death லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
death லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 அக்டோபர், 2012

ஆங்கில மோகத்தால் தொடரும் பலி

திருப்பத்தூர் அருகே  மிதிகை (ஆட்டோ) கவிழ்ந்து பள்ளி மாணவி பலி: 10 மாணவர்கள் காயம்
திருப்பத்தூர், அக்.12-

திருப்பத்தூர் அடுத்த கந்திலி தொப்பளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு பெயிண்டர். இவரது மகள் சாஸ்திகா (வயது4). கஜ்ஜல்நாயக்கன் பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். அவருடன் 10 மாணவ, மாணவிகளும் சென்றனர்.

கஜ்ஜல்நாயக்கன் பட்டி அருகில் சென்ற போது ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய ஆட்டோ திடீரென கவிழ்ந்தது.  ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவ-மாணவிகள் படுகாயமடைந்தனர். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மாணவி சாஸ்திகா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை கஜ்ஜல்நாயக்கன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியில் மாணவி சாஸ்திகா பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் மேலும் காயமடைந்த 10 மாணவ, மாணவிகளும்  கஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள்.

பள்ளிக்கு சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் கஜ்ஜல் நாயக்கன்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வியாழன், 4 அக்டோபர், 2012

பொழுதுபோக்குப் பூங்காக்களில் தொடரும் உயிர்ப்பலி - Death continue in amusement park



பொழுதுபோக்கு பூங்காக்களில்,உபகரணங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாததும், பூங்காக்களின் செயல்பாடுகளை அரசு முறையாக கண்காணிக்காததுமே விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி., பொழுதுபோக்கு பூங்காவில், நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த அபியா மேக், 25 என்ற விமான பணிப்பெண், ஆக்டோபஸ் ராட்டினத்தில் சுற்றிய போது, தவறி விழுந்து இறந்தார். இதே பூங்காவில் கடந்த ஆறு மாதங்களில் தற்போது நடந்தது மூன்றாவது விபத்து. கடந்த ஏப்ரல் மாதம் சின்மயா நகரைச் சேர்ந்த ரிச்சாஷா என்ற இளம்பெண், ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த மாதம் 23ம் தேதி சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரின்ஸ் என்ற 16 வயது சிறுவன் சறுக்கி விளையாடிய போது, தவறி விழுந்தார். இதில், காயம் ஏதுமின்றி தப்பினார்.
எச்சரித்தும் அலட்சியம்:


இந்த விபத்துக்கள் நடந்த போதே போலீசார் பூங்கா நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். உரிய கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தினர். ஆனால், நிர்வாகம் அலட்சியமாக இருந்ததால் இளம்பெண் விபத்தில் சிக்கி, உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்தது எப்படி?


பூங்கா மையப்பகுதியில் உள்ள ஆக்டோபஸ் ராட்டினம் தனித்தனி பெட்டிகளை கொண்டது. இதில், ஒரு பெட்டியில், ஒருவர் மட்டுமே அமரலாம். பெட்டிக்குள் அமர்ந்து கொண்டவர்களுக்கு சூசீட் பெல்ட்' கிடையாது. பெட்டியில் அமர்ந்த பிறகு, ஒரு இரும்பு கம்பி
மட்டும் தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பிக்கு கீழே அதிகமான இடைவெளி உள்ளது. இதன் வழியாக பருமனான உடல் கொண்டவர்கள் கூட விழ வாய்ப்பு உள்ளது. அபியா மேக் உட்பட ராட்டினத்தில் அனைவரும் ஏறிய பின், ராட்டிணம் சுற்ற துவங்கியுள்ளது. அனைவரும் சரியான நிலையில் அமர்ந்துள்ளனரா, தடுப்பு கம்பியை சரியாக பொருத்தியுள்ளனரா என்று ஆபரேட்டர் கவனிக்கவில்லை.ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதிர்வின் போது தான் அபியா மேக், தனது பெட்டியில் இருந்து சரிந்து கீழே விழுந்துள்ளார். தரையில் விழுந்தவர், உடனடியாக சுதாரித்துக் கொண்டு மேல் நோக்கி எழுந்தார். அப்போது சுற்றிக் கொண்டிருந்த ஒரு பெட்டி பயங்கர வேகத்தில் தலையில் மோதியது. இதில், ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார்.
அதிகரிக்கும்விபத்துக்கள்:


சென்னையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களில் அவ்வப்போது இதுபோன்ற விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பொழுதுபோக்கு பூங்காக்கள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு குறித்து எந்த விதிமுறைகளும் தெளிவாக இல்லை.
அதிகாரிகள் தட்டிகழிப்பு:


விபத்து நடந்தால் மட்டுமே இதுபோன்ற பூங்காக்களுக்குள் போலீசார் வருகின்றனர். பூங்காவில் உபகரணங்கள் பொருத்தும் போது, அது சரியாக இருக்கிறதா என்று பொதுப்பணித்துறை ஆய்வு செய்கிறது. அத்துடன் அவர்கள் பணியும் முடிந்துவிட்டது என்கின்றனர். அரசு துறையின் எந்த கண்காணிப்பும் இல்லாததால், உரிய பராமரிப்பு பணிகளை செய்யாமல், அப்பாவி மக்கள் பொழுதுபோக்கு பூங்காக்களில் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.
Advertisement
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அதிகம். இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து தான் இங்குள்ள பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் இந்த உபகரணங்களை இயக்குவது; பராமரிப்பது போன்ற விஷயங்களில் நுணுக்கமாக செயல்படுவர். அதற்காக அங்குள்ள பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படும். ஆனால், இங்குள்ள பொழுதுபோக்கு பூங்காக்களில் 10ம் வகுப்பு கூட படிக்காதவர்கள், உபகரணங்களை இயக்கும் பணியில் அமர்த்துகின்றனர். தொழில்நுட்பமாக எந்த விஷயமும் அவர்களுக்கு தெரிவதில்லை. அதுமட்டுமல்லாமல், அரசும் பொழுதுபோக்கு பூங்காக்களில் குறிப்பிட்ட மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்வது, தொடர்ந்து கண்காணிப்பது கிடையாது. இதனால் தான் சென்னையில் உள்ள பெரும்பாலான பொழுதுபோக்கு பூங்காக்கள் அலட்சியமாக செயல்படுகின்றன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். உயிர்பலி ஏற்படுத்தும் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க அரசு உடனடியாக பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
இதுவரை நடந்த விபத்துக்கள்


* தாம்பரம் கிஷ்கிந்தா பூங்காவில் சிறுமி, நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார்.
*
எம்.ஜி.எம்., பூங்காவில் விளையாட்டு உபகரணத்தில் சிக்கி பணியாளர் இறந்தார்.
*
சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார்.
*
குயின்ஸ் லேண்ட் பூங்காவில் நீரில் மூழ்கி இரண்டு பேர் இறந்தனர்.
*
பெண் பணியாளர் ஒருவர் விளையாட்டு உபகரணத்தில் சிக்கி இறந்தார்.
 - தினமலர் செய்தியாளர்

திங்கள், 9 ஜூலை, 2012

பொறியியல் மாணவியின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

விபத்தில் பலியான கோவை என்ஜினீயரிங் மாணவியின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு
கோவை, ஜூலை. 8-

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மணியன். இவரது மகள் சரண்யா (வயது21). என்ஜீயரிங் படித்துள்ளார். கடந்த மாதம் 28-ந்தேதி தான் தேர்வு முடிவு வந்தது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

தேர்வு முடிவு வந்த மறுநாள் தனது உறவினர்கள் மற்றும் தோழிகள் 5 பேருடன் சேலத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக காரில் சென்றார். கருத்தரங்கு முடிந்ததும் அனைவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிந்தனர்.

ஈரோட்டை அடுத்த சித்தோடு அருகே வந்த போது காரும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சரண்யாவுடன் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சரண்யாவும் அவரது தோழியுமான பானுபிரியாவும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சரண்யாவை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் நேற்று மதியம் 2 மணியளவில் சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் சரண்யாவின் தந்தை மணியனிடம் கூறினார்கள். மகள் இறந்து விட்டாள் என்ற துக்கம் அவரது மனதை கனக்க செய்தாலும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

தனது மகளின் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் வாழ வேண்டும். அவர்கள் உருவில் தனது மகளை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார். அதன்படி டாக்டர்களிடம் சரண்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்யப்போவதாக கூறினார்.

மறு நிமிடமே இந்த தகவல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் பறந்தது. சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து மருத்துவக்குழுவினர் விரைந்து வந்தனர். இன்று காலை 8.30 மணி அளவில் சரண்யாவின் 2 கருவிழிகள் கோவையில் உள்ள அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

சரண்யாவின் உடலில் இருந்து பெறப்பட்ட 2 சிறுநீரகங்ளில் ஒன்று கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கும், மற்றொன்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது. கல்லீரலை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி மருத்துவக் குழுவினர் பெற்றுச் சென்றனர். இதயத்தின் 2 வால்வுகள் கோவையில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்துக்கு வழங்கப்பட்டது.

சரண்யா உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற உள்ளனர். உடல் உறுப்புகளை டாக்டர் குழுவினர் எடுத்துச் செல்வதை பார்த்த மணியன் அவரது மனைவி கலாமணி, சகோதரி அர்ச்சனா ஆகியோர் கண் கலங்கியது ஆஸ்பத்தரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
 
 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உறுப்பு தானத்தால் என் மகள் மரணத்தை வென்று விட்டாள்: தந்தை கண்ணீர் பேட்டி
சரண்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்த அவரது தந்தை மணியன் கண்ணீர் மல்க கூறியதாவது:-

எனது மகள் சிறுவயது முதலே படிப்பில் சுட்டி. பலமுறை ரத்த தானம் செய்திருக்கிறாள். இதற்காக பல விருதுகளை பெற்றிருக்கிறாள். சிறுவயது முதலே பிறருக்கு உதவும் குணம் கொண்டவள்.

முற்போக்கு சிந்தனையும் கொண்ட அவள் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது நான் இறந்தால் எனது உடலை தானம் செய்வேன் என்று எதேச்சையாக சொல்வாள். விபத்தில் சிக்கிய சரண்யாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அவளுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது என்று என்னிடம் டாக்டர்கள் கூறினார்கள். அப்போது இந்த உலகமே எனக்கு சூன்யமாகத் தெரிந்தது.

இருந்தாலும் சரண்யா ஏற்கனவே கூறியதுபோல் அவள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளேன். அந்த உடல் உறுப்புகள் 7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது. இதனால் இறப்புக்கு பின்னரும் எனது மகள் வாழ்வதாகவே கருதுகிறேன் என்றார்.

40 மணி நேரத்துக்குள் உடல் உறுப்பு தானம் குறித்து கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி டீன் குமரன் கூறியதாவது:-

மூளைச்சாவு ஏற்பட்ட 48 மணி நேரத்துக்குள் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட வேண்டும். சரண்யாவின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்வதாக கூறியதும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தகவல் தெரிவித்தோம்.

அதன்படி மருத்துவ குழுவினர் வந்து சரண்யாவின் உடல் உறுப்புகளை பெற்றுச் சென்றுள்ளனர். சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் தானமாக பெற்ற உடல் உறுப்புகளை இன்று பிற்பகல் விமானம் மூலம் சென்னைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

இளையராசா மனைவி காலமானார்

இளையராசா, மைத்துனர்கள், பிள்ளைகள் வளர்ச்சியில் தூணாகத் திகழ்ந்தவரை இழந்துவாடும் சுற்றத்தினருக்குத் தினமணி இணைய நேயர்கள் சார்பில் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!


இளையராஜா மனைவி காலமானார்

First Published : 01 Nov 2011 11:09:59 AM IST

Last Updated : 01 Nov 2011 11:17:24 AM IST

சென்னை, நவ.1: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா (58) மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.சென்னை தியாகராய நகரில் குடும்பத்தாருடன் வசித்து வந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இரவு 10.40 மணியளவில் அவர் காலமானார்.பண்ணைபுரத்தைச் சேர்ந்த ஜீவா, இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரி மகள் ஆவார். இசையமைப்புப் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றுள்ள இளையராஜாவுக்கு, ஜீவா மறைந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடனடியாகப் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை வருகிறார்.அதன் பின்னரே, இறுதிச் சடங்கு குறித்த விவரங்கள் தெரிய வரும் என இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்தார்.இளையராஜா- ஜீவா தம்பதியருக்கு கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா ஆகிய இரண்டு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர்.
கருத்துகள்

May her soul rest in peace.At prime age of children growing they lost their mother so sad.May God gives the mastero the strength to bear the loss.Kids take care of your father,he is a great gift .he requires more love and affection and care than before.My hearty condolenses to illayaraja sir and their children.
By Anandkumar
11/1/2011 12:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 7 அக்டோபர், 2011

apple founder Steve Jobs died: ஆப்பிள் நிறுவனர் ஃ ச்டீவு சாப்சு மரணம் !

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 56.
கணினி தொழில்நுட்ப உலகுக்கு பேரதிர்ச்சியைத் தரும் இந்தத் துயரத் தகவலை, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே தனது பணியையை வெகுகாலம் தொடர்ந்தவர் என்பது கவனத்துக்குரியது.
ஜனவரி முதல் மருத்துவ விடுமுறையில் இருந்து வந்த அவர், ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது.
தனது கல்லூரிப் படிப்பை பாதியிலே விட்ட ஜாப்ஸ், தன்னுடைய பள்ளி நண்பரான ஸ்டீஃபன் வோஸ்னியாக்குடன் இணைந்து 1976-ல் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980 காலகட்டங்களில் இந்நிறுவனம் தயாரித்த மேக் கணினிகள் (Macintosh Computers) பிரபலம் அடைந்தன. 1985-ல் தனது தொழில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.
மீண்டும் 1997-ல் ஐமேக் (iMac) என்ற புதிய கண்டுப்பிடுப்பு மூலம் அவர் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தை புதுப்பித்தார்.
கடந்த 2002-ல் ஐபாடு (iPod) என்ற வெளியீட்டின் வாயிலாக தொழில்நுட்பத்துறையில் புதுமையான புரட்சியினை ஏற்படுத்தினார்.
ஐபோன் (iPhone) எனும் புதிய படைப்பைத் தொடர்ந்து, நுண்ணறி பேசி (Smart Phone) சந்தையிலும் ஆப்பிள் நிறுவனம் கால்பதித்தது.
காலப்போக்கில் ஆப்பிள் தன் ஐபோன்களில் பல பதிப்புகளை (Versions) வெளியிட்டு தொழில்நுட்பச் சந்தையில் லாபம் கண்டது மட்டுமின்றி மகத்தான சாதனையும் படைத்தது.
சிலிகான் வேலியில் கால்பதித்து தொழில்நுட்ப செயற்களங்களில் (Technology Arena)புரட்சியை ஏற்படுத்தி வந்த ஸ்டீவ் ஜாப்ஸ்சின் இழப்பு, உலகளாவிய சமகால கணினித் துறையால் ஈடுசெய்ய முடியாதது.
//மகா.தமிழ்ப் பிரபாகரன்

நன்றி : விகடன்
 

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு

First Published : 07 Oct 2011 12:24:16 AM IST


நியூயார்க், அக்.6: ஐ-பாட் மற்றும் ஐ-போன் போன்ற மின்னணு சாதனங்கள் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த "ஆப்பிள்' நிறுவன மேதை ஸ்டீவ் ஜாப்ஸ் (56), புதன்கிழமை மருத்துவமனையில் காலமானார்.கடந்த ஏழு ஆண்டுகளாக கணைய புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் விளைவாக கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு நான்கு முறை கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகிய அவர், அப்பதவிக்கு டிம் குக் என்பவரை நியமித்தார். இருப்பினும் நிறுவனத் தலைவர் பதவியை தொடர்ந்து வகித்து வந்தார்.""தொலைநோக்கு சிந்தனை உள்ள ஒரு மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநரை இந்த உலகம் இழந்துவிட்டது,'' என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே மருத்துவ விடுப்பில் இருந்து வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், சில முக்கியமான தருணங்களில் மட்டுமே நிறுவனம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்த மார்ச் மாதத்தில் ஐ-பாட் அறிமுக விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த விருந்தில் கலந்து கொண்டார்.கடந்த ஜூன் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் ஐ-கிளவுட் பற்றிய கருத்தரங்கில் தனது கருத்துகளை வெளியிட்டார். அப்போது கிளவுட்-அடிப்படையிலான கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துகளை வெளியிட்டார்.ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளான ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் ஆகியன இவரது தொலைநோக்கு சிந்தனையின் அடிப்படையில் உருவானவையாகும்.மிகக் குறுகிய காலத்தில் உலகின் பலரது கவனத்தையும் ஈர்த்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழந்தது, இத்துறையைச் சார்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.உலகம் முழுவதிலிருந்து பல தொழிலதிபர்களும், இத்துறை வல்லுநர்களும், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட நாட்டு தலைவர்களும் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் மைக்ரோசாஃட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸýகர்பெர்க், கூகுள் தலைமை செயல் அதிகாரி லேரி பேஜ் ஆகியோரும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளனர்.ஆப்பிள் நிறுவனத்துக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் பொறுப்பேற்ற பிறகுதான் இசை சார்ந்த மின்னணு பொருள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதன் விளைவாக நிறுவனத்தின் புகழை உலகறியச் செய்த ஐ-பாட், ஐ-போன் போன்ற பொருள்கள் உருவாயின. கல்லூரி படிப்பை பாதியில் விட்ட போதிலும் ஆப்பிள் நிறுவனத்தை உலகறியச் செய்ததில் ஸ்டீவ் ஜாப்ஸின் பங்கு மகத்தானது. புத்த மதத்தைச் சார்ந்த பெற்றோரால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். சாதாரண குடும்பத்தில் வளர்ந்து புகழின் உச்சியை எட்டிய இவரது சொத்து மதிப்பு 610 கோடி டாலர் என போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.