ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பாடகர் பி.பி.சீனிவாசு காலமானார்

பாடகர் பி.பி.சீனிவாசு காலமானார்

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
1930. செப்.22ம் தேதி தற்போதைய ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்தவர் பிபி.ஸ்ரீனிவாஸ். பனிந்திரஸ்வாமி, சேஷகிரியம்மா தம்பதிக்குப் பிறந்த ஸ்ரீனிவாஸின் முன்னோர்கள் பசலபுடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
கல்லூரியில் பி.காம் படித்துள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என எட்டு மொழிகளை அறிந்தவர். தெலுங்கு மொழியில் கஸல் போன்ற பாடல்களை அதிகம் பாடியுள்ளார். கீதா தத், சம்ஷத் பேகம், ஜிக்கி ஆகியோருடன் இணைந்து பாடல்கள் பல பாடியுள்ளார்.
ஆர்.நாகேந்திர ராவின் ஜாதக பலம் (ஜாதகம்) என்ற படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் திரைப்படப் பாடலில் பாடி அறிமுகமானார்.
ஜெமினியின் ஹிந்திப் படமான மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் 1952ல் ஹிந்திக்கும் அறிமுகமானார். ஹரிச்சந்திரா என்ற மலையாளப் படத்தில் 1955ல்  அறிமுகமான பி.பி.ஸ்ரீனிவாஸ், பிரேம பாசம் படத்தில் பி.சுசீலாவுடன் டூயட் பாடல் பாடி அசத்தினார். பின்னாளில் கன்னட திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ராஜ்குமாருக்கும், தமிழில் ஜெமினி கணேசனுக்கும் அதிக பாடல்கள் பாடி, இவர்களுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலே சரியாக வரும் என்ற அளவுக்கு திரையுலகில் பேசப்பட்டார். மேலும் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஆகியோருக்கு பின்னணிக் குரல் கொடுத்து, திரைப் பாடல்களை பாமர ரசிகர்களும் அதிகம் கேட்டு விரும்ப வைத்தார்.
கண்ணதாசன் எழுதிய காலங்களில் அவள் வசந்தம் பாடல், அடுத்த வீட்டுப் பெண் படப் பாடல் என இவரின் பாடல்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப் படுகிறது. பி.சுசீலா, எஸ்.ஜானகி, பி.பானுமதி, கே.ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஸ்கர் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் காலத்தால் அழியாதவை.
திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாது, பக்திப் பாடல்கள், சுலோகங்கள், தோத்திரங்களும் இவர் அதிகம் பாடியுள்ளார். சாரதா புஜங்க ஸ்தோத்திரம், ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம்,  முகுந்த மாலை, ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்தோத்ரம், புரந்தரதாஸர் தேவநாமாக்கள் என இவர் பாடிய ஸ்தோத்திரங்கள் இன்றளவும் அன்பர்களால் கேட்டு ரசிக்கப்படுகின்றன.
சென்னையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை அண்ணாசாலையை ஒட்டிய உட்லேண்ட்ஸ் ஹோட்டல் திறந்த வெளி பகுதியில் (தற்போதைய செம்மொழிப் பூங்கா பகுதி) தினந்தோறும் வந்து, தன் நண்பர்களுடன் உரையாடிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். மாலை நேரங்களில் தன் வயதையும் மறந்து, இளம் நண்பர்களுடனும், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் என அனைவரிடமும் அமர்ந்து பேசிப் பொழுது கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த அனுபவங்களை வைத்து, ஹோம் அவே ஃப்ரம் ஹோம் என்ற ஒரு தொகுப்பையும் எழுதினார் ஸ்ரீனிவாஸ்.
பல்வேறு நாடக மன்றங்கள், இசை அமைப்புகளில் தலைமையும் பங்கேற்பும் கொண்டிருந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

1 கருத்து:

  1. புகழ்மிகு பி.பி.சீனிவாசு அவர்கள் அரசு இசைக்கல்லூரிகளின் கலையியல் அறிவுரைஞர் ஆக இருந்த பொழுது பல முறை சந்தித்துள்ளேன். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தான் எழுதிய கவிதையை , என் குரலில் வாசித்தால் உயிரோட்டமாக இருக்கும் என அன்பின் காரணமாகக் கூறி என்னை வாசிக்குமாறு சொல்வார். சட்டைப்பை நிறைய மை எழுதிகள் வைத்திருப்பார். வழக்கமாக அவர் உட்லண்டு திறந்த வெளி உணவகத்தில் அமர்ந்து கவிதைகள் எழுதுவார் எனக் கேள்விப்பட்டதுண்டு. ஒரு நாள் அங்கே சென்று அவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுதுதான் அவர் ஏதோ ஒன்றிரண்டு கவிதைகள் எழுதுபவர் அல்லர் என உணர்ந்தேன். எழுதிக் கொண்டே இருந்தார். எல்லாம் அருமையான கவிதைகள். ஆண்டுக்கணக்கி்ல், ஆயிரக்கணக்கிலாவது எழுதியிருக்க வேண்டும். அவரிடம், இவற்றை எல்லாம் தொகுத்து வெளியிட வேண்டும் என வேண்டினேன். இதுவரை அவ்வாறு சிந்தித்ததில்லை. நான் ஏதோ எழுதுகிறேன் எனப் பிறர் எண்ணுவார்களே தவிர, என்ன எழுதுகிறேன், எவ்வளவு எழுதுகிறேன் என யாருக்கும் தெரியாது. என் மன அமைதிக்காகத்தான் எழுதி வந்தேன்.வெளியிடுவது குறித்து எண்ணிப்பார்க்கின்றேன் என்றார். அவரது குடும்பத்தினர் அவ்வாறு எழுதி அவர் வைத்திருந்த கவிதைகளை வெளியிடலாம். பாடல்களை இசை வடிவில் வெளியிடலாம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    பதிலளிநீக்கு