வெள்ளி, 24 ஜூன், 2011

article by pazha.nedumaran : தோழர்களுக்குத் தோள்கொடுப்போம்!

தோழர்களுக்குத் தோள்கொடுப்போம்!

First Published : 24 Jun 2011 03:45:55 AM IST


செய்லொணாக் கொடுமைகளுக்கும் திட்டமிட்ட இனப்படுகொலைக்கும் தொடர்ந்து ஆளாகி நலியும் ஈழத்தமிழர்களின் துயரமான நிலை குறித்து இந்தியாவின் சகல தேசிய இன மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு ஜூன் 18,19 ஆகிய நாள்களில் இயற்றியுள்ள தீர்மானம் அனைவராலும் வரவேற்றுப் பாராட்டத்தக்கதாகும்.  ஈழத்தமிழரின் பிரச்னை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே கவலைப்படுவதற்குரிய ஒன்று அல்ல. மாறாக, இந்தியா முழுவதும் கவலையும் அக்கறையும் கொள்ள வேண்டிய முக்கிய பிரச்னை என்பதை விளக்கும் வகையில் இந்தத் தீர்மானம் பொறுப்புணர்வோடும் தொலைநோக்குப் பார்வையுடனும் இயற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு.  இலங்கைத் தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டது குறித்து வெளிவந்துள்ள உண்மைகளை இந்திய அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.  சர்வதேசச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளைக் கொஞ்சமும் மதிக்காமல் தொடர் குண்டுவீச்சுகள் மற்றும் கொத்துக் குண்டுகள் வீசுதல் ஆகியவற்றின் மூலம் 45 ஆயிரம் தமிழர்கள் மொத்தமாகக் கொல்லப்பட்டது குறித்து விடியோ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியதோடு, அரச பயங்கரவாதத்திலும் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.  இந்த உண்மைகளை மறைப்பதற்காகவே செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், ஐ.நா. பார்வையாளர்கள், நார்வே நாட்டு அமைதிக் குழுவினர் ஆகியோர் இலங்கைக்குள் வரத் தடை விதித்திருந்தனர். எனவேதான் அப்பாவி மக்களுக்கு எதிரான மிருகத்தனமான குற்றம் தன்னார்வ விசாரணை அமைப்புகளால் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. திட்டமிட்ட முறையில் இலங்கையின் மொழிச் சிறுபான்மையினரை ஒழித்துக்கட்ட நடத்தப்பட்ட முயற்சிகள் அண்மையில் வெளியிடப்பட்ட ஆதாரபூர்வமான சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.  போரில் படுகாயம் அடைந்தவர்கள்கூட மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டதையும், ஏதும் அறியா அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் இலங்கையில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்தும் பகிரங்க விசாரணை நடத்தப்பட்டு, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, இலங்கையில் 2009 மே மாதத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்துப் பகிரங்க விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.  தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டதாகவும் 2009-லேயே போர் முடிந்து விட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், இன்றுவரை இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இன்னமும் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். இது சட்டவிரோதமான சிறைத் தண்டனையாகும்.  எனவே, இந்த முகாம்களை மூடுவதோடு அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை விடுவித்து அவர்கள் தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கும், இந்திய உதவியோடு மேற்கொள்ளப்படும் அம்மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்துத் தகவல் சேகரிக்கச் செய்தியாளர்களை அனுமதிக்க வேண்டுமென இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.  ஜூலை 7-ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு கணக்கில் எடுத்துக்கொண்டு பரிசீலனை செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய அரசை வலியுறுத்துகிறது.  இலங்கை இனப் பிரச்னைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கக் கோரியும், இலங்கைத் தமிழர்களுக்கு அகில இந்திய அளவில் ஒருமைப்பாடு தெரிவிக்கும் நாளாக ஜூலை 8-ம் நாளைக் கடைப்பிடிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இந்நாளைக் கடைப்பிடிப்பதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து செயல்பட முன்வருமாறு இதர இடதுசாரி ஜனநாயகக் கட்சிகள், சக்திகள் ஆகியவற்றுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.  போர்க்குற்றங்கள் குறித்து பகிரங்க விசாரணை நடத்தப்படுவதற்கும், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அமைதியான வகையில் தீர்வுகாணவும், இந்தியா தனது தார்மிகக் கடமையை ஆற்றுமாறு இந்தியப் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த, ஒரு குழுவை அனுப்பவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.  இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து நீதி விசாரணை வேண்டும் என டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும் தீர்ப்பளித்துள்ளன.  உலகநாடுகள் பலவும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் அனைத்துக் கட்சியினராலும் வழி மொழியப்பட்டு ஒரு மனதுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் கவலையும், பதைப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழக மக்களின் இயற்கையான உள்ளக் குமுறலை இந்திய அரசுக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவருக்கும் எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவுடன் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கும் பொறுப்புணர்வோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுவுக்கு தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரும் நன்றிகூறக் கடமைப்பட்டவர்கள்.  உரிய வேளையிலும், உரிய காலகட்டத்திலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சகல இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமையும் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் ஈழத்தமிழர் பிரச்னையில் சரியான திசைவழியைக் காட்டியுள்ளது.  ஏற்கெனவே கடந்த 2008-ம் ஆண்டு ஹைதராபாதில் கூடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரஸில் ஈழத்தமிழர் பிரச்னை குறித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தெளிவான தீர்மானம் நிறைவேற்றபட்டதை நன்றியோடு நினைவுகூர்கிறோம்.  பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனமக்கள் ஒன்றுகூடி வாழும் இந்திய நாட்டில் ஓர் அங்கமான தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் அண்டைநாடு ஒன்றில் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகும்போது, அது தமிழர்களை மட்டுமே கவலைப்படுத்துவதற்குரிய பிரச்னை எனக் கருதி பிற தேசிய இனமக்கள் பாராமுகமாக இருப்பது சரியன்று என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் அமைந்துள்ளது.  எனவேதான், ஈழத்தமிழர்களின் துயரம் சூழ்ந்த தருணத்தில் அவர்களின் விழிகளில் பெருகும் நீரைத் துடைக்க இந்திய மக்கள் அனைவரின் அன்புக் கரங்களும் நீளும் என்ற உறுதியைத் தெரிவிக்கும் வகையில் ஜூலை 8-ம் நாளை இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய மக்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் நாளாகக் கடைப்பிடிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செய்துள்ள முடிவு இந்திய அரசியலில் புதிய சிந்தனையும் கண்ணோட்டமும் பிறக்க வழி திறந்துள்ளது.  தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை அரசின் நிறவெறிக் கொடுமைக்கு ஆளாகி நலிந்த இந்திய மக்களையும் பிற கருப்பின மக்களையும் காப்பதற்காக ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் ஒட்டுமொத்த இந்தியாவும் அவர்களுக்காகக் குரல் கொடுத்துப் போராடியது. அதன் விளைவாக, துன்பக்கேணியில் சிக்கித் தவித்த அம்மக்களுக்கு மீட்சி கிடைத்தது. கிழக்குவங்க மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தபோது, இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மக்கள் மட்டுமா அவர்களுக்காகக் குரல் கொடுத்தார்கள்?  இந்திரா காந்தியின் தலைமையில் ஒட்டுமொத்த இந்திய மக்களும் அவர்களுக்காகக் கிளர்ந்தெழுந்தனர். இந்தியப் படை அனுப்பப்பட்டு கிழக்கு வங்கத்தின் அடிமை விலங்கு தகர்த்தெறியப்பட்டது.  நேருவும், இந்திராவும் காட்டிய பாதையில் இருந்து அடியோடு விலகிச் செல்லும் மன்மோகன் அரசை இடித்துக் கூறித் திருத்துவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்திய அரசு ஈழத்தமிழர் பிரச்னையில் தனது போக்கைத் திருத்திக் கொள்ளாவிட்டால், இந்திய மக்களை ஒன்றுதிரட்டி அதற்காகப் போராடுவதற்கும் தயங்கப் போவதில்லை என்பதை இத்தீர்மானத்தின் செயல்பகுதி எச்சரித்துள்ளது.  ஈழத் தமிழர்களோடு இந்திய மக்கள் எல்லா வகையிலும் ஒன்றிணைந்து நிற்க வேண்டுமென்பதை வலியுறுத்தவே ஜூலை 8-ம் நாளை ஒருமைப்பாடு தெரிவிக்கும் நாளாக அறிவித்திருப்பது, இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.  இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை தேசியக்குழு ஏற்கக் காரணமாக இருந்த தேசியச் செயலர் ராசா, தமிழகத் தலைவர்களான அ.நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோரும் அவர்களின் ஆலோசனையை ஏற்ற அகில இந்தியத் தலைமையும் தமிழர்களின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.  தமிழ்நாட்டில் இயங்கும் பிற அகில இந்தியக் கட்சிகளின் தமிழகத் தலைவர்களும் தங்கள் தலைமைகளுக்கு இவ்விதமே சரியான நிலை எடுக்க உதவவேண்டும்.  ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க தியாகப் பாரம்பரியமிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு அனைத்துக் கட்சிகளும் மனிதநேய அமைப்புகளும் கைகொடுக்க வேண்டும். தோழர்களுக்குத் தோள் கொடுப்போம்; துணை நிற்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக