வியாழன், 31 அக்டோபர், 2024

தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!-இலக்குவனார்திருவள்ளுவன்

 



தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!

தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள்  என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும்.  வரலாறு, இலக்கியம் சார்ந்து இந்தக் கட்டுரை சொல்லும் நுட்பமான அரிய தகவல்கள் தீபாவளியின் வரலாறு குறித்த ஒரு புரிதலைத் தருகிறது;

விசய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல் தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு  வந்த தீபாவளி. நேரடியாக இல்லாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்தது. பரதக்கண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தீபாவளி என்ற சொல் தமிழ்ச் சொல்லே அல்ல” என்று பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் தன்னுடைய ‘அறியப்படாத தமிழகம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதும் கவனத்திற்கு உரியதாகும்..

முதலில் நாம் தீபாவளிபற்றிய கதைகளைப் பார்ப்போம்.

வால்மீகி இராமாயணத்தில் இராமன்  தனது வனவாசத்தை முடித்துச் சீதையுடனும், இலட்சுமணனுடனும் அயோத்திக்குத் திரும்பினான். அந்த நாளை மக்கள் மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி கொண்டாட்டமாக வரவேற்றார்கள். மிதிலை நகரம் மக்கள் ஏற்றிய ஒளி வெள்ளத்தில் மிதந்த அந்த நாளே  தீபாவளி என்பது ஒரு கதை.

கேதாரம் என்றால் பாலி மொழியில் விளை நிலம் எனப் பொருள். இமய மலையில் இருந்த ஒரு விளைநிலம் சிவனின் தலமாகக் கருதப்பட்டதால் கேதாரம் என்றால் சிவதலம்/ சிவன் என்றானது. ஒரு நாட்டிய முடிவில் பிருங்கி முனிவர் பார்வதியை விட்டு விட்டுச் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். இதனால் பார்வதி 21 நாள் நோன்பு இருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் சிவன் பார்வதியை – கெளரியை –த் தன்னில் பாதியாக ஏற்று மங்கையொரு பாகன் ஆக மாறினார். இந்த நாள் இறைவனை வழிபடும் சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. நோன்பு இருந்து கேதார கெளரியாக (சிவன் பார்வதி இணைவாக) மாறிய இந்நாளே தீபாவளி என்பது மற்றுமொரு கதை.

“நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்கிறது.

“பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்”

என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து (அடி 7-8) கூறுகிறது. இவற்றுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட கதையே இக்கதை.

நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் தீபாவளி என்பது ஒரு கதை. இவனது உண்மைப் பெயர் பவுமன். திருமால் பன்றித் தோற்றம் எடுத்துப் பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றாராம். அப்பொழுது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் தான் நரகாசுரனாம். அசுரர்களை வதம் செய்த பொழுது பிறந்ததால் அசுரர்களின் குணம் வந்து விட்டதாம். எனவே, நரன்(மனிதன்)+அசுரன் நரகாசுரன் எனப்பட்டானாம். அசுரர்களை வதம் செய்த பொழுது பிறந்தவனுக்கு வதம் செய்த திருமாலின் குணம் தானே வந்து இருக்க வேண்டும்? இவன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தானாம். ஆகவே, சத்தியபாமாவாக இருந்த பூமாதேவியால் கொல்லப்பட்டானாம்.


கிருட்டிணன், நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் நாளை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி  கொண்டாடப்படுவதாக ஒரு கதை. ஆரியக் கதைகளின்படி முறையற்ற முறையில் கொன்றவன் அருளால் கொல்லப்பட்டவன் இறந்த நாளை மக்கள் கொண்டாட வேண்டும்!

நீத்தார் நினைவுநாள் இறுதிச் சடங்கில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் தமிழர்களின் வழக்கம். தீபாவளியன்று தமிழ்நாட்டில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இதனைப் பின்பற்றுகின்றனர்.

புரட்டாசி மாதம்  எம உலகிலிருந்த வந்திருந்த முன்னோர் நினைவாக அவர்களுக்குப் படையலிட்ட பின், ஐப்பசியில் அவர்கள் மீளவும் எம உலகம் செல்வர். அப்பொழுது, அப்பாதையில் வெளிச்சம் இருக்க வேண்டுமாம். வந்த பொழுது இருட்டிலேயே வந்தவர்களுக்குப் போகும்பொழுது வெளிச்சம் தேவைப்படுகிறது போலும். எனவே, வீட்டு வெளி வாசலில் தென்திசை நோக்கி முன்னோர் ஒவ்வொருவருக்கும் ஒரு விளக்கு என்ற முறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். எனவே, முன்னோர்களுக்காகக் கடைப் பிடிக்கப்படும் நீத்தார் நினைவு நாள்தான் தீபாவளியாக மாற்றப்பட்டது என்ற கூற்றும் உள்ளது.

சமண மதத்தின் 24ஆவது அருகன் (தீர்த்தங்கரர்) வருத்தமான மகாவீரர் வீடு பேறடைந்த இந்த நாளில் இன்றும் சமணர்கள் இல்லங்களில் வரிசையாக விளக்குகளை ஏற்றி ஒளி விழா கொண்டாடுகின்றனர். இது இந்துக்களுக்கு  தீபாவளி எனப்படுகிறது.

பிராமணிய மதத்திற்கு மாற்றாக வந்ததே சமண மதம். சமணர்களின் இருபத்து நாலாவது தீர்த்தங்கரரான வருத்தமான மகாவீரர், பாவாபுரி நகர அரசனுடைய அரண்மனையில் இரவு முழுவதும் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதிகாலையில் சொற்பொழிவு முடிவடைந்த நிலையில் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே வருத்தமான மகாவீரர் இறைவனோடு கலந்தார்.

உலகுக்கு ஞான ஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை  வழிபடும் வகையில், அவர்  வீடுபேறடைந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி அன்று முதல் இன்று வரை சமணர்கள் கொண்டாடும் விழாவே தீபாவளி. சமண மதம் பலவீனம் அடைந்த பிறகு, சமணர்கள் கணிசமாக இந்து மதத்தில் சேர்ந்த பிறகும் தீபாவளியைக் கொண்டாடினர். அவர்களை  பார்த்தே இந்துக்களும் தீபாவளியைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.” என்று மயிலை சீனி. வேங்கடசாமி  ‘சமணமும் தமிழும்’ என்ற நூலில் கூறியுள்ளார்.

ஐப்பசி மாதம் தேய்பிறை 14ஆம் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் நரக சதுர்தசி என்கின்றனர். அஃதாவது காருவாவாகிய அமாவாசை அன்று கொண்டாடாமல் அதற்கு முதல்நாளே இக்கதையின்படி தீபாவளி கொண்டாடப்படுகிறது.

கி.பி.1117 இல் சாளுக்கிய திரும்புவன மன்னன்சாத்துயாயர் என்னும் அறிஞருக்கு ஆண்டுதோறும் தீபாவளிப்பரிசு வழங்கியதாகக் கன்னடக் கல்வெட்டு ஒன்றுகூறுகிறது. கி.பி.1250இல் மராத்தியில் எழுதப்பெற்ற நூல் (இ)லீலாவதி. இதில்எண்ணெய் தேய்த்து நீராடுது பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.

தமிழர் திருநாள் நான்கு நாள் கொண்டாடப்படுவது. இதற்குப் போட்டியாக ஐந்து நாள் விழாவாகத் தீபாவளி உருவாக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.

வடநாட்டு ஆண்டுத் தொடக்கம் சைத்திர/சித்திரை மாதம் மார்ச்சு 21 அல்லது 22 வருகிறது. எனவே, அம்முறைப்படி கார்த்திகை மாதம் அக்டோபர் 23இல் தொடங்குகிறது. நமக்கு ஏப்பிரலில் சித்திரை தொடங்குவதால் அப்பொழுது ஐப்பசி தான். எனவே, வடவர்கள் வடநாட்டில் அவர்கள் கார்த்திகைப்படி கார்த்திகை நாளைக் கொண்டாடினர். நமது விழாதான் அது என்பதை உணராத நாம்  அயலவர்கள் விழா, பழக்க வழக்கம் போன்றவற்றில் பிடிப்பு உள்ள நாம், அக் கார்த்திகையைத் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

அயோத்திதாசப் பண்டிதர் பெளத்தர்கள் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி கார்த்திகை மாதத்து முழுநிலவு நாளிலே தீபமேற்றி, ஈகை அளித்து இறைவழிபாடு செய்தனர் என்று ஒரு கதையின் அடிப்படையில் குறிப்பிடுகிறார்.

தமிழில் உள்ள விளக்கு வரிசையே மறு பெயரில் தீபம் ஆவளியாக – வரிசையாக-க் கூறப்பட்டுத் தீபாவளி என்றானது. எனவே, தீபாவளி என்பது கார்த்திகை விளக்கு வரிசை தான்.


கார்த்திகை விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறித்த ஒரு பாடலைப் பார்ப்போம்.

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட

தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,

புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-

தூதொடு வந்த, மழை.

என்கிறார் புலவர் கண்ணங் கூத்தனார்(கார்நாற்பது, 26); இப்பாடலில் கார்த்திகையில் விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறிப்பிட்டு, அதுபோல் எங்கும் பூக்கள் வரிசையாகப் பூத்துள்ளன என்கிறார்.

கார்த்திகை ஒளிநாள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தொன்மையான விழாவாகும். கார்த்திகை குறித்துத் தொல்காப்பியத்திற்கும் முந்தைய இலக்கியமான மலைபடுகடாம் தெரிவிக்கிறது. நற்றிணை, சீவகசிந்தாமணி, முதலான இலக்கியங்களும் கார்த்திகைபற்றிக் கூறுகின்றன. எனவே தான், ‘தொல் கார்த்திகை நாள்’ என்கிறார் திருஞானசம்பந்தர்.

இலக்கியங்கள் கூறுவனவற்றில் இருந்து பருவநிலை மாற்றத்திற்கேற்பக் கொண்டாடிய இயற்கை விழாவாகத்தான் கார்த்திகை நாளைக் கொண்டாடினார்கள் என்பது உறுதியாகிறது. ஆனால், பின்னர் இதற்கும் கதை கட்டினார்கள். சிவனின் அடியையும் முடியையும் தேடித் தோற்ற நான்முகனும் திருமாலும் வேண்டியதற்கிணங்க  சிவன் ஒளிப்பிழம்பாகத் தோன்றியதாகக் கூறிக் கதை சொன்னர். சிவன் ‘திரிபுராசுரர்’ என்று அழைக்கப்படும் கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி ஆகிய மூவரைக் கொன்ற நாள் தான் கார்த்திகை என்றனர்.

தமிழ் நூல்கள் போல்  கல்வெட்டுகளும், கார்த்திகைப் பெருவிழா கொண்டாடியதை எடுத்துக் கூறுகின்றன.  சான்றாக, முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சியில், கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் விளக்கெரித்ததற்குப் பதினாறு நாழி நெய்க்காகப் பதினாறு ஆடுகளைத் திருப்பாற்றுத்துறை மக்கள் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்துள்ளனர். இதனை  கி.பி.1021 ஆண்டு கல்வெட்டொன்று தெரிவிக்கிறது.

`குமரி முதல் இமயம் வரை முழுமையும் தமிழ்நிலமாக இருந்த பொழுது கார்த்திகையில் கொண்டாடப்பட்ட ஒளிவிழா பின்னர் வடக்கே  தீபாவளியாயிற்று. ஆவளி என்றால் வரிசை. விளக்குகளை / தீபங்களை வரிசையாக ஏற்றி வைப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் வந்தது. வடக்கே நமது ஐப்பசியில்  இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது தெற்கே புதிய மற்றொரு விழாவாக மாறி ஏற்கப்பட்டுள்ளது.


நமது கார்த்திகை தான் தீபாவளியாக மாறித் திரும்பி வந்துள்ளது என்பதை உணரலாம்.

கார்த்திகை நம் விழா! தீபாவளி இரவல் விழா!

கட்டுரையாளர்;  இலக்குவனார் திருவள்ளுவன்,

தமிழ் ஆய்வாளர், மற்றும் எழுத்தாளர்

‘ஆட்சித் தமிழ், அறிவியல் தமிழ் தொடர்பான பல நூல்களின் ஆசிரியர். ’அகரமுதல’ மின்னிதழின் ஆசிரியர்.
https://aramonline.in/19663/history-of-deepawali-karthigai

புதன், 30 அக்டோபர், 2024

தமிழ்க்காப்புக்கழகம் – ஆளுமையர் உரை 114 & 115 ; என்னூலரங்கம்


நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.  

(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641)

தமிழே விழி!                              தமிழா விழி!            

நிகழ்வு நாள் : ஐப்பசி 17, 2055

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

“தமிழும் நானும்” – உரையாளர்கள்

நிறுவனத் தலைவர், பாரதி தமிழ்ச் சங்கம்

தலைவர் ,தலைநகர் தமிழ் மன்றம்

இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய

வெள்ளி, 18 அக்டோபர், 2024

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 112 & 113 ; என்னூலரங்கம்

 




பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர். 

 (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௯ – 649) –––

தமிழே விழி!                  தமிழா விழி!             

நிகழ்வு நாள் : ஐப்பசி 03, 2055

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

தி.இரா.நி். (எசு.ஆர்.எம்.) கலை அறிவியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர்.

செவ்வாய், 15 அக்டோபர், 2024

தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – ம.இராசேந்திரன் உரை

 




கனடா நாட்டின் தொல்காப்பிய மன்றமும் தமிழ் நாட்டின் இலக்குவனார் இலக்கிய இணையமும்  இணைந்து  கடந்த திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (20, 21, 22-09-2024) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினைச் சிறப்புற நடத்தியுள்ளன..

இந்நிகழ்வின் தொடர்ச்சியாகச்,   சென்னை  எழும்பூரில் தே.ப.ச.(ICSA) மைய அரங்கத்தில் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் இலக்குவனார் தொல்காப்பிய விருதுகள் வழங்கு விழாவும் நூல்கள் வெளியீடும் நடைபெற்றன.

விழாவின் தலைவரும் இலக்குவனார் இலக்கிய இணைய ஒருங்கிணைப்பாளருமான தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன், நிகழ்ச்சிகள் தொடங்கும் முன் மறைந்த முரசொலி செல்வம், தலைநகரத் தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் புலவர் த.சுந்தரராசன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதும் அனைவரும் எழுந்து அமைதி அஞ்சலி செலுத்தினர்.

இலக்குவனார் திருவள்ளுவன் தம் தலைமையுரையில் கனடாத் தொல்காப்பிய மன்றத் தலைவர் முனைவர் சிரீதாசு செல்வநாயகி தலைமையில் சிறப்பாகக் கனடாவில் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். இதன் தொடர்ச்சியாக இங்கே இலக்குவனார், தொல்காப்பிய விருதுகள் வழங்கலும் இரு நூல்கள் வெளியீடு, தொல்காப்பிய ஆன்றோர் நாட்காட்டி வெளியிடலும் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். தமிழ் நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கருநாடகா, கனடா வில் இருந்தும்  தொல்காப்பிய அறிஞர்கள் இருபத்திருவர் தெரிந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

விருதாளர்களையும் பல்வேறு மாட்டங்களி்ல் இருந்து வந்துள்ள தொல்காப்பிய அறிஞர்களையும் தமிழ் ஆன்றோர்களையும் தமிழன்பர்களையும் வரவேற்றுக் கவிஞர் தமிழ்க்காதலன் உரையாற்றினார்.

இலக்குவனார் திருவள்ளுவன் படைப்புகளான ‘தமிழ்ச்சிமிழ்-தொல்காப்பியம்’, ‘தொல்காப்பியமும் பாணினியமும்’  ஆகிய இரு நூல்களையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள் பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு வெளியிட்டார். தமிழ்ச்சிமிழ் நூலில் தொல்காப்பியம் தொடர்பான சிறப்பான மேற்கோள்களையும் அந்நூல் குறித்த விவரங்களையும் சிறப்பாகத் தொகுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தொல்காப்பியமும் பாணினியமும் நூலில்  தொல்காப்பியத்தின் சிறப்புகளையும் இல்லாச் சிறப்புகளைக் கூறிப் பாணினியத்தை உயர்த்திக் கூறுவதையும் ஆய்வு முறையில் வெளிப்படுத்தியுள்ளார் எனப் பாராட்டினார்.

இவ்விரு நூல்களையும் முறையே பேரா.முனைவர் மரிய தெரசாவும் தமிழ்த்தொண்டர் சுப வேல்ராசாவும் பெற்றுக் கொண்டனர்.

தொல்காப்பிய ஆன்றோர்கள் முப்பதின்மர் ஒளிப்படங்கள் அடங்கிய 10/2024-12/2028 இற்கான நாட்காட்டியை மேனாள் தேர்தல் ஆணையர் முனைவர் சோ.அய்யர்  இ.ஆ.ப. .(ப.நி.), வெளியிட்டார். வாசுகி கண்ணப்பன் அறக்கட்டளைத் தலைவர் கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன் பெற்றுக் கொண்டார்.

அடுத்து உரையாற்றிய பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், இலக்குவனாரின் தமிழ்ப்பணிகளையும் போராளிப் பண்புகளையும் செயற்பாடுகளையும் பாராட்டிப் பேசினார்.

தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் விழா பேருரை யாற்றினார். பாதுகாப்புச்சட்டப்படி கைதான ஒரே ஒரு தமிழாசிரியர் இலக்குவனார்தான் என்னும் வரலாற்று உண்மையை எடுத்துரைத்தார். அரசின் ஆட்சிமொழிக் கொள்கையையும் தமிழ்வழிக் கல்வியையும் நிறைவற்ற தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம் மேற்கொண்டதற்கே சிறைவாசம் என்றால் இஃது என்ன நியாயம் என்று கலைஞர் கேட்டார் என்றார். ‘நெஞ்சுக்கு நீதி’ தன் வரலாற்று நூலில் தனக்குத் தமிழ் உணர்வையும் தன்மதிப்பு உணர்வையும் ஊட்டியவர் இலக்குவனார எனக் கலைஞர் குறிப்பிட்டுள்ளார் என்றார். தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிட்ட தென்குமரி என்பது இன்றைய குமரி அல்ல. கடல் கொண்ட குமரிக்கண்டம் என்று விளக்கினார்.   நுண்ணிய தமிழ்நூல்களுக்கான கடவுச்சொல்லைத் தந்து சென்றவர்கள் தொல்காப்பியரும் திருவள்ளுவரும். இரு கடவுச்சொற்களையும்  ஒரு சேர இணைத்துத் தந்தவர் இலக்குவனார் என்றார். இலக்குவனார் விருதுகள் தொல்காப்பிய விருதுகள் பெறும் அனைவரையும் வாழ்த்தினார்.

பின்னர் விருதுகள் வழங்கப் பெற்றன. இலக்குவனார் விருதாளர்களுக்குப் பொறி.இலக்குவனார் திருவேலன் பொன்னாடை அணிவிததார். தொல்காப்பிய மணி, தொல்காப்பியச் சுடர், தொல்காப்பிய இளமணி விருதாளர்களுக்குப் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பொன்னாடைகள் அணிவித்தார். முனைவர் ம.இராசேந்திரன் விருதுக் கேடயங்களை வழங்கினார்.

  தொல்காப்பியம் குறித்து ஆங்கிலத்தில் நூலும் கட்டுரைகளும் எழுதியுள்ள, தொல்காப்பியப் பாமாலை எழுதி அதை நாட்டியமாக அரங்கேற்றச் செய்த முனைவர் பொ.நா.கமலா

தொல்காப்பியம் குறித்து ஆங்கில நூல்களும் கட்டுரைகளும் எழுதிய,  தொல்காப்பியரைப் பிறநாட்டு அறிஞர்களுடன் ஒப்பிட்டு ‘ஒப்பில் தொல்காப்பியம்’ படைத்த முனைவர் ப. மருதநாயகம்

கனடாவில் கடந்த 9 ஆண்டுகளாகத் தொல்காப்பிய மன்றம் நடத்தி வருவதுடன் தொல்காப்பிய வகுப்புகள் எடுத்து வருபவரும் முதலாவது உலகத்  தொல்கா்பபிய ஆராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவருமான முனைவர் செல்வநாயகி சிரீதாசு . இவர்களுக்கான விருதைக் கனடாவில் இருந்து வந்திருந்த முனைவர் இல.சுந்தரம் பெற்றுக்கொண்டார் அவர் கனடாவில் நடைபெற்ற தொல்கா்பபிய மாநாடு குறித்துக் கூறியதுடன் மாநாட்டு மலர், கருத்தரங்கக் கட்டுரை மலர், தொல்காப்பியர் சிலை ஆகியவற்றை முனைவர் ம.இராசேந்திரன், பெருங்கவிக்கோ, முனைவர் சோ.அய்யர் இ.ஆ.ப.(ப.நி.), இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோருக்கு வழங்கினார்.

கணவர் முனைவர் க.ப.அறவாணனுடன் இணைந்து தொல்காப்பியக் களஞ்சியம் உருவாக்கிய முனைவர்  தாயம்மாள் அறவாணன்

தொல்காப்பியக் கால ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவரும் செம்மொழி நிறுவனம் மூலம் தொல்காப்பியம தொடர்பான ஆய்வுகளுக்கும் மொழிபெயர்ப்பிற்கும் அடிப்படையாக இருந்தவருமான முனைவர் க. இராமசாமி (அவர் சார்பில் நண்பர் பெற்றுக்கொண்டார்)

‘மலையாள மொழியில் தொல்காப்பியம்’ என மலையாளத்தில்ஆராய்ச்சி நூல் எழுதிய முனைவர் கோபிநாதன் (அவர் சார்பில் நண்பர் பெற்றுக்கொண்டார்)

தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்புகளை விரிவான ஆங்கில முன்னுரையுடனும், உரைக்குறிப்புகளுடனும், கருவிமொழிப் பொருளகராதியுடனும் பதிப்பித்த முனைவர் வெ.முருகன்

குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் சிலை அடிப்படைப் பணிகள் ஆற்றிய புலவர் த.சுந்தரராசன் அவர்களுக்கு வழங்கப்பட இருந்த விருது அவர் மறைந்தமையால் குடும்பத்தாரிடம் சேர்க்கப்படும்.

உலகத் தொல்காப்பிய மன்றத்தை நிறுவி அதனை உலக நாடுகள் பலவற்றிலும் தொடங்கவும் அவை மூலம்  தொல்காப்பியம் உலகெங்கும் பரவவும் வித்தாகவும் விழுதாகவும் விளங்கும் முனைவர் மு.இளங்கோவன்(அவர் சார்பில் நண்பர் பெற்றுக்கொண்டார்)

25 ஆண்டுகளாகத் தொல்காப்பியத்தைக் கற்பித்து வருபவரும் தொல்காப்பியப் பயிலரங்கங்களிலும் மாநாடுகளிலு ம்பங்கேற்று வருபவமான முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்

தொல்காப்பியத்திற்குச்  சிறப்பகராதி உருவாக்கியவரும் திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் என்ற முறையில் தொல்காப்பியத்தைப் படைப்புத்துறையிலும் ஆய்வுததுறையிலும் ஒளிவிடச் செய்கிறவருமான முனைவர் த. விட்ணுகுமாரன்.

ஆகியோர் இலக்குவனார் விருதுகளைப்பெற்றுக் கொண்டனர்.

பின் வருவோர் தொல்காப்பிய மணி விருதாளர்கள் ஆவர்.

தொல்காப்பியம் எழுத்ததிகார எளிய உரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் எளிய உரை ஆகியவற்றின் மூலமும் தொல்காப்பியத் தொடர் வகுப்புகள் மூலமும் தொல்காப்பியத்தை எளிய முறையில் மக்களிடையே பரப்பி வரும் புலவர் கு.வெற்றியழகன்

தொல்காப்பிய முற்றோதல் முதலில் நிகழ வழிகாட்டியவரும் தேனியில் வையைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் மூலம் தொல்காப்பியத்தைப் பரப்பி வருபவரும் உலகளாவிய நிலையில் தொல்காப்பியததை இளைய தலைமுறையினருக்கச் சொண்டு செல்பவருமான புலவர் ச.ந.இளங்குமரன்

தொல்காப்பியம் தொடர்பான பொருண்மைகளை முதுகலை, இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு எடுத்துக் கொண்டவர்; தொல்காப்பிய ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு நூல்களை எழுதி வருபவர்; மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழன்பர்களுக்கு இணையவழியில் தொல்காப்பிய வகுப்பு எடுத்துவரும் முனைவர் மு. சோதிலட்சுமி

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனி, ஞாயிற்குக் கிழமைகளில் தொல்காப்பியத் தொடர் வகுப்புகளைச் சிறப்பாக நடத்தி வருபவரும் தொல்காப்பியக் கோட்பாடுகள் அடிப்படையில் கட்டுரை எழுதி வருபவரும் தம் மாணாக்கர்களுக்குத் தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுத்தலைப்புகளைத் தருபவருமான முனைவர் த. தான் இஃச்டோனி

மாணவ நிலையிலேயே தொல்காப்பியப்பாதையில் நடைபோடத் தொடங்கியவரும் தொல்காப்பியத்திற்கு மாணவர் உரையை எழுதியவரும் முனைவர் பட்டத்தையும் தொல்காப்பியம் குறித்து வழங்கியவரும் அயல் மாணாக்கருக்குத் தமிழ் கற்பித்து வருபவருமான முனைவர் இல.சுந்தரம்.

தொல்காப்பிய முழுமை உரை எழுதியுள்ளவரும், இன்று ஒரு சொல் என்றொரு குழுமம் தொடங்கி அதன் வழியாக, நாளும் ஒரு சொல்லைத், தொல்காப்பியம், அடிப்படையில் பகுத்து, பொருண்மை வழங்குபவரும் தொல்காப்பியத்தை நாளும் பரப்பி வருபவருமான திருமிகு சொல்லாக்கியன் (சு.தீனதயாளன்) (கனடாவிள்ள இவர் சார்பில் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.)

பல்துறைப்பணிச்சிறப்பு மிக்கவரும் தொல்காப்பியப் பிள்ளைத்தமிழ், தொல்காப்பியம் சொல் அடைவு, தொல்காப்பியத் துணைவன்(கணியம்/software), தொல்காப்பியம் (கணியம்/software) முதலியவற்றைப் படைத்துத் தொல்காப்பியச் சிறப்பை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டி வருபவருமான கவிஞர் ம.பீட்டர்

மதுரை  தொல்காப்பியர் மன்றத்தின் தலைவராகத் தொல்காப்பியத்தைப் பரப்பும் பணிகளை ஆற்றி வரும் தமிழ்த்திரு அ.இருளப்பன்

மதுரை  தொல்காப்பியர் மன்றத்தின் செயலராகத் தொல்காப்பியத்தைப் பரப்பும் பணிகளை ஆற்றி வரும் தமிழ்த்திரு கரு.முருகேசன்

ஆகியோருக்குத் தொல்காப்பியச் சுடர் விருதுகள் வழங்கப்பெற்றன.

உலகத் தொல்காப்பியத் தூதர்கள்  செல்வி முத்தமிழ்ச் சாமினி, செல்வி செந்தமிழ்ச் சாலினி ஆகிய இரட்டைச்சிறுமியர் தொல்காப்பியம் முழுமையையும்  முற்றோதல் செய்வதால் தொல்காப்பிய இளமணி விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை அவர்கள் சார்பில் தேனி ச.ந.இளங்குமரன் பெற்றுக் கொண்டார்.

விருதாளர்கள் முனைவர் பொ.ந.கமலா, முனைவர் ப. மருதநாயகம், புலவர் ச.ந. இளங்குமரன், முனைவர் மு.சோதிலட்சுமி ஆகியோர் ஏற்புரை வழங்கினர். நிறைவாகத் தமிழ்த்தொண்டர்  வேல் சுப்புராசு நன்றி நவின்றார்.

இலக்குவனார் இலக்கிய இணையம்  வழங்கிய விருது பெற்ற அனைவரும் பல்வேறு வகைகளில் சிறப்பாகத் தமிழ்ப்பணி யாற்றி  வருபவர்கள். எனினும் இங்கே அவர்களின் தொல்காப்பியப் பணிகள் மட்டுமே கருதிப் பார்க்கப்பட்டன. இந்நிகழ்வில் விருதாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் மகிழும் வகையில் அனைவருக்கும் இரு நூல்களும் தொல்காப்பிய ஆன்றோர் நாட்காட்டி வழங்கப்பட்டன.

அனைவரும் எப்போதும் நினைத்து மகிழும் வகையில் குறித்த காலத்தில் தேநீருடன் தொடங்கி உரிய காலத்தில் உணவுடன் முடிந்து இலக்குவனார் இலக்கிய இணையத்தின் விருதுகள் வழங்கு விழா மிகச்சிறப்பாக நிறைவுற்றது.









ஞாயிறு, 13 அக்டோபர், 2024

சங்க இலக்கியங்களில் அறிவியல் பகுதி 3, இலக்குவனார் திருவள்ளுவன்

 

சங்க இலக்கியங்களில் அறிவியல் பகுதி 3, இலக்குவனார் திருவள்ளுவன்