திங்கள், 3 மே, 2010

ஒரு பாடநூல் போதுமே!



தமிழக அரசு கொண்டுவந்துள்ள சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று தமிழக மக்கள் மனம் மகிழும் தீர்ப்பை அளித்துள்ள உயர் நீதிமன்றம், சமச்சீர் கல்வியை 2010-11 கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டுமானால், சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அந்த நிபந்தனை வருமாறு:""தமிழக பள்ளிக் கல்வித்துறை, வரும் கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை முதல் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பில் அறிமுகம் செய்யுமென்றால், அதற்கான விதிமுறைகள் என்ன என்பதை பள்ளிகளுக்கு மே 15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பாடத்துக்கும் அரசு அங்கீகரித்துள்ள பாடநூல்களின் பட்டியலை வெளியிட வேண்டும்''சமச்சீர் கல்வியை அனைத்து பள்ளிகளும் நடைமுறைப்படுத்துவதற்கான நிபந்தனைகளை மே 15-ம் தேதிக்குள் அறிவிப்பது தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கடினமான செயல் அல்ல. அதேபோன்று, ஒவ்வொரு பாடத்துக்கும் அரசு அங்கீகரித்துள்ள பாடநூல்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் நிபந்தனையை நிறைவேற்றுவதும் கடினம் அல்லதான். இருப்பினும், அவ்வாறு புத்தகங்களைப் பட்டியலிட்டால், பாதிக்கப்புக்குள்ளாகப்போவது பெற்றோர் மட்டுமே என்பதை நீதிமன்றம் புரிந்துகொள்ளும்வகையில் தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.ஒரு பாடத்திட்டத்துக்கு பல்வேறு பாடப்புத்தகங்களைத் தேர்வு செய்யும் உரிமை (இட்ர்ண்ஸ்ரீங் ர்ச் ம்ன்ப்ற்ண்ல்ப்ங் பங்ஷ்ற்க்ஷர்ர்ந்) பள்ளிக்கு வழங்கப்பட வேண்டும் என்பது கல்லூரிப் பாடத்திட்ட அளவில் வேண்டுமானால் சரியானதாகவும் நியாயமானதாகவும் இருக்கலாம். கல்லூரிப் படிப்பில், பாடத்திட்டத்தை மட்டும் (நஹ்ப்ப்ஹக்ஷன்ள்) வெளியிட்டால் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பேராசிரியர்கள் எழுதிய நூல்களைத் தெரிவுசெய்து, அல்லது ஆசிரியர் ஆலோசனையைப்படி தேடிப் படித்து தேர்வு எழுதும் முறை கல்லூரிகளுக்குப் பொருத்தமானது. ஆனால் பள்ளிகளில் அதற்கான தேவை இல்லை.பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய பல்வகை பாடநூல்களில் ஒன்றைத் தேர்வு செய்ய உரிமை கேட்பது பள்ளி நிர்வாகத்தின் விருப்பம் மட்டுமாகவே இருக்குமே தவிர, பெற்றோரின் விருப்பமாக இருக்காது. ஏனெனில், குழந்தைகள் அதுபற்றி ஏதும் அறியாதவர்கள். ஆசிரியர்களோ பள்ளி நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டு வாய்மூடி இருப்பவர்கள். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும், பிளஸ் டூ வரை அனைத்து பாடநூல்களும் தமிழக அரசினால் இலவசமாக அளிக்கப்படும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு பாடநூல்களை அரசு பட்டியலிடுமானால், இந்தத் தனியார் பள்ளிகள் அரசின் பாடநூல்களை வாங்காமல், கொள்ளை லாபத்துக்கு விலை வைத்து விற்கும் வடஇந்திய பதிப்பகங்களின் பாடநூல்களை குழந்தைகளின் மீது திணிப்பார்கள். இதனால் ஒவ்வொரு பெற்றோரும் ஒரு குழந்தைக்கு ரூ.1000 வரை செலவழிக்க நேரிடும். இந்த உண்மையை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் உள்ளது. தமிழக அரசு இந்த நிபந்தனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் பெற்றோர் அனைவரும் இதற்கு ஆதரவாக மனு கொடுத்து தங்களையும் வழக்கில் சேர்த்துக்கொள்ளும்போதுதான், தமிழகத்தில் தனியார் பள்ளிகள் எத்தகைய வியாபாரத்தைச் செய்துகொண்டிருக்கின்றன என்பது நீதிமன்றத்துக்கு தெள்ளத் தெளிவாகப் புரியும். தனியார் பள்ளிகள் மெய்யாகவே தங்களிடம் படிக்கும் குழந்தைகளின் கல்வித் திறன் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய பல்வகை பாடநூல்களின் பட்டியலைக் கேட்பதாகச் சொல்வார்களேயானால், தமிழக அரசு அச்சிட்டுத் தரும் பாடநூல்களைப் பெற்றுக்கொண்டு, தங்கள் சொந்தச் செலவில் எத்தனை பாடப்புத்தகங்களையும் பள்ளி நூலகத்திலேயே வாங்கி வைத்து, குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதை யார் தடுத்தார்கள்? அந்தச் செலவை பெற்றோர் மீது சுமத்தி, லாபம் பார்ப்பதைத் தவிர, வேறு நோக்கம் இந்தத் தனியார் பள்ளிகளுக்கு உண்டா?முதல் வகுப்பிலும், 6-ம் வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும் அறிவிக்கப்படும் பாடத்திட்டத்தில், எத்தனைவிதமான பாடநூல்கள் இருந்துவிட முடியும். அவை வடிவம், வண்ணம், படங்களின் எண்ணிக்கை, அச்சு மற்றும் காகிதத்தின் தரம் இவற்றால் மட்டுமே வேறுபட்டிருக்க முடியுமே தவிர, அடிப்படையான கல்வியைப் பயிற்றுவிப்பதில் என்ன பெரிய வேறுபாட்டை இந்தத் தனியார் புத்தகங்கள் செய்துவிடப் போகின்றன! அப்படியே அரசும் அங்கீகரிக்கப்பட்ட பாடநூல் பட்டியலை வெளியிட்டு, அவை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் நிர்ணயிக்கும் விலையில்தான் விற்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டால், இந்த பல்வகை பாடநூல்களை விற்க வரும் வடஇந்திய புத்தக நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளுமா, அவை தமிழகத்தில் கடை விரிக்குமா? தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்போல பாடநூல்களை வாங்கும் உரிமை அளிக்கப்படுமேயானால், சமச்சீர் கல்வியின் அடிப்படை நோக்கமான சமூக நீதிக்கு குந்தகமாக அமையும். தமிழகத்தில் தனியார் பள்ளிகள் வெறும் பாடநூல்களில் மட்டுமல்ல, நோட்டுப் புத்தகங்கள், சீருடை விற்பனை, ஷூ, விளையாட்டு பாடப்பிரிவுக்கு கான்வாஸ் ஷூ, காலணி விற்பனை ஆகியவற்றையும் நடத்தி லாபம் பார்க்கின்றன என்பதால் தமிழக அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தும் நிபந்தனைகளை தெளிவாகவும் விரிவாகவும் நிர்ணயிக்க வேண்டும். அதாவது,தமிழகத்தில் படிக்கும் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும், அது எந்த மொழிவழிக் கல்வி என்ற போதிலும், ஒரே விதமான பாடத் திட்டம்,ஒன்றே போன்ற பாடநூல்கள், ஒரே நிறத்திலான சீருடை,ஒரே விதமான கல்விக் கட்டணம்,ஷூ, டை ஆகியவற்றுக்குத் தடை,பள்ளியில் நோட்டுப்புத்தக விற்பனைக்குத் தடை,அதே பள்ளி ஆசிரியரிடம் தனிவகுப்பு பயிலத் தடை,ஒரு விதமான விண்ணப்பப் படிவக் கட்டணம்,எல்லாப் பள்ளியிலும் பெற்றோர்-ஆசிரியர் கழகம் ஆகியவற்றைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திடப் பள்ளிக் கல்வித் துறை முன்வருமேயானால், தமிழகத்தில் இன்றைய பெற்றோர் மட்டுமல்ல, நாளைய தலைமுறையும் நன்றியுடன் இந்த அரசை நினைவுகூரும். தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கு ஏதோ, அரசுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் மட்டுமே தொடர்புடையதாக எண்ணி விலகி நிற்காமல், பெற்றோரும் தங்களை வழக்கில் இணைத்துக் கொண்டு , வாதத்துக்கு வலு சேர்க்க வேண்டும்.
கருத்துக்கள்

மிகச் சரியாக ஆய்ந்து எழுதியுள்ளீர்கள்.பள்ளிக் கல்வித் துறை ஏன் இவற்றைக் கவனத்தில் கொள்ள வில்லை எனத் தெரியவில்லை. வழக்கில் அரசு கோட்டை விட்டாலும் விடலாம். எனவே தினமணி பொதுநலன் கருதித்தன்னையும் வழக்கில் சேர்த்து வாகை சூடவேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/3/2010 3:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக