில் அங்கீகாரம் பெறுவதே, தொன்மை சிறப்பு வாய்ந்த பகுதிக்கு அடையாளம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து, 20 கி.மீ., தொலைவில், சங்கரன்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள, கழுகு மலையும், இப்பட்டியலில் இடம்பெற போகிறது.பண்டைய கால சமணர்கள், மக்களுக்கு கல்வி கற்பிக்கும் இடமாக, கழுகு மலை இருந்தது. பலர் இங்கு தங்கி, கல்வி பயின்று சென்றுள்ளனர். பள்ளி என்றால், படுக்கை என்று பொருள். பலர் இங்கு தங்கி படித்ததால், "பள்ளிக்கூடம்' என்ற சொல் வழக்கு, இங்கிருந்தே தோன்றியது. 8ம் நூற்றாண்டில், பல சமண முனிவர்கள் உருவாக்கிய சிற்பங்கள், கழுகு மலையில் உள்ளன.

யாரும் செதுக்க முடியாத கடினமான பாறையில், அவ்வளவு துல்லியமாகவும், கலை உணர்வுடனும், சமண முனிவர்கள் எப்படி சிலைகளை செதுக்கினர் என, பல வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.பல நூற்றாண்டானாலும், சிற்பங்களின் பொலிவு சிறிதும் குறையவில்லை. சிற்பங்களுக்கு கீழ், யாரால் செதுக்கப்பட்டது என, வட்டெழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. 8ம் நூற்றாண்டான வரகுணப் பாண்டியன் காலத்தில், சிவனுக்காக கழுகு மலையின் பாறையில், 7.50 மீ., ஆழத்திற்கு சதுரமாக வெட்டியெடுத்து, அதன் நடுப்பகுதியை, "வெட்டுவான் கோவிலாக' செதுக்கியுள்ளனர்.எல்லோரா குகைக் கோவில் மற்றும் மாமல்லபுரக் கோவிலைக் காட்டிலும், கழுகு மலையில் உள்ள பாறைகள் மிகவும் கடினமானவை என்பதால், கழுகு மலையை மேலிருந்து குடைவது எளிதல்ல. பாறைகளை குடைந்தது மட்டுமின்றி, சிற்ப வேலைகளை மிக நுண்ணியமாக கையாண்டதும், தமிழர்களின் சிற்ப கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.கழுகு மலையில் ஒரே கால கட்டத்தில், சிவனுக்காக வெட்டுவான் கோவிலும், சமணர் பள்ளிக் கூடமும் சிறப்பாக இயங்கியது, நம் முன்னோரின் மத நல்லிணக் கத்திற்கு சான்றாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக