ஞாயிறு, 27 மே, 2012

1."பறை நம் மண்ணின் கலை!'. 2.மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்!

சொல்கிறார்கள்

"பறை நம் மண்ணின் கலை!'


பறை என்ற இசைக்கருவியை வாசிப்பதற்கான பயிற்சி அளிக்கும் மணிமாறன்: பறை தமிழனின் பாரம்பரிய இசைக் கருவி. உணர்ச்சியும், எழுச்சியும் மிக்கது. ஆதித் தமிழன் நமக்குக் கற்றுத் தந்த கலைப் பொக்கிஷம். பறை என்ற சொல்லை, "சொல்லுதல், தோல் இசைக் கருவி' என வரலாற்று இலக்கியங்கள் அங்கீகரித்துள்ளன. எங்கள் கலைக்குழு சார்பாகப் பறையின் புகழைப் பரப்பி வருகிறோம். அதற்காக, சில இடங்களில் பயிற்சி வகுப்புகள் மேற்கொள்கிறோம். பறையை இசைப்பது, ஆடுவது தொடங்கி, பராமரிப்பு வரை சொல்லிக் கொடுக்கிறோம். அதனுடன் ஒயிலாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள், சமூக விழிப்புணர்வு நாடகங்கள், யோகா என, பல வகுப்புகளும் நடத்துகிறோம். இறப்பிற்கோ அல்லது மது அருந்திவிட்டோ பறை அடிக்க மாட்டோம் என உறுதியளித்த பின்னரே, எங்கள் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர். இறப்பிற்கு இசைக்கவே, பறையை பயன்படுத்துகின்றனர். ஆனால், அது வாழ்விற்கான இசைக்கருவியும் கூட. திருமணம், காதுகுத்து, கோவில் திருவிழா என, நீண்டபட்டியலில் ஒன்றுதான் இறப்பிற்கு பறையை இசைப்பது. அறிவியல் வளராத அந்தக் காலத்தில், பறை இசை என்பது, பெரிய சத்தம். அந்தப் பெரும் சத்தத்தைக் கேட்ட பிறகும், இறந்ததாக நம்பப்படுபவர் எழவில்லை என்றால், அவரின் இறப்பை உறுதி செய்வர். அதனாலேயே இறப்பிற்கு பறை இசைக்கின்றனர். தன் பிள்ளைகள் பரதம், டிஸ்கோ போன்ற நடனங்கள் கற்றுக் கொள்வதைத்தான் பெற்றோர் பெருமையாக நினைக்கின்றனர். ஆனால், இந்த மண்ணின் கலையை, நம் வாழ்வுடன் இணைந்த கலையைக் கற்க அவர்கள் தயங்குகின்றனர். சென்னையில் இதுவரை இரண்டு பிராமணர்களின் திருமண நிகழ்ச்சிகளில் பறை இசைத்து இருக்கிறோம். அதுவும் திருமண அரங்கிலேயே அமைக்கப்பட்ட தனி மேடையில். இது நமக்கான கலை வடிவம். இதை இவ்வளவு காலம் தாழ்த்தப்பட்டவர்கள் தாங்கியுள்ளனர் என்பதை உணர்ந்து, எங்களுடன் மற்ற சமூகத்தினரும் கைகோர்க்கத் துவங்கியுள்ளனர்.

மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்!
பொது சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் விஜயராகவன்: குடல், வயிற்றுப் பகுதியை விட்டு வெளி யே வருவதைத் தான், ஹெர்னியா என்றழைக்கிறோம். ஹெர்னியா வந்துவிட்டால், அதை மருந்து, மாத்திரை கொடுத்து சரி செய்ய முடியாது. அறுவை சிகிச்சை தான் சிறந்தது. அதிக பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது, தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்பது போன்றவை, குடல் வயிற்றுப் பகுதியை விட்டு வெளியே வரச் செய்துவிடும். அப்போது, அறுவை சிகிச்சை அவசியம். "அப்பன்டிக்ஸ்' என்பதை, தமிழில், குடல் வால் என அழைப்போம். மனித உட லில், அதற்கென்று தனியாக வேலை கிடையாது. பெருங்குடலும், சிறு குடலும் சேரும் இடத்தில், குடல் வால் உள்ளது. இதில், ஏதாவது தொற்று ஏற்படும்போது தான், "அப்பன்டிக்ஸ்' வருகிறது. 30 சதவீதம் மருந்து மாத்திரைகளின் வழி யே, இந்தத் தொற்றைச் சரி செய்து விடலாம். வயிற்றின் கீழ்ப்பகுதியில், வலப்புறம் வலி என்பது, 24 மணி நேரத்திற்கு மேல் இருந்தால், அறுவை சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசிக்க வேண் டும். எதற்கெடுத்தாலும் பதற்றப்படுபவர்கள், உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு அல்சர் வரும். மேல் வயிற்றில் எரிச்சல், சாப்பிட்ட உடனே நெஞ்சுக் கரிச் சல், வாந்தி போன் றவை, அல்சரின் அறிகுறிகள். இதுபோன்று, தொடர்ந்து இருந்தால், மருத்துவரிடம் கட்டாயம் பரிசோதனைக்குப் போக வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், தென்னிந்தியாவில் அரிதாக இருந்த இந்தப் பித்தப்பை கல், இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது. அதிக எண்ணெய், நெய் சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவது தான், இது வருவதற்கான முதல் காரணம். சாப்பிட்ட உடனேயே, வாந்தி, மேல் வயிற்றில் வலப்பக்கம் வலி இருந்தால், பித்தப் பை கல் உள்ளது என்று அறிகுறி. வயிற்றில், மூன்று மணி நேரத்திற்கும் மேல் வலி இருந்து, வாந்தியும் இருந்தால், மருத்துவரிடம் போக வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக