வெள்ளி, 30 மார்ச், 2012

artist baskaran about paintings

சொல்கிறார்கள்                                                                                                                              

"மனம் பக்குவப்பட வேண்டும்!' 


ஓவியர் பாஸ்கரன்: நான் ஓவியக் கல்லூரியின் ஆசிரியராக இருந்த காலங்களில், நானும், என் மாணவர்களும் பூனையை வைத்து நிறைய படங்களை வரைவோம். ஒரு கட்டத்தில், எனக்கு பூனைகளை உற்று நோக்கும் ஆர்வம் ஏற்பட்டது. பூனைகளின் அசைவுகள், பார்வைகள் என்று அனைத்தையும் மனதில் புதிய வைத்துக் கொள்வேன். அதற்குப் பின், தூரிகை வழியாக, ஓவியமாக பூனை வரும். நான் தூரிகையை எடுக்கும் போதே, இது தான் வரைய வேண்டும், இங்கு இந்த நிறம் போட வேண்டும் என்ற, முன் தயாரிப்புகள் செய்து கொள்வதில்லை. அப்போதைக்கு என் மனதில் என்ன விதமான எண்ண ஓட்டங்கள் உள்ளதோ, அதை நான் பின்தொடர்ந்து போவேன். என் தூரிகையில் இருந்து வரும் கோடுகள், பூனையாகவும் மாறலாம்; மீனாகவும் நீந்தலாம்; மணமக்களாகவும் இணையலாம். என் படைப்பு, மற்றவர்கள் மனதில் ஏதாவது அதிர்வை உண்டாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் ஓவியத் துறையில் நுழைந்த நேரம், இந்தியாவிற்கு என்று, ஓவியத்தில் தனியான அடையாளம் இல்லாமல் இருந்த காலம். அப்போது, ஓவியங்கள் எல்லாம், ஆலமரம், மாட்டு வண்டி, மீன் கடை என்று மக்களுக்குத் தெரிந்த விஷயங்களாகவே இருந்தன. எங்கள் ஓவியங்களை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. கேலரிகளில் நடத்தப்படும், ஓவியக் கண்காட்சி தான் எங்கள் திறமைக்கான இடம். ஆனால், இன்று ஓவியம் என்பது, ஒரு முதலீடாக மாறிவிட்டது. நிறைய பேர் ஓவியங்களை ரசிப்பது மட்டுமில்லாமல், அதை வாங்கத் தயாராக இருப்பதும் மிகப் பெரிய கலாசார முன்னேற்றம் தான். என்னைப் பொறுத்தவரை, அனுபவித்து வெளிப்படுத்தும் எந்தப் படைப்பும் வெற்றி பெறும். நவீன ஓவியங்களுக்கும் இலக்கணம் உள்ளது; அது தெரிய வேண்டுமானால், பார்ப்பவர்களின் மனம் பக்குவப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக