புதன், 20 பிப்ரவரி, 2013

நெல் சாகுபடியில்அருந்திறல்!


நெல் சாகுபடியில் சாதனை!
அதிக நெல் சாகுபடிக்காக, முதல்வர் செயலலிதாவிடம், 5 லட்ச ரூபாய் பரிசு பெற்ற விவசாயி, சோலைமலை: மதுரையிலிருந்து, 17 கி.மீ., தொலைவில் உள்ள, அண்டமான் கிராமத்தை சேர்ந்தவன். தமிழக வேளாண் அதிகாரிகள், எங்கள் கிராமத்திற்கு வந்து, "திருந்திய நெல் சாகுபடி' முறையை, அவ்வப்போது விளக்கினர். இது பற்றிய என் சந்தேகங்களை, வேளாண் அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தீர்த்ததால், திருந்திய நெல் சாகுபடி முறையில், சாதனை செய்ய ஆர்வம் ஏற்பட்டது. சாதாரண முறையில், நெல் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு, 3,800 கிலோ நெல் விளையும். ஆனால், திருந்திய நெல் சாகுபடி முறையில் மொத்தம், 8,272 கிலோ நெல் விளையச் செய்து, சாதித்தேன். இதற்கு, குடியரசு தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா, தமிழ அரசின் வேளாண்மை சிறப்பு பரிசாக, 5 லட்ச ரூபாயும்; 3,500 ரூபாய் மதிப்புள்ள, தங்க மெடலும் வழங்கி பாராட்டினார்.

அதிக நெல் மகசூலுக்காக, மத்திய அரசின், 2011-2012ம் ஆண்டிற்கான, "கிரிஷி கர்மான்' விருதையும் பெற்றுள்ளேன். கோடை மற்றும் நீர் இருப்பு குறைவான காலத்தில், இம்முறை நன்கு பயன்படும். சாதாரண முறையில், ஒரு ஹெக்டேரில், நெல்லை பயிர் செய்ய, 20 சென்ட் பரப்பளவுள்ள, நாற்றங்கால் தேவை. "திருந்திய நெல் சாகுபடி' முறையில், 2.5 சென்ட் பரப்பளவுள்ள நாற்றங்கால் போதுமானது. நெல் விதையை, 24 மணி நேரம் ஊற வைத்து, இருட்டறையில் முளை கட்ட வைத்து, உயிர் உரத்துடன் கலந்து, 1 ச.மீ., நிலத்தில், நேர்த்தி செய்யப்பட்ட, 130 கிராம் விதை நெல்லை விதைத்தேன். மக்கிய தொழு உரம் மூலம், நடவு வயலை தயாரித்தேன். நாற்றை நடுவதற்கு முன், வயலில், நீரை வடித்து விடுவது அவசியம். 25க்கு, 25 செ.மீ., சதுர இடைவெளியில், நாற்று நட்டேன். முதல் ஐந்து நாட்களுக்கு, நாளொன்றுக்கு மூன்று முறை, பூவாளியால் நீர் ஊற்றினேன். களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல் என, அனைத்திலும் கவனம் செலுத்தியதால், திருந்திய நெல் சாகுபடி முறையில், அதிக நெல்லை எளிதில் சாகுபடி செய்ய முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக