திங்கள், 19 மார்ச், 2012

children in bars

 குடி மையங்களில் தொடு உணவு பரிமாறும் சிறுவர்கள் : எதிர்காலம் கேள்விக்குறி



குடி மையங்களில் தொடு உணவு பரிமாற சிறுவர்களை பணியில் ஈடுபடுத்து வருவது அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில், 600க்கும் மேற்பட்ட குடி மையங்கள் உள்ளன. இதில், 14 முதல் 16 வயதுக்குட்பட்டோர், வாடிக்கையாளர்களுக்கு மது வாங்கி கொடுத்தல், தொடு உணவு பரிமாறுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரும்பாலும், 8ம் வகுப்பை தாண்டாதவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களாகவே இவர்கள் உள்ளனர்.

குடி மையத்தில் தஞ்சம்:குடும்ப வறுமையால் தான் குடி மையத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என, சிறுவர்கள் கூறுகின்றனர். இவர்களின் கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. அப்பா வருமானம் போதவில்லை; அதனால் ஊத்திக் கொடுக்கும் வேலைக்கு வந்து விட்டோம் என, பலர் தெரிவிக்கின்றனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முறையான கவனிப்பு இல்லாததால் பலர் குடி மையத்தில் தஞ்சம் அடைகின்றனர்.

குடிக்கு அடிமை:வேலை கிடைத்தால் போதும் என வரும் சிறுவர்கள் , பிறர் குடித்து வைத்துச் சென்ற பாட்டில்களை வடித்து ருசி பார்க்கின்றனர். ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். 24 மணி நேரமும் மிதமான போதையில் இருப்பவர்களும் உண்டு. எதிர்காலம் குறித்த எந்த கவலையும் கிடையாது.

குடி மையங்களில் பணியாற்றும் சிறுவர்கள் பற்றி ஆய்வு நடத்தும் அறிவழகன் கூறியதாவது:குடி மையங்களில் மீசை முளைத்திடும் பருவத்தில் உள்ள சிறுவர்கள் அதிகம் உள்ளனர். ஐந்துக்கும், 10க்கும் பிச்சைக்காரர்கள் போல் கையேந்தி நிற்கின்றனர். பழங்குடியினர், நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து வரும் சிறுவர்கள் அதிகமாக உள்ளனர்.இவ்வாறு அறிவழகன் கூறினார்.

சென்னை குடி மையங்கள் ஆய்வு நடத்தியவரின் பார்வையில்...
* 6,00க்கும் மேற்பட்ட குடி மையங்கள் உள்ளன.
* ஒரு மையத்தில் இரு சிறுவர்களாவது ஊத்திக் கொடுக்கின்றனர்.
* கல்வியறிவு பெறாத குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
* வீட்டை விட்டு வெளியேறி வழி தெரியாமல் தஞ்சம் அடைவோரும் உண்டு.
* குடும்ப வறுமையால் பணியாற்றும் சிறுவர்களும் உண்டு.
* பெற்றோரே குழந்தைகளை அடகு வைத்துள்ளதும் உண்டு.
* பெற்றோர் பிரிந்ததால் ஆதரவற்ற சிறுவர்களும் உள்ளனர்.
* பொய் சொல்லி விட்டு வேலை செய்யும் சிறுவர்கள் அதிகம்.

- ஆர்.மோகன்ராஜ் - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக