திங்கள், 26 மார்ச், 2012

Forest created by an individual in Assam

தனி நபர் வளர்த்த 550 ஹெக்டேர் காடு! அசாமிலே ஒரு பாரத ரத்தினம்

First Published : 26 Mar 2012 03:01:41 AM IST


இடாநகர், மார்ச் 25: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாதவ் பயேங் என்கிற கிராமவாசி உலக வரலாற்றிலேயே இதுவரை எவரும் செய்திராத அரும்பெரும் சாதனையை வெகு அடக்கமாக செய்து முடித்திருக்கிறார். ஆம், 550 ஹெக்டேர் பரப்பில் ஒரு காட்டையே வளர்த்திருக்கிறார். 1980 முதல் இடைவிடாமல் பாடுபட்டு இந்த அரிய சாதனையை அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் நடுப்பகுதியில் மணல் படுகையில் சாதித்துக் காட்டியிருக்கிறார்.அவருடைய இந்த சாதனையை முதலில் கண்டுபிடித்தவர்கள் அந்த மாநில வனத்துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு அவருடைய செயல் குறித்து அளவில்லாத பெருமை, மகிழ்ச்சி. அவர்களுக்கு மட்டுமா, இந்தியர்கள் என்ற வகையில் நம் அனைவருக்குமே இது அளவற்ற மகிழ்ச்சிதான். பாரத ரத்தினம் என்று அழைக்கப்பட இவரைவிடச் சிறந்தவர் நமக்குத் தோன்றவில்லை. அந்த எளிய மனிதரின் அரிய சாதனைச் சரித்திரத்தைப் பார்ப்போம்.1980-ல் தொடங்கியது: 1980-ம் ஆண்டு ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் என்ற இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் பரப்பில் சமூகக் காடுகள் வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. வனத்துறையினர் ஏராளமான மரக்கன்றுகளை ஆற்றின் நடுவில் இருந்த மணல்பரப்பில் நட்டனர். அந்த வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஜாதவ் பயேங்கும் ஒருவர். அவரை அந்தப் பகுதி மக்கள் செல்லமாக "முலாய்' என்றே அழைக்கின்றனர். இப்போது வனத்தின் உதவிக் காப்பாளராக இருக்கும் குனின் சைக்கியா அப்போது வனத்துறை இளநிலை அதிகாரியாக இருந்தார். 5 ஆண்டுகள் அந்தப் பணி தொடர்ந்து முடிந்துவிட்டது. அந்த வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்கள் வேறு பகுதிக்கு வேலைக்குச் சென்றனர். முலாய் மட்டும் அதே இடத்தில் இருந்து கன்றுகளைப் பராமரிக்க அனுமதி கேட்டார். அதிகாரியும் அனுமதி தந்தார்.அதன் பிறகு முலாயையும் அந்த திட்டத்தையும் ஓரளவுக்கு மற்றவர்கள் மறந்துவிட்டனர். முலாயோ தான் நட்ட கன்றுகள் நன்றாக வளர்கின்றனவா என்று தினமும் சென்று பார்த்ததுடன் புதிது புதிதாக பயனுள்ள நல்ல மரங்களின் கன்றுகளைத் தொடர்ந்து நட்டுக்கொண்டே வந்தார். அப்படியே அந்தக் காடு பரப்பளவிலும் அடர்த்தியிலும் வளர்ந்தது. அந்தக் காட்டை யார் வளர்க்கிறார்கள், எப்படி வளர்கிறது என்று யாருமே கவனிக்கவில்லை. முலாய் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.2008-ம் ஆண்டு சுமார் 115 யானைகள் கொண்ட கூட்டம் இந்தக் காட்டுக்குள் புகுந்துவிட்டது. அதைத் தேடி காட்டுக்குள் சென்ற வனத்துறை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஒரே வியப்பு. நம்முடைய பதிவேட்டில் இடம்பெறாதவகையில் எப்படி இங்கே இவ்வளவு பெரிய, அடர்ந்த காடு ஏற்பட்டது என்று. தேடிக்கொண்டே வந்தவர்கள் முலாயைப் பார்த்ததும் அவர் மூலம் தகவல் அறிந்து மகிழ்ச்சியிலும் பெருமிதத்திலும் ஆழ்ந்தனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த காடு வளர்ப்புக்காக அவருக்கு வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியையும் செய்யவில்லை. அதை அவர் தன்னுடைய சமூகக் கடமையாகவே செய்துவருகிறார்.அந்த காட்டுக்குள்ளேயே அவர் சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு அதில் மனைவி, 2 மகன்கள், மகளுடன் வசிக்கிறார். வருமானத்துக்கு சில பசுமாடுகளை வளர்த்து அந்தப் பாலை விற்று குடும்பச் செலவை ஈடுகட்டுகிறார். இளைஞராக இந்த சேவையைத் தொடங்கிய அவருக்கு இப்போது வயது 50-க்கும் மேல்.இந்தக் காட்டை இப்போதிருப்பதைவிட நன்றாகப் பராமரிப்பதாக வனத்துறை வாக்குறுதி தந்தால் வேறு இடத்துக்குச் சென்று இதே போல காடு வளர்ப்பில் ஈடுபட நான் தயார் என்கிறார் முலாய். இப்போது இந்தக் காட்டுக்குச் சொந்தம் கொண்டாடவும் இதை பாதுகாக்கப்பட்ட இயற்கை வனப்பகுதியாக அறிவிக்கவும் அரசியல் தலைவர்கள் முதல் அதிகாரிகள் வரை வரிசையில் பலர் நிற்க ஆரம்பித்துவிட்டனர். இந்தக் காட்டை மக்கள் ""முலாய் காடு'' என்றே அவரது பெயரால் அழைக்கத் தொடங்கிவிட்டனர்.இந்தக் காட்டில் மரங்கள் மட்டும் வளரவில்லை. காட்டு விலங்குகளும் இனப்பெருக்கம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தக் காட்டை 1,000 ஹெக்டேர் வரை விரிவுபடுத்த வாய்ப்புகள் இருப்பதை உதவிவனக் காப்பாளர் குனின் சைக்கியா தெரிவிக்கிறார்.சுற்றுலாப் பயணிகள்: இப்போது சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் இந்தக் காட்டுக்கு வருகின்றனர். பிரிட்டனின் மிகப் பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர் டாம் ராபர்ட் 2 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் காட்டுக்குச் சென்று படப்பிடிப்புகளை நடத்தினார். ஆற்றின் நடுவில் மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அபூர்வம் என்று அவர் வியந்தே போகிறார்.4 புலிகள்: இந்தக் காட்டில் 4 புலிகள், 3 காண்டாமிருகம், நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள், ஏராளமான முயல்கள், வாலில்லா குரங்குகள், எண்ணிலடங்கா பறவைகள், வாய்பிளந்து நிற்கும் வல்லூறுகள் என்று இந்த வனமே உயிரினங்களால் நிறைந்து வளர்கிறது. மிக உயர்ந்த தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, மூங்கில், ஆச்சா மரங்கள் இங்கே வளர்கின்றன. 300 ஹெக்டேருக்கும் மேல் மூங்கில் காடு மட்டுமே வளர்ந்திருக்கிறது.யானைகள் பிரசவ வார்டு: நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் இங்கு வந்து 6 மாதங்களுக்கும் மேல் தங்குகின்றன. இந்தக் காட்டில் 10-க்கும் மேற்பட்ட யானைக்குட்டிகள் பிறந்திருக்கின்றன.சில ஆண்டுகளுக்கு முன்னால் சில வேட்டைக்காரர்கள் காண்டா மிருகங்களை வேட்டையாட துப்பாக்கிகளுடன் வந்தனர். உடனே வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தந்தார் முலாய். அவர்களும் விரைந்துவந்து அவர்களைக் கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.மரங்களை வெட்டிக் கடத்தினால் எத்தனை கோடி கிடைக்கும், மிருகங்களைக் கொன்று தோலையும் நகங்களையும் பற்களையும் விற்றால் எத்தனை லட்சம் கிடைக்கும் என்று அலையும் நாகரிக மாந்தர்களிடையே மனிதரில் ஒரு மாணிக்கமாக, வனத்தைக் காக்க வந்த தேவதையாக, இயற்கையோடு ஒட்டி வாழும் வழி இதுவே என்று நமக்கு உணர்த்தும் ஆசானாக வாழும் ஜாதவ் பயேங் நம்மைப் பொருத்தவரை ஒரு "பாரத ரத்தினம்'தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக