திங்கள், 9 ஜூலை, 2012

டெசோ மாநாட்டுக்கு எதிராகச் சென்னையில் ஆகசுட் 5- இல் இந்து ஈழ ஆதரவு மாநாடு: அர்சுன் சம்பத்

டெசோ மாநாட்டுக்கு எதிராகச் சென்னையில் ஆகசுட் 5- இல் இந்து ஈழ ஆதரவு மாநாடு: அர்சுன் சம்பத்

First Published : 09 Jul 2012 02:46:59 AM IST


வேலூர், ஜூலை 8: டெசோ மாநாட்டுக்கு எதிராக சென்னையில் ஆகஸ்ட் 5-ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் இந்து ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என்றார் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்.  வேலூரிலுள்ள ஸ்ரீ வைஷ்ணவ சிந்தாந்த மகா சங்கத்தில் ஸ்ரீ ராமானுஜரின் 1000-வது திருநட்சத்திர விழா ஆலோசனைக் கூட்டம் ஞயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியது:  ஜாதி ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து தாழ்த்தப்பட்ட மக்களை கோயில்களுக்கு அழைத்துச் சென்றவர் ராமானுஜர். 120 வயது வரை வாழ்ந்த அவரது பிறந்தநாளை மத்திய, மாநில அரசுகள் கொண்டாட வேண்டும். தொடர்ந்து இந்து சமய நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களில் கருத்துக்களைத் திணிப்பதை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும். திட்டமிட்டு ஆன்மிகவாதிகள் மீது அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.  சேலம் மேட்டூரில் விநாயகர் சிலையை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஜாதி சங்கங்கள், கட்சிகளுக்கு சாதகமானதாக உள்ளது. எனவே தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியை நிறுத்தவேண்டும். விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுவதாக இருந்த டெசோ மாநாட்டினை கருணாநிதி சென்னைக்கு மாற்றியுள்ளார்.  இந்த மாநாட்டுக்கு எதிராக அதே தேதியில் இந்தியா முழுவதுமுள்ள இந்து அமைப்புகளைத் திரட்டி சென்னையில் இந்து ஈழ ஆதரவு மாநாடு நடத்த உள்ளோம். காங்கிரசுடன் பேரம் பேசுவதற்கே கருணாநிதி டெசோ மாநாட்டை கையில் எடுத்துள்ளார். இலங்கைப் பிரச்னைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழம்தான் என்பது எங்களது கோரிக்கை. இந்திய அரசு இலங்கை மீது போர்தொடுத்து தனித்தமிழ் ஈழத்தை உருவாக்கித் தரவேண்டும்.  தாம்பரத்தில் பயிற்சி பெற்ற இலங்கை ராணுவ வீரர்கள் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது. வரும் 15-ம் தேதி ஸ்ரீராமசேனை மற்றும் கன்னட அமைப்புகளுடன் இணைந்து பெங்களூரில் இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.  நித்யானந்தர் மீது தமிழகத்தில் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சைவ சமய பயிற்சி பெற்றவர்களின் உதவியோடு அருணகிரிநாதரையும், நித்யானந்தரையும் மதுரை ஆதீன மடத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்றார் அவர்.  பேட்டியின்போது ராஜூ என்ற அரங்கநாத ராமானுஜதாசர், ஸ்ரீராம் சேவா சங்க மாவட்டத் தலைவர் பழனி, செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக