திங்கள், 1 நவம்பர், 2010

கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை


தமிழகத்தில் வானத்து நட்சத்திரங்களைப்போல மன்னர்கள் பலர் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். இலக்கியங்களிலும், செவிவழிச் செய்திகளிலும் மேலும் பலரின் பெயர்கள் உலவுகின்றன. அவர்கள் எண்ணங்களில் மட்டுமே வாழ்பவர்கள்.  சிலர் மட்டுந்தான் தங்கள் வாழ்வை, ஆட்சியை, இலக்கிய வேட்கையை, மொழிப் பற்றை, கலைத் திறனை அழியாத சின்னங்களாக்கி, நம் கண் முன்னே சான்றுகளாக விட்டுச் சென்றுள்ளனர். அந்த மிகச் சிலரில் ஒருவர் ராஜராஜன்.  ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரம் ஆண்டுகள் முடிந்துவிட்டன. தஞ்சைத் தரணியில் ராஜராஜனின் கலைப்படைப்பு கம்பீரமாய் நம் கண் முன்னே நிற்கிறது.  அண்மையில் அமர்க்களமாய், ஆடம்பரமாய் ஒரு விழா நடைபெற்று முடிந்த பின்னரும், அவரோ தான் எழுப்பிய அதிசயத்தின் அருகில் பிரதிபலன் எதிர்பாராதவரைப்போல நிற்கிறார்.  அவனியே அண்ணாந்து பார்க்கும் வகையில் கோயில் எழுப்பிய கோமானுக்கு, அந்தக் கோயிலின் வளாகத்தில்கூட இடமில்லை என்பது எத்தனை வேதனையானது?  ஆயினும் என்ன, அந்தக் கலைக்கோயிலைக் காண்போர் எல்லாம் அவருக்கு தங்கள் இதயத்தில் இடம் தந்துவிடுகிறார்கள். இதயத்தில் இடம் என்றால்... தேர்தலின்போது தொகுதி ஒதுக்க முடியவில்லை எனில் கூட்டணிக் கட்சிகளிடம் இதயத்தில் இடம் உண்டு என அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்வதுபோலல்ல. நிதர்சனமான நிரந்தர இடம்.  ஆட்சி அமைக்கக் கை கொடுத்துவிட்டு பிறகு நழுவுவது, கூட்டணியில் இருந்தாலும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லையே என புலம்பி வருந்துவது, வளம்கொழிக்கும் அமைச்சர் பதவி வற்புறுத்திக் கேட்டும் கிடைக்கவில்லையெனில், பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து மெüனம் சாதிப்பது, நாட்டு மக்களுக்கு இன்னல் எனில் மெüனத்தைக் கடைப்பிடிப்பது, வீட்டு மக்களுக்கு இன்னல் எனில் தீர்வுக்கு விடை தேடி விழுந்தடித்துக் கொண்டு ஓடுவது என இருபத்தியோராம் நூற்றாண்டு அரசியல்வாதிகள் பல்வேறு வகையான போக்குகளைக் கடைப்பிடிக்கின்றனர்.  ஆனால், ராஜராஜனோ, தனக்கு முடிசூட்டு விழா நடைபெறவிருந்த நிலையில், தானே உத்தம சோழனுக்கு முடிசூட்டி, உறுதுணையாய் இருந்து, பல ஆண்டுகள் கழிந்த பின்னரே தான் பதவிக்கு வந்திருக்கிறார் என்றால் ராஜராஜன் அல்லவா உண்மையிலேயே உத்தம சோழன்!  இன்றைக்கு அரசின் செலவில் சில ஆயிரங்களில் ஒரு திட்டப்பணி நடைபெற்றால்கூட அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா என பல விழாக்கள் நடத்தி கல்வெட்டுகளில் தங்கள் பெயரைப் பெரிய அளவில் பொறித்து, பார்த்துப் பார்த்துப் பரவசப்படுவோரைப் பார்க்க வேண்டிய பரிதாப நிலைக்கு உள்ளாகியுள்ளோம்.  சுற்றுவட்டாரத்தில் கற்களே இல்லை என்ற நிலையில், டன் கணக்கில் கற்களைச் சேகரித்து நூற்றுக்கணக்கில் கலைஞர்களைத் திரட்டி, ஓர் அதிசயம் எழுப்பிய ராஜராஜன் தன் பெயரை சில கல்வெட்டுகளில் மட்டுமே செதுக்கி வைத்திருக்கிறார் என்றால் பேர் ஆசை மீது பேராசை இல்லாத அவரைத்தான் என்ன சொல்லிப் பாராட்டுவது?  தமிழ் மீதான பற்று, இடைவிடாது நாடுகளை வென்றது மட்டுமல்ல, கரையான் அரித்த கன்னித் தமிழ் ஏடுகளைத் தேடி சமயத்துக்குச் செய்த தொண்டு என பல விதங்களில் மக்கள் மனங்களில் கலையாத புகழுடன் இன்றும் நிற்கிறார் ராஜராஜன். ஆனால், அந்தச் சோழச் சக்கரவர்த்தியின் மனதிலோ எப்போதும் "கலைக்கும்' ஒரு திட்டமிருந்திருக்கிறது.  சமய சந்தர்ப்பத்துக்குத் தக்கவாறு கூட்டணி வைத்துக்கொண்டு அடுத்தவர் ஆட்சியைக் கலைக்கும் திட்டமல்ல; கஜானாவை நிரப்ப வேண்டும் என்பதற்காக கள்ளுக்கும் மதுவுக்கும் நாட்டில் இடம் கொடுத்து, இளைஞர்கள் உள்பட குடிமக்களை குடிமகன்களாக்கி, அவர்களின் ஆறாவது அறிவையும், குடும்பத்தினரின் நிம்மதியையும், அமைதியையும் குலைக்கும் திட்டமல்ல.  இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எந்தப் பார்முலாவைப் பயன்படுத்தியாவது வாக்காளர்களின் உள்ளத்தைக் கலைக்கும் திட்டமல்ல. வழக்குகளைக் காட்டி மிரட்டியோ, கரன்சிக் கட்டுகளைக் காட்டி விலைபேசியோ எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுத்து, கட்சிகளை பல துண்டுகளாக்கிக் கலைக்கும் திட்டமுமல்ல.  அது, இப்படி ஓர் அற்புதம் உண்டா என, உலகோர் வியந்துவியந்து போற்றும் வண்ணம் உயர் கோபுரத்துடன் கூடிய உன்னதத்தைப் படைத்து, தானே கட்டடக் "கலைக்கும்' தலைவன் என காண்போரைச் சொல்லச் செய்யும் வண்ணம் செய்யும் திட்டம். அந்தக் கலைக்கோயிலால் காலாகாலத்துக்கும் தன் பெயரை நிலைக்கும்வண்ணம் செய்யும் திட்டம்.  எவ்வித நவீன அறிவியலின் வாடையும் எட்டியே பார்த்திராத அந்தக் காலத்தில், கோபுரத்தின் நிழல்கூட நிலத்தில் விழாமல் பெருவுடையார் கோயிலை நேர்த்தியாகக் கட்டிவைத்தார் ராஜராஜன்.  அறிவியல் முன்னேற்றத்தின் அத்தனை அம்சங்களும் நாய்க்குட்டியாய் வாலாட்டிக் கிடக்கும் இக் காலத்தில், நம் ஆட்சியாளர்கள் பாலம் கட்டினால், பயன்பாட்டுக்கு வரும் முன்பே அல்லவா அது சரிந்து விழுந்து விடுகிறது!  நடப்பது மன்னராட்சிக் காலம் என்றபோதும், எதிலும் தன் வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் உண்மையான மக்களாட்சியைத் திறம்பட நடத்தியவர் ராஜராஜன் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடக்கும் காலம் இது. என்றாலும், இது மன்னராட்சிக் காலமோ என நினைக்கவைக்கும் விதத்தில் எங்கும், எதிலும் வாரிசுகளின் ஆதிக்கத்துக்கே வழிசெய்து கொடுக்கும் நம் இன்றைய ஆட்சியாளர்களின் மக்களாட்சித் தத்துவத்தை என்ன சொல்வது?  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜன் சிங்கமென சிறப்பாய் படை நடத்திச் சென்று சிங்களரை அடிபணியச் செய்து சாதனை படைத்திருக்கிறார் என வரலாறு தெரிவிக்கிறது. இடைப்பட்ட இந்தக் காலத்தில்தான் தமிழனின் நிலைமை எந்த அளவுக்குப் பரிதாபமானதாக மாறிவிட்டது?  ராஜராஜனின் கல்லறை எங்கிருக்கிறது என அறிய முடியாமல் போனதுபோலவே, அந்த மறத் தமிழனின் வீரமும், ஈரமும்கூட இன்று போனஇடம் தெரியவில்லை. "சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி' என்ற பாரதியின் வரிகளுக்கு உதாரணம் கூறுமளவுக்கு அல்லவா தமிழினம் மாறிவிட்டது?  அண்டை நாட்டில் தன் சொந்தங்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டிக்காதாது மட்டுமல்ல, அந் நாட்டின் தலைவரை இங்கு வரவழைத்து பல்வேறு வகைகளில் கெüரவப்படுத்தும் செயலுக்கு சிறு எதிர்ப்புக்கூட காட்டாத இன, மொழிப்பற்றை எந்த வகையில் சேர்ப்பது?  சிங்களத்தை வென்ற ராஜராஜன் எங்கே, சிங்களத்தில் தமிழர்களை வீழ்த்த ஆவேசம் கொண்டு நின்றோருக்கு அடிபணிந்து தன் இனமாம் தமிழினம் அழிய துணை நின்ற இவர்கள் எங்கே!  சிறந்த நிர்வாகம், பாரபட்சமற்ற அணுகுமுறை, ஒளிவுமறைவற்ற ஆட்சி, கலையுள்ளம், சமயப் பொதுநிலை என எந்த வகையில், எப்படிப் பார்த்தாலும் ராஜராஜனுக்கு நிகர் ராஜராஜனே!  
கருத்துக்கள்

கட்டுரையாளர் நன்கு எழுதியுள்ளார். கடைசி 3 பத்திகளும் தடித்த எழுத்தில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இனப்பற்றுடன் எழுதியுள்ள கட்டுரையில் பார்முலா, கரன்சி முதலான அயற்சொல் எதற்கு? இக்கட்டுரை நூல்வடிவம் பெறும் எனில் திருத்தி எழுதுக. இனி வரும் கட்டுரைகளில் அயற் சொற்கள் இன்றி எழுதுக. மொழிப்பற்றைக் குறிப்பிடுபவருக்கே மொழிப்பற்று இல்லையெனில் வேறு யாரிடம்தான் மொழிப்பற்றை எதிர்பார்க்க இயலும்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/1/2010 2:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக