வெள்ளி, 18 ஜனவரி, 2013

முதல்வர் மறு ஆய்வு செய்ய வேண்டும்!


முதல்வர் மறு வு செய்ய வேண்டும்!

கல்வியாளரும், சமூக ஆர்வலருமான டாக்டர். வி.வசந்திதேவி: தமிழகத்தில் பெண்கள், சிறுவர்கள், தலித் மக்கள் போன்ற, எளிதில் பாதிக்கப்பட கூடியவர்களின் நலனுக்காக, ஏற்படுத்தப்பட்ட பல சட்ட அமைப்புகளையும், கண்காணிப்பு அமைப்புகளையும், மாற்றியும், திருத்தியும் அமைக்க வேண்டிய அவசரமும், அவசியமும் ஏற்பட்டுள்ளது.உதாரணமாக, தமிழக மாநில மனித உரிமை ஆணையத்துக்கு தலைவர் கிடையாது. பெண்களுக்கான, மாநில ஆணையத்துக்கு தலைவர் மட்டுமே செயல்படுகிறார். உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்தும், குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படவில்லை. இவையெல்லாம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், உரிய நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன.
பாலியல் தாக்குதல்களுக்கு எதிராக, கடும் தண்டனைகள் மட்டுமல்லாது, நீண்ட காலத் திட்டமாக, ஆணாதிக்க கலாசார சிந்தனையை மாற்றி, பெண்கள் பற்றிய புரிதலும், மனிதாபின மானமும் கொண்ட, சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது மிக மிக முக்கியம். அதுவே, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழாத மாநிலமாக, தமிழகம் மாறுவதற்கு அடித்தளமாக அமையும். மனிதநேய மற்றும் ஜனநாயக உணர்வுகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்துவது; ஊடகங்களில் ஆண்களின் இன்பத்துக்கான பொருளாக பெண்களை சித்தரிப்பதை தடுப்பது; வன்முறையை பெருமைக்குரிய விஷயமாகக் காட்டுவதைத் தடுப்பது; சட்ட கண்காணிப்பு அமைப்புகளையும், அரசியலமைப்புகளையும் பலப்படுத்துவது; இவற்றை அரசியல் சார்பற்ற, தன்னாட்சி அமைப்புகளாக மாற்றுவது போன்ற, முற்போக்கு நடவடிக்கைகள் மூலம், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும்.முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும், மரண தண்டனை மற்றும் ஆண்மை நீக்கம் இரண்டும், சீர்திருத்தத்துக்கு வழிவகுப்பவை அல்ல என்ப தோடு, மனித உரிமையை அடித்தளமாக கொண்ட, ஒரு பண்பட்ட ஜனநாயக நாட்டின் கொள்கையைப் பிரதிபலிப்பதாகவும் இல்லை. அதேபோல, குண்டர் தடுப்பு சட்டம் என்பது, அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கவும் கூடும். இவற்றை, முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக