திங்கள், 20 ஜூன், 2011

apart from lokpal bill : லோக்பால் மசோதாவைத் தாண்டி..உலகக்காப்புச்சட்டத்தைத் தாண்டி

நல்ல கட்டுரை. மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
லோக்பால் மசோதாவைத் தாண்டி...

First Published : 20 Jun 2011 01:20:36 AM IST


ஊழல் எனும்போது எல்லோரும் பொருளாதாரச் சுரண்டலையே குறிப்பிட்டாலும், அதனைத் தாண்டி, சமூகத்தில் உள்ள ஊழலுக்குப் பல முகங்கள் உண்டு.ஜாதியின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், அதிகார அமைப்புகளின் பெயரால், பாரம்பரியம் என்ற பெயரால், ஆணாதிக்க மனநிலையின் காரணமாக நடக்கும் சுரண்டல்கள் என்று இந்தப் பட்டியல் நீளமானது.இவற்றில், வெகுகாலமாக இந்தியாவில் தொடரும் மனிதனைக் கொண்டே மனிதக் கழிவை அகற்றும் சுரண்டல், உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியவற்றில் முதன்மையான ஒன்று.இந்த அநீதிக்கு முடிவு கட்டவே, 1993-ம் ஆண்டு, மனிதக் கழிவை அகற்ற மனிதனைப் பணிப்பது மற்றும் உலர் கழிப்பிடங்கள் கட்டுவது (தடை) சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இச்சட்டத்தின்படி, மனிதக்கழிவை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்தினால், அப்படி ஈடுபடுத்திய அரசு ஊழியர் மீதோ, நிறுவனத்தின் மீதோ அல்லது தனியாரின் மீதோ வழக்குத் தொடுத்து ஓராண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ.2,000 வரை அபராதமும் விதிக்க இடமுண்டு.எனவே, இதையடுத்து பல மாநிலங்களிலும் உலர் கழிப்பிடங்கள் தடை செய்யப்பட்டு, நவீனக் கழிப்பிடங்கள் படிப்படியாக நடைமுறைக்கு வரத்தொடங்கின. ஆயினும், கிராமப் பகுதிகளில் சிறிய அளவில் உலர் கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. எல்லாப் பொதுக்கழிப்பிடங்களையும் தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்ட ஜாதியினர்தான் குலத்தொழில் அடிப்படையில் பராமரித்து வருகின்றனர்.நம் நாட்டில், இன்றைக்கும் பெரும்பாலானவர்கள் திறந்த வெளிகளையே கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவது தான் உண்மை நிலை. தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த பல ஆண்டுகளில் பாதாள சாக்கடைகளிலும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும், மலத்தொட்டிகளிலும் இறங்கி, நச்சுவாயு தாக்கி இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரம் வரை இருக்கும் என்று உத்தேசிக்கப்படுகிறது.தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி இறந்தால் மட்டுமே, அது பத்திரிகைச் செய்தியாகிறது. ஆனால், மலம் நிரம்பிய சாக்கடைக்குள் துப்புரவுப் பணி செய்வதால், மிகமிக ஆபத்தான கிருமிகளால் தாக்கப்பட்டு, மோசமாக நோய் வாய்ப்பட்டு, அதோடு மது குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளும் சேர்ந்து இறப்பவர்கள் மிக அதிகம். ஆனால், இப்படிப்பட்ட சாவுகள் யாருடைய கவனத்தையும் ஈர்த்ததில்லை.ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளர் இறக்கும்போதும், அவரது மனைவி, இரண்டு முதல் நான்கு குழந்தைகள் வரை என்று குறைந்தது 5 பேராவது ஆதரவற்றுப் போய்விடுகிறார்கள்.இப்படிப்பட்ட பணியாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்தக்காரர்கள் மூலம்தான் நகராட்சி நிர்வாகங்களால் பணியமர்த்தப்படுவதால், கடந்த காலங்களில், சமூகப்பாதுகாப்பும், மருத்துவ உதவியும் உரிய நஷ்டஈடும் அறவே கிடைத்ததில்லை. இந்த அநீதியை முடிவுக்குக் கொண்டுவர எண்ணி, 2008-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டு, பல்வேறு ஆவணங்கள், உண்மை கண்டறியும் குழு அறிக்கைகள் உள்பட பல விவரங்கள் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டன.இதன் விளைவாக, தமிழகத்தில் உள்ள பாதாள சாக்கடைகளிலும், கழிவுநீர்த் தொட்டிகளிலும் மனிதர்களை இறக்கி அடைப்பை நீக்குவதையும், சுத்தம் செய்வதையும் தடைசெய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பராமரிப்புப் பணிகளுக்கும், அடைப்புகளை நீக்குவதற்கும் இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; உடைந்துவிட்ட கட்டுமானத்தைச் சீரமைப்பது, புதிய இணைப்புகள் கொடுப்பது உள்ளிட்ட நான்கு சிறப்புப் பணிகளுக்காக மட்டுமே தொழிலாளர்களைப் பயன்படுத்தலாம்; அப்பொழுதும், வேலை செய்யும் குழாய்களில் கழிவுநீர் சிறிதும் இல்லாமல், பம்ப் மூலம் வெளியேற்றியிருக்க வேண்டும், அதோடு விஷவாயு இல்லை என்பதைக் கருவிகள் கொண்டு உறுதி செய்திருக்க வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள், கவசங்கள் அளித்திருக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட முழுமையான தடையுத்தரவு பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதன் விளைவாக, பாதாள சாக்கடைப் பராமரிப்புப் பணிக்காக மனிதர்களைப் பயன்படுத்துவது குறைந்தது. தமிழக அரசு, பலவிதமான இயந்திரங்களை மாநகராட்சிகளின் பயன்பாட்டுக்காக வாங்கத் தொடங்கியது.ஆயினும், அதிகாரிகளின் அரைகுறை நடவடிக்கைகளால், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் சாக்கடைகள், செப்டிக் டாங்குகள் ஆகியவற்றில் தொழிலாளர்கள் இறங்கி, இறந்த சம்பவங்கள் நடந்தன.இதனால், மீண்டும் 2009-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன் விளைவாக, சென்னை உயர் நீதிமன்றம், 14 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து, நீதிமன்றத் தடை ஆணையையும் மற்ற பல துணை ஆணைகளையும் நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.அதன்படி, புது இயந்திரங்கள் வாங்குவது, விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்வது, வணிக வளாகங்களில் கழிவுநீர் இணைப்புகளைச் சீர்செய்து முறைப்படுத்துவது, ஒப்பந்தக்காரர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்குப் பயிற்சிப்பட்டறைகள் நடத்துவது உள்பட பல நடவடிக்கைகள் உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் எடுக்கப்பட்டது.உயர் நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட பல்வேறு உத்தரவுகளின் விளைவாக, இனி தொழிலாளர்கள் சாக்கடைக்குள் இறங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டால், அப்படிச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஆணை ஒன்றை 2010-ம் ஆண்டு பிறப்பித்தது.நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ், அடுத்த கட்ட வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. ""1993-ல் வெளியிடப்பட்ட சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன, இதன்படி, இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதே இல்லை.மேலும் இச்சட்டம் உலர் கழிப்பிடங்களுக்குத்தான் பொருத்தமானதே தவிர, இன்றைய நடைமுறைக்கு ஒரு போதும் உதவாது. உலர் கழிப்பிடங்களைத் தாண்டி, பாதாள சாக்கடைப் பணி, செப்டிக் டாங்குகளைச் சுத்தம் செய்வது ஆகிய புதிய இழி தொழில்களையும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.மேலும், தவறு செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுத்து உறுதியாக தண்டனை கிடைக்கும் வகையில் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும், இத்தொழிலில் ஈடுபடுபவர்களின் மாற்றுத் தொழிலுக்கும் மறுவாழ்வுக்கும், கல்வி மேம்பாட்டுக்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய ஷரத்துகள் இச்சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும், இவை எல்லாம் பழைய சட்டத்தில் இல்லை'' என்று உயர் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, பழைய சட்டத்தைத் திருத்தி, அமல்படுத்தக்கூடிய சட்டம் ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு எழுதுமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.இப்படிப் பல்வேறு முயற்சிகளின் விளைவாக, மனிதக் கழிவை அகற்ற மனிதனைப் பணிப்பது மற்றும் உலர் கழிப்பிடங்கள் கட்டுவது (தடை) சட்டம் 1993-க்குப் பதில், புதிய சட்டத் திருத்த வரைவு ஒன்று, அமல்படுத்தப்படக்கூடிய வகையில் சிறப்பான விதிகளைக் கொண்டு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற ஏழ்மை குறைப்புத்துறையின் கீழ் தயாராகி வருகிறது. ஆயினும், இதைச் சட்டமாக்குவதில் சுணக்கம் நிலவுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், இது தொடர்பாக அபிடவிட் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை மத்திய வீட்டுவசதித் துறை பொருள்படுத்தவில்லை.இதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி, இச்சட்டத்திருத்தம் தொடர்பாக, மத்திய வீட்டுவசதித் துறையின் செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.உயர் நீதிமன்ற ஆணை வந்த அடுத்த நாளே, சமூக நீதி மற்றும் சமூக நலத்துறை மாநில அமைச்சர்களின் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ""மனிதனைக் கொண்டே மனிதக் கழிவை அகற்றும் இழிதொழிலை இன்னும் ஆறு மாதங்களில் இந்திய மண்ணிலிருந்து ஒழித்துவிட எல்லோரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று பேசியுள்ளார். தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு, உடனடியாக, இந்த புதிய சட்ட வரைவை சட்டமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு, இச்சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.அதனடிப்படையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் செய்யப்பட்டு, இது தொடர்பான புதிய திருத்தப்பட்ட சட்டம், மழைக்காலக் கூட்டத்தொடரின் போதே நிறைவேற்றப்படும் வாய்ப்புள்ளது. பொருளாதாரச் சுரண்டலைத் தாண்டி, மனித மாண்பையே அழித்தொழிக்கும் இத்தகைய சமூகச் சுரண்டல், இந்திய மண்ணிலிருந்து வேரோடு அகற்றப்பட்டால் மட்டுமே, ஒவ்வோர் இந்தியனும் மனசாட்சியின் துணையுடன் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.

1 கருத்து:

  1. விரிவாகவும் தெளிவாகவும் கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றிகள்.

    ஒரு சின்ன ஆலோசனை, ஒரே பாராவாக இல்லாமல் பிரித்து சிறு சிறு பாராவாக பிரித்து எழுதி இருந்தால் படிக்க நன்றாக வசதியாக இருக்கும்.

    சொன்னது தவறு என்றால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு