வியாழன், 12 ஜனவரி, 2012

Andaman jarawa tribe tortured to dance before the tourists

 அந்தமான் பழங்குடியினரை ஆடச் செய்து ரசித்த சுற்றுலா பயணிகள் : "டிவி' காட்சியால் யூனியன் பிரதேசத்திற்கு நெருக்கடி


போர்ட் பிளேர்: அந்தமானில் ஜாரவா பழங்குடி பெண்களை நடனமாட செய்து, சுற்றுலா பயணிகளை மகிழ்வித்ததாக செய்தி வெளியிட்ட "டிவி' நிறுவனங்களுக்கு அந்தமான் நிகோபார் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்திடமிருந்து, மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில், ஜாரவா பழங்குடியினர் வசிக்கின்றனர். இன்று வரை அவர்கள் எந்த ஆடையும் உடுத்தாமல், நிர்வாணமாகவே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலானோர் இறந்து விட, தற்போது 403 பேர் மட்டுமே இந்தத் தீவில் உள்ளனர். இந்த பழங்குடி இனத்தை பாதுகாக்கும் பொருட்டு, இவர்கள் வாழும் காட்டு பகுதியை நோக்கி செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பத்திரிகை செய்தி : இதற்கிடையே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர், இந்த பழங்குடிகளை பார்க்க சென்றதாகவும், இவர்களை அழைத்து சென்ற போலீஸ்காரர் ஒருவர், பழங்குடியின பெண்களுக்கு பிஸ்கெட்டுகளையும், இனிப்புகளையும் வழங்கி அவர்களை நடனமாட செய்ததாகவும், இதற்காக இந்த சுற்றுலா பயணிகளிடம் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் பிரிட்டனை சேர்ந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாக, காட்டுப் பகுதியில் சுற்றுலா செல்பவர்கள் வனவிலங்குகளை பார்வையிடுவார்கள். ஆனால், அந்தமானில் இந்த நிர்வாண பழங்குடியினரை பார்ப்பதற்காகவே உள்ளூர் போலீசார் உதவியுடன் "காட்டு மனிதர்' சுற்றுலா நிகழ்ச்சி நடப்பதாக பிரிட்டனை சேர்ந்த "அப்சர்வர்' மற்றும் "கார்டியன்'பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த செய்தியை மையப்படுத்தி டில்லியை சேர்ந்த இரண்டு "டிவி' சேனல்கள் பழங்குடி பெண்களின் நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பின.

சேனல்களுக்கு நோட்டீஸ் : இதுகுறித்து அந்தமான் டி.ஜி.பி., எஸ்.பி.தியோல் குறிப்பிடுகையில், "அப்சர்வர் பத்திரிகை குறிப்பிட்டுள்ள பழங்குடி பெண்கள் படம் 2002ல் எடுக்கப்பட்டது. எனினும், பழங்குடியினரை காட்சி பொருளாக்கி சுற்றுலா பயணிகளுக்கு காட்டுவது சட்டப்படி குற்றமாகும்' என்றார். பழங்குடி பெண்களின் கவுரவத்தை இழிவுபடுத்தும் வகையில், அவர்களது நடனத்தை ஒளிபரப்பிய டில்லியை சேர்ந்த இரண்டு சேனல்களுக்கு அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. "பழங்குடி பெண்களை நடனமாட செய்தவர் ஒரு போலீஸ்காரர் என்பது தவறானது. அவர் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற அங்கீகாரம் பெறாத வழிகாட்டி. இது தொடர்பாக அவர் அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அந்தமான் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

படம் பழையது : அந்தமான் நிகோபார் எம்.பி., விஷ்ணு பாதா ரே குறிப்பிடுகையில், "டிவியில் காட்டப்பட்ட பழங்குடி பெண்களின் நடன படம் பழமையானது. எனினும், இந்த காட்சியை ஒளிபரப்பியது தவறாகும். எனவே, உரியவர்கள் மீது அரசு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

அப்பட்டமான பொய் : இந்த "வீடியோ' காட்சிகளை எடுத்த "பிரிட்டிஷ்' டிவி நிருபர் சாம்பர்லின் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், "இந்த "வீடியோ' காட்சிகளை அந்தமான் தீவுகளில் சமீபத்தில் தான் படமெடுத்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன் எடுத்த பழைய காட்சி என்று அந்தமான் கவர்னர் கூறியிருப்பது அப்பட்டமான பொய். "ஜாரவாஸ்' பழங்குடியின மக்கள் இன்றும் சுற்றுலா பயணிகளால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அந்தமான் போலீஸ் அதிகாரிகளில் சிலர் சுற்றுலா "ஆபரேட்டர்'களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, பயணிகளை பழங்குடியின மக்கள் வாழும் காடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு பழங்குடியின மக்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்கின்றனர்' என்றார்.

காட்சிப் பொருளாக சித்தரிப்பதா? : மத்திய பழங்குடியினர் நல அமைச்சர் கிஷோர் சந்திர தியோ, அந்தமான் கவர்னர் புபிந்தர் சிங்கை நேற்று தொடர்பு கொண்டு, இந்த சம்பவம் குறித்து விவரமான அறிக்கை ஒன்றை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். மத்திய உள்துறை அமைச்சகமும், அந்தமான் மாநில அரசிடம் இது குறித்து ஒரு அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

சம்பவம் குறித்து கி‌ஷோர் சந்திர தியோ நிருபர்களிடம் கூறியதாவது: அந்தமானில் உள்ள பழங்குடி மக்களை காட்சிப் பொருளாக சித்தரிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மாநில அரசிடம் இந்த சம்பவம் குறித்து அறிக்கை அனுப்புமாறு கேட்டிருக்கிறேன். அடுத்த மாதம் அந்தமான் தீவுகளுக்கு சென்று, இந்த சம்பவம் குறித்து நேரடி விசாரணை நடத்துவேன். நேற்று முன்தினம் வெளிவந்த "வீடியோ' காட்சிகள் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டவை. இது, தற்போது நடந்த சம்பவம் அல்ல என, கவர்னர் என்னிடம் தெரிவித்தார். "ஜாரவா' பழங்குடி மக்கள் வாழும் தனிக்காடுகளில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி கிடையாது. அந்தக் காடுகளின் வழியாகச் செல்லும் பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு உண்டு. நான்கு அல்லது ஐந்து பஸ்கள் தொடர் வண்டியாக போலீஸ் பாதுகாப்போடு இந்த காட்டுப் பகுதியில் அனுப்பப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பயணிகள் பஸ்சை விட்டு இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கிஷோர் சந்திர தியோ கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக