வெள்ளி, 2 டிசம்பர், 2011

shall abdul kalam help to srilanka? இலங்கைக்குக் கைகொடுக்கலாமா கலாம்?

இலங்கைக்கு கைகொடுக்கலாமா கலாம்?

பதிவு செய்த நாள் : 02/12/2011


தமிழர்கள் சிங்களம் படிப்பது கட்டாயம்:
இலங்கையில் அடுத்த ஆண்டிலிருந்து சிங்களம், ஆங்கிலம், தமிழ், என மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. தமிழர்களைக் கட்டாயமாக சிங்களம் படிக்க வைக்கும் முயற்சி இது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் கலந்து கொள்வது சரியல்ல என கொந்தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.
இலங்கையில் உள்ள லட்சுமண் கதிர்காமர் நினைவிடத்தில் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், அடுத்த ஆண்டு முதல் இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெறவேண்டும். இதற்கான செயல் திட்டம் ஜனவரியில் தொடங்கப்படுகிறது. அதில் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மத்திய அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பேசி தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். இலங்கை அரசின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அப்துல் கலாம் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் தெரிகிறது. இந்நிலையில்தான் தமிழ் ஆர்வலர்கள் பலர் இதற்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
மத்திய அரசோ கபில் சிபலோ இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஒரு தமிழரான அப்துல் கலாம் இதற்கு ஆதரவளிப்பது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. தமிழர்களை கட்டாயமாக சிங்களம் படிக்க வைக்க இலங்கை அரசு சதி செய்கிறது. அதற்கு கலாம் உடந்தையாக்க் கூடாது என்று பல அமைப்புகள் கலாமுக்கு வேண்டுகோள் வைத்துள்ளன.
இந்தப் பிரச்னை குறித்து தமிழர் காப்பு கழகத்தின் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனிடம் பேசினோம்.
இலங்கையில் உள்ள சிங்கள அரசு தமிழினத்தை அழித்துக் கொண்டே தமிழை வளர்ப்பதாகவும் தமிழினத்தைக் காப்பதாகவும் தொடர்ந்து நடிக்கிறது. இலங்கையில் தமிழர் குடியிருப்பில் பத்து தமிழ்க்குடும்பங்களைச் சுற்றி நூறு சிங்களக் குடும்பங்கள் இருக்கும்படி இலங்கை அரசு கவனமாக செயல்படுகிறது. தமிழர் வாழும் நிலம் என தனியாக எதுவும் இருக்கக் கூடாது என்பதுதான் இலங்கை அரசின் எண்ணம்.
உலக நாடுகளின் தண்டனைப் பார்வையில் இருந்து தப்பிக்கவும், நிதியுதவி பெறவும் இந்திய அரசின் துணையுடன் இலங்கை பல நாடகங்களை அரங்கேற்றுகிறது. அதில் ஒன்றுதான் இந்த மும்மொழிப் பயிற்சித் திட்டம். கடந்த மாவீர்ர் நாளில் கூட, அனுராதாபுரச் சிறையில் உள்ள அறுபத்தைந்து தமிழர்களை வெளியே திடலுக்கு கொண்டு வந்து ஆடைகளை அவிழ்த்து கடுமையாகத் தாக்கியுள்ளது. இலங்கை இராணுவம். தமிழர்களை அழித்துவிட்டு யாருக்காக தமிழை வளர்ப்பதாக நாடகம் ஆடுகிறது சிங்கள அரசு? என்று ஆவேசப்பட்டார்.
தொடர்ந்து வரும் டிசம்பர் மாதத்தில் பத்து நாட்கள் யாழ்பாணத்தில் உள்ள தமிழ் ஊழியர்களுக்கு சிங்களப் பயிற்சி அளிப்பதாக அறிவித்துள்ளது இலங்கை அரசு. அதே நேரம், சிங்கள ஊழியர்களுக்கு தமிழ்ப் பயிற்சி அளிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. தமிழீழப் பகுதிகளில் பெயர்ப் பலகைகளை சிங்கள மொழியில் மட்டும் வைப்பதுதான் மும்மொழிக்கொள்கையா? மும்மொழித் திட்டம் என்று சொல்லி இந்திய அரசு இந்தியை திணித்தது போல், இலங்கை அரசு சிங்களத்தைத் திணிக்கிறது.
1956-ம் ஆண்டில் இலங்கையின் பெயரை ஸ்ரீலங்கா என மாற்றியதுடன் சிங்களம் மட்டுமே தனி ஆட்சிமொழி என அறிவித்ததுதான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தக் காரணமாக இருந்தது. இப்போது மறுபடியும் அதேபோன்ற வேலைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. அப்துல் கலாமை விழாவிற்கு அழைப்பதன் மூலம் தாங்கள் தமிழர்களை நேசிப்பது போல இலங்கை அரசு காட்ட நினைக்கிறது. இலங்கையின் இந்த அழைப்பை அப்துல் கலாம் வெளிப்படையாக மறுக்க வேண்டும். ராமேஸ்வரத்தில் பிறந்த அவர், அக்கடலோர மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு இதுவரை ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. தாம் குடியரசுத் தலைவராக இருந்தவரை, சமஸ்கிருத அறிஞர்களுக்கு செம்மொழி விருதுகள் வழங்கி வந்தவர் தமிழறிஞர்களுக்கு செம்மொழி அறிஞர் விருதுகள் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ற ஆதங்கத்தைக் கொட்டினார் திருவள்ளுவன்.
அப்துல் கலாம் பெயரை மத்திய அரசுதான் இலங்கைக்குப் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. இது குறித்துப் பேசிய திருவள்ளுவன், தமிழரை இலங்கைக்கு அனுப்பி, தமிழர் உணர்வுகளை சோதிக்க மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு கலாம் துணை போகக் கூடாது. தமிழனாக இல்லாவிட்டாலும் மனிதநேய அடிப்படையிலும், உலகெங்கும் இளைஞர்கள் அவர்மேல் நல்மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை யோசித்தும் இலங்கைக்குச் செல்லக்கூடாது. குடியரசுத் தலைவராக இருந்தவரை இந்தியனாக தன்னை காட்டிக்கொண்டவர், இனியேனும் தமிழனாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளட்டும். என்று அப்துல் கலாமுக்கு ஆலோசனை வழங்கினார்.
இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானிடம் கேட்டபோது மனிதநேய அடிப்படையில் தமிழர்களுக்காக எப்போதுமே அப்துல் கலாம் குரல் கொடுத்ததே இல்லை. அவர் இலங்கைக்குச் செல்லும் முன் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்‌ஷே அரசைக் கண்டித்து குறைந்த பட்சம் அறிக்கையாவது கொடுக்க வேண்டும். எப்போதுமே தமிழர்களிடையே பிரச்னையும், பிளவையும் ஏற்படுத்த வழக்கமாக சிங்கள அரசு செய்கிற சதிதான் இது. இந்த சதியில் அப்துல் கலாம் சிக்கிவிடக் கூடாது. ஒருவேளை அவர் இலங்கை சென்றால் அது தேவையற்ற விமர்சனங்களையும் விவாதங்களையும் கொண்டு வரும். என்று முடித்துக் கொண்டார்.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பாரா கலாம்?
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 8.12.2011







0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக