செவ்வாய், 5 ஏப்ரல், 2011

muthusamy versus chandirakumar: விஐபி தொகுதி - 8: நல்லவரின் நேரம் நல்லாயிருக்கா?

ஒன்றுமி்ல்லாத கோவனின் ஆதரவு இருக்கின்றது என்றால் முத்துச்சாமிக்குத் தோல்வி உறுதி. அவரது ஆதரவு என்பது மாயை. தலைமையை எதிர்த்துப் புரட்சியாளர்போல் எண்ணிக் கொண்டு பிதற்றிக் கொண்டிருப்பார். எனவே, அவரது ஆதரவு மக்களை  எதிர் அணியினருக்கு வாக்களிக்கச் செய்து விடும். அந்தோ பாவம்! முத்துச்சாமி! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக்   காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

விஐபி தொகுதி - 8: நல்லவரின் நேரம் நல்லாயிருக்கா?


தொகுதி மறுசீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பது ஈரோடு கிழக்குத் தொகுதி. மொத்தம் 1,75,396 வாக்குகள் உள்ள இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர், முதலியார் வாக்குகள் பிரதானமானவை. தி.மு.க. சார்பில் களமிறங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.முத்துசாமி கடந்த ஆண்டுதான் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர் என்பது மட்டுமல்லாமல் அவரது மனதிலும் இடம் பெற்றவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் 1977 பேரவைத் தேர்தலில் முதல் முறையாக அ.தி.மு.க. சார்பில் இந்தத் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். பிறகு 1980 மற்றும் 1984 தேர்தல்களில் வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்றார். 1988-ல் அ.தி.மு.க. பிளவுபட்டபோது ஜானகி அணியில் இடம்பெற்றிருந்த இவர், 1989-ல் ஈரோடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் டெபாசிட் இழந்தார். அ.தி.மு.க. இணைப்புக்குப் பிறகு, 1991-ல் பவானியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றார்.1996-ல் ஈரோடு தொகுதியில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமியிடம் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற பிறகு, கட்சியில் இருந்து வெளியேறிய அவர் சில ஆண்டுகளில் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பினார். 2001 மற்றும் 2006 பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்களில் அ.தி.மு.க.வில் இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 2010-ல் தி.மு.க.வில் இணைந்தார். இதுதான் முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் அரசியல் சரித்திரம்.எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் முத்துசாமியின் இடத்தை செங்கோட்டையன் பிடித்துக்கொண்டார். முத்துசாமிக்கு 1996-க்கு பிறகு பல சவால்கள் இருந்தன. தி.மு.க.வில் இணைந்த பிறகும், இந்த சவால்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தே.மு.தி.க. சார்பில் களமிறங்கியுள்ள வி.சி.சந்திரகுமார், கடந்த பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 29 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர். கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாய வாக்குகளுக்கு இணையான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இச்சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் உள்ள சுமார் 60 தொகுதிகளில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும்தான் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஓர் அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இந்த வாய்ப்பை ஈரோடு கிழக்குத் தொகுதியில் தே.மு.தி.க. வழங்கியுள்ளது. இதனால் சமுதாய ஒற்றுமையை இந்தத் தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த வேண்டும் என்று இத்தொகுதியில் உள்ள முதலியார் சமூகத்தினரும் களமிறங்கியுள்ளனர்.விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்னை போன்றவை இத்தொகுதியில் தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய பிரச்னைகள். கொங்கு மண்டலத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் பலம் வாய்ந்த கட்சியாக கருதப்படும் கொ.மு.க.வை தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு சேர்த்தவர் முத்துசாமி. இவரை வெற்றி பெற வைப்பது தங்களது கடமை என்று கருதி இவருக்கு வீடுவீடாக வாக்குச் சேகரித்து வருகின்றனர் இந்தக் கட்சியின் நிர்வாகிகள். அ.தி.மு.க.வில் இருந்து இவருடன் வெளியேறிய தொண்டர்களும், இவர் பின்னால் அணிவகுத்துள்ளனர். ம.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் கணிசமான வாக்குகள் உள்ள தொகுதி இது. ம.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாததால், ம.தி.மு.க. மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தியின் ஆதரவாளர்கள் அமைச்சர் முத்துசாமிக்கு ஆதரவாகக் களம் இறங்கக் கூடும் என்பது அவருக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி.மேலும், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்களும் முத்துசாமிக்காகப் பிரசாரத்தில் முனைப்புடன் இறங்கி இருக்கிறார்கள்.காங்கிரஸýக்கு என்று கணிசமான வாக்கு வங்கி ஈரோட்டில் இல்லை என்றாலும், பெரியார் குடும்பத்துக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ள தொகுதி இது என்பதால், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவு அமைச்சர் முத்துசாமிக்கு நிச்சயமாக வலு சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.முத்துசாமி 1977 முதல் ஏற்படுத்தி பலப்படுத்திய அ.தி.மு.க. வாக்கு வங்கி அவருக்கு சாதகமாகத் திரும்புமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். 1989-ல் அ.தி.மு.க. (ஜா) அணியின் சார்பில் முத்துசாமி போட்டி போட்டபோது, எம்.ஜி.ஆர். வாக்கு வங்கி அவருக்கு சாதகமாக இருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆரால் ஆளாக்கப்பட்ட முத்துசாமி தி.மு.க.வில் இணைந்ததை அவருக்கு நெருக்கமான பலரே கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.அ.தி.மு.க.வுக்கு என்று இருக்கும் வாக்கு வங்கி, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான தே.மு.தி.க.வின் வாக்குகள், கணிசமான முதலியார் வாக்கு வங்கி இவையெல்லாம் தே.மு.தி.க. வேட்பாளருக்கு சாதகமாக இருக்கிறது என்றால், தி.மு.க. வேட்பாளரான முத்துசாமியின் மிகப் பெரிய சவால், தி.மு.க.வினரைத் தனக்கு சாதகமாக பிரசாரத்தில் இறக்குவது. முத்துசாமியின் வளர்ச்சி மாவட்டத்தில் தனது செல்வாக்கை பாதித்து விடும் என்று கருதும் மாவட்டச் செயலாளர் என்.கே.கே.பி. ராஜா, தனது ஆதரவாளர்களுடன் அவர் போட்டியிடும் அந்தியூர் தொகுதியில் கவனம் செலுத்துவதால், தி.மு.க.வின் ஆதரவும் முழுமையாக இல்லாமல், அ.தி.மு.க.வினரையும் விரோதித்துக் கொண்டு, இளங்கோவனின் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் முத்துசாமி.முத்துசாமி நல்ல மனிதர் என்று சொல்லாதவர்களே கிடையாது. அது வாக்குகளாக மாறுமா என்பதுதான் கேள்வி!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக