சனி, 19 ஜனவரி, 2013

கேட்டது கிடைக்காவிட்டால் . . .

சொல்கிறார்கள்

"சாக்சீடு' தொண்டு நிறுவனத்தின், குடும்ப நல ஆலோசகர் ரெபேக்காள்: "எனக்கு மட்டும் ஏன் இப்படி?' என கண்ணீர் வடிப்பது, தனிமை, தூக்கம் தொலைப்பது போன்ற நடவடிக்கைகளில், சிலர் ஈடுபடுகின்றனர். இந்த பிரச்னைக்கு பிரதான காரணம், குடும்ப வளர்ப்பு முறை.வேண்டுவதை, கேட்டதற்கு மேலாகவே, குடும்பத்தினர் உடனுக்குடன் பூர்த்தி செய்திருக்கக் கூடும். ஏதாவது ஒன்று கிடைக்காது போனாலோ, தாமதித்தாலோ, அதற்காக மிகையாக பரிதவித்து, வேறு ஒன்றை பதிலியாக செய்து, பெற்றோர், தங்கள் பாசத்தை பறைசாற்றிக் கொண்டிக்கவும் கூடும். குழந்தை வளர்ப்பை பிரமாதமாக செய்கிறோம் என்கிற பகட்டுக்காகவும், அந்தஸ்தின் அடையாளமாகவும், இம்மாதிரியான அபத்தங்களில், பெற்றோர் ஈடுபடுவதுண்டு.

இந்த குழந்தைகள், பிற்பாடு ஏதேனும் தோல்வியை சந்திக்க நேரிட்டால், எதிர்கொள்ளும் திராணியற்றுப் போகின்றனர்.

கேட்டது கிடைக்கா விட்டால், அதற்கான விளக்கத்தை தந்து, அந்த ஏமாற்றத்தை, குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். சிறு வயதிலேயே, "இல்லை, முடியாது, கிடைக்காது' போன்ற நடைமுறை விஷய அனுபவங்களோடு, வார்த்தைகளையும் பழக்க வேண்டும். இந்த அனுபவங்கள், பின்னாளில், வெளியுலகை எதிர் கொள்ளும் போது, சரியான பக்குவத்தை பழக்கி, ஏமாற்றத்தின் பாதிப்பை குறைக்கச் செய்யும்.

இரண்டாவது காரணம், தனிப்பட்ட நபரின் சுயம் சார்ந்தது. ஒரு விஷயம் நடக்க, எந்தளவுக்கு வாய்ப்பு உள்ளதோ, அதே அளவுக்கு நடக்காமல் போகவும், வாய்ப்பு உண்டு இல்லையா? எதிர்மறை அம்சங்களும் உண்டு என்ற, யதார்த்தத்தை உள்வாங்கி கொண்டால், "எனக்கு மட்டும் ஏன் இப்படி?' என்பதான புலம்பல்கள் விலகிப் போகும்.

நம்மைச் சுற்றி நடக்கும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரம், நமக்குக் கிடையாது என்ற நிதர்சனத்தை ஒப்புக் கொள்வது, உலகிலேயே உன்னதமான உபாயம்! நடக்கும் ஒவ்வொன்றும், தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், சிலருக்கு இருக்கும். இவையெல்லாம் ஒருவகையான மனப்பான்மை பிறழ்வே. இதற்கு மனநல ஆலோசனை தேவைப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக