வியாழன், 12 ஜனவரி, 2012

சொல்கிறார்கள்
"புடவையை ஆச்சரியமாக பார்த்தனர்!' 


தென் கொரியாவில், உலகளவிலான பல்கலைக் கழக மாணவியருக்கிடையே நடந்த அழகிப் போட்டியில், மூன்றாமிடம் பிடித்த சென்னை மாணவி ஸ்வேதா ஸ்ரீதர்: எங்க குடும்பத்தில் டாக்டர்களும், வழக்கறிஞர்களும் தான் அதிகம். அதே வழியில் வந்த நான், சட்டப்படிப்பை தேர்ந்தெடுத்தேன். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டே, விளம்பரப் படங்களில் நடித்தேன். இதன் தொடர்ச்சி தான் அழகிப் போட்டி. இது, அழகை மட்டும் எதிர்பார்க்கும் போட்டியல்ல; நீச்சல் உடையில் போஸ் கொடுப்பதெல்லாம் கிடையாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊருக்குப் போக வேண்டும். மொத்தம், 17 நாட்களில், 20 சுற்றுக்களாகப் போட்டி நடந்தது. முதல் சுற்றில், "கிம்ச்சி' என்கிற கொரியாவின் பாரம்பரிய உணவின் செய்முறையை சமைத்துக் காட்ட வேண்டும். வேக வைத்த முட்டைக்கோசிற்குள் அரைத்த மிளகாயை அடைப்பது தான், "கிம்ச்சி'யின் அடிப்படை. உலக வெப்பமயமானதால், தென்கொரியாவில் குளிரின் அளவு இப்போது அதிகமாகிவிட்டது. அதனால், உலக வெப்பமயமாதல் பிரச்னை பற்றி பேச சொன்னார்கள். தென் கொரியாவின் எல்லையில் உள்ள, "க்வாச்சன்' என்ற கிராமத்துக்கு சென்றோம். முன்பு வட கொரியாவுடனான போரில் சிதறிய, துப்பாக்கிக் குண்டுகளை உருக்கிச் செய்யப்பட்ட ஒரு மணி, அங்கே கட்டப்பட்டிருக்கிறது. அதனுடன், அவரவர் நாட்டிலிருந்து கொண்டு சென்ற கற்களைப் போட்டு, ஒரு சிறு கோபுரத்தை நிறுவினோம். இதன் மூலம், நாங்கள் அக்கிராமத்தின் அமைதித் தூதுவர்களாக அறிவிக்கப்பட்டோம். இது போன்ற பணிகளில் போட்டியாளர்கள், எவ்வளவு நேர்த்தியாக செயல்படுகிறோம் என்பது தான், வெற்றியைத் தீர்மானிக்கும். மொத்தம், 63 நாடுகளிலிருந்து மாணவியர் வந்திருந்தனர். நான் கட்டியிருந்த புடவையைப் பார்த்து, அனைவரும் ஆச்சரியப்பட்டனர். யோகா, சக்கராசனத்தில் உடம்பை வளைத்து நான் நின்றதைப் பார்த்து வியந்தனர். மொத்தத்தில், இதை ஜாலியான பயணமாகத்தான் நினைத்தேன். அந்த அணுகுமுறை தான், என்னை ஜெயிக்க வைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக