புதன், 29 பிப்ரவரி, 2012

 சொல்கிறார்கள்



பேப்பர் பைல் மூலம், நிறைவாக சம்பாதிக்கும் ஸ்டெல்லா: எனக்கு சொந்த ஊர் தஞ்சை. என் பெற்றோர் ஆசிரியர்கள். சிறு வயதில் ஓவியம், டைப்ரைட்டிங் என்று எப்போதும், எதையாவது கற்றுக் கொண்டே இருப்பேன். கால ஓட்டத்தில், சென்னைக்கு குடிபெயர்ந்தோம். பி.காம்., முடித்துவிட்டு, வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், பசங்களுக்கு டியூஷன் எடுத்தேன். அந்த வருமானத்திலேயே திருமணத்திற்கு, 15 சவரன் நகை சேர்த்தேன். "கெட்டிக்காரப் பொண்ணு' என்று, அனைவரும் பாராட்டினர். திருமணம் முடிந்து, இரு குழந்தைகள் பிறந்த நிலையில், கணவரை விட்டுப் பிரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருந்ததால், வேலை தேடி அலைந்தேன். சுய தொழில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில், மூன்று மாதம் தையல் பயிற்சி முடித்ததும், ஆண்களுக்கான சட்டை தைத்துக் கொடுக்கும் ஆர்டர் பிடித்தேன். தையல் மிஷின்களை வாங்கிப் போட்டு தொழில் செய்ய ஆரம்பித்தேன். என்னிடம் வேலை பார்த்தவர்கள், நான் ஆர்டர் எடுத்த இடத்திலேயே வேலைக்கு சேர்ந்துவிட்டனர். இதனால், தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, தையல் மிஷின்களை விற்று விட்டேன். மீண்டும் சுய தொழில் நிலையத்தை அணுகினேன். பைல்கள் செய்யும், யோச னை கூறி, லோனும் கொடுத்தனர். தேவையான உபகரணங்கள், மூலப்பொருட்கள் வாங்கினேன். சென்னை தீவுத்திடலில், முதல் முறையாக கண்காட்சி வைத்தேன். நிறைய ஆர்டர்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து, சில கல்லூரி விழாக்களிலும் ஸ்டால்கள் போட்டதில், இளம் பெண்களின் விருப்பத்தைப் புரிந்து, அதற்கு ஏற்றாற்போல், பொருட்களை தயாரித்தேன்; நல்ல லாபம் கிடைக்கிறது. இப்படி ஒவ்வொரு அடியையும், நிதானமாக எடுத்து வைத்ததால், தோல்விகளுக்கு இடமில்லை. மாதம், 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு வருமானம் கிடைக்கிறது. என் பிள்ளைகளுக்கு, பாதுகாப்பான எதிர்காலத்தைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக