வெள்ளி, 2 மார்ச், 2012

Solkirarkal : Every one should learn : "அனைவரும் படிக்க வேண்டும்!'

"அனைவரும் படிக்க வேண்டும்!' 


தயா அறக்கட்டளை யை துவக்கி, பல மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் சிவபிரகாசம்: என் சொந்த ஊர் பொள்ளாச்சி. நடுத்தரக் குடும்பம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, செலவிற்கு போக மீதி பணத்தை வைத்து, ஒரு மாணவனைத் தத்து எடுத்து படிக்க வைக்கலாம் என்று, என் பெஞ்ச் மாணவர்கள் முடிவு எடுத்தோம். அப்படி ஒரு மாதத்தில் சேர்ந்த, 8,000 ரூபாயுடன், என் துறைத் தலைவர் கோகுலகிருஷ்ணன் சாரிடம் போய் நின்றோம். அப்போது அவர், "நன்றாக படித்துவிட்டு சம்பாதித்தால், இதே போல், இன்னும் பலரை படிக்க வைக்கலாம்' என்றார். அவர் சொன்ன வார்த்தைகள் தான், என்னை வியாபாரம் செய்ய தூண்டியது. கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில், ஒரு கம்பெனியில் தேர்வானேன். இந்த வேலை மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு, எத்தனை மாணவர்களை படிக்க வைக்க முடியும் என்று யோசித்தவாறே, சமையலுக்காக தேங்காய் வாங்க கடைக்குச் சென்றேன். அங்கு ஒரு தேங்காய், 12 ரூபாய் விற்றது. அதே தேங்காய் எங்கள் ஊரில் நான்கு ரூபாய்; எவ்வளவு வித்தியாசம்? எனவே, நல்ல வருமானம் வரும் என்று எண்ணி, கிடைத்த வேலையை விட்டுவிட்டு, தேங்காய் தொழிலில் இறங்கினேன். இந்தத் தொழில் பற்றி எதுவும் தெரியாததால், ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டேன். பலர் கேலி பேசினர். பின் கொஞ்சம், கொஞ்சமாக கால் ஊன்றிய பின், என் குடும்பத்தை சென்னைக்கு அழைத்து வந்தேன். இந்தத் தொழில் மூலம் கிடைத்த பணத் தை வைத்து தான், "தயா அறக்கட்டளை' துவங்கினேன். இதுவரை, 60 மாணவர்களின் பள்ளிக் கல்விக்கு உதவி இருக்கிறோம். இன்று, முகம் தெரியாத பல நல்ல உள்ளங்கள், இந்த அறக்கட்டளையில் உறுப்பினர்களாகி, பல மாணவர்களின் படிப்பிற்கு உதவுகின்றனர். இன்று என் தேங்காய் வியாபாரமும் உயர்ந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை, அனைவரும் படிக்கணும்; அதற்கு என்னால், முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். இது தான் என் எண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக