books festival லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
books festival லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஆகஸ்ட், 2009

ஆகஸ்ட் 12,2009,00:00 IST





ஈரோடு: ""வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும். லட்சியத்தை அடையக்கூடிய அறிவு, புத்தகமே,'' என, ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.



மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஒருவாரம் ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவின் நிறைவு விழா நேற்று ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடந்தது.



முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:ஈரோடு மக்களுக்கு அன்பான வணக்கம். உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்; என்னுடன் சேர்ந்து நீங்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்; எடுத்துக் கொள்வீர்களா? இது பெற்றோர் சொல்ல வேண்டிய உறுதிமொழி.என் வீட்டில் பூஜை அறை அல்லது பிரார்த்தனை இடத்துக்கு அருகில் 20 நல்ல புத்தகத்தை வைத்து சிறு நூலகத்தை உருவாக்குவேன். என் வளர்ந்த மகன் அல்லது மகள் 20 நூல் கொண்ட நூலகத்தை 200 புத்தகம் கொண்ட நூலகமாக மாற்ற உறுதியாக இருப்பார். என் பேரன், பேத்திகள் 200 புத்தகத்தை 2,000 புத்தகம் கொண்ட நூலகமாக மாற்றுவார். எங்கள் குடும்பம் நூலகத்தை தினமும் பயன்படுத்தி, இன்று முதல் நல்ல புத்தகங்கள் படிக்க ஆளாக்குவேன். எங்கள் வீட்டு நூலகம் தான் பரம்பரை சொத்து; அறிவு களஞ்சியம்; தமிழகத்தின் அறிவு புரட்சிக்கு ஆதாரமாக அது அமையும்.( இவ்வாறு அப்துல்கலாம் உறுதிமொழி வாசிக்க; அதை கூட்டத்தில் வந்தவர்கள் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்).



தொடர்ந்து அப்துல்கலாம் பேசியதாவது:ஈரோட்டில் அறிவு களஞ்சியத்தை உருவாக்க மக்கள் சிந்தனை பேரவை எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பாராட்டு. நல்ல புத்தகங்கள் கற்பனை சக்தியை வளர்க்கும். கற்பனை சக்தி சிந்தனையை வளர்க்கும். சிந்தனை அறிவு நம்மை மேம்படுத்த உதவும். மூத்த பத்திரிகையாளர்கள் அதிகளவு புத்தகங்களை படைக்க வேண்டும். இளைஞர்களை ஊக்குவிக்க அவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். நல்வழிப்படுத்த ஆங்கிலம், தமிழ் பதிப்பகங்கள் முன்வர வேண்டும்.நான் சிறுவனாக இருந்த போது ராமேஸ்வரத்தில் தொடர்ந்து படிக்க முடியுமா என்ற சந்தேகம் வந்தது. பின்னர் மேல்படிப்புக்கு செல்ல முடியுமா என நினைத்தேன். ராமநாதபுரத்தில் ஒன்பதாவது முடித்து, பத்தாவது சேர்ந்ததும் எனக்கு அருமையான பொக்கிஷம் கிடைத்தது. அதுதான் எனது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர். எனது வாழ்க்கையில் புத்தகங்கள்தான் சிறந்த வழிகாட்டியாக அமைந்தன.எனது வாழ்க்கையில் மூன்று புத்தகம்தான் வழிநடத்தி சென்றன. 1954ம் ஆண்டு சென்னை மூர் மார்க்கெட்டில் 20 ரூபாய்க்கு வாங்கிய புத்தகத்தை நான் இன்றும் வைத்துள்ளேன்.



மனநிலையை சரிப்படுத்துவது புத்தகமே.திருவள்ளுவர் தந்த திருக்குறள், நாகரிகம் கற்று கொடுத்தது. இன்றும், நாளையும், என்றும் வாழ்க்கையை நெறிமுறைப்படுத்தும் நூலாக அது அமைந்துள்ளது. வாழ்க்கையின் வழிகாட்டியாக உள்ளது. அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவி. இதுபோன்ற தகவல்களை தந்தது திருக்குறள்."எம்ப்யர் இன் மைண்ட்' என்ற புத்தகத்தில் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன், மகள் ஆகியோர் வரலாற்று சிறப்பு மிக்கவராகவும், விஞ்ஞானியாகவும், டாக்டராகவும், பொறியாளராகவும் வர வேண்டும் என கனவு காண்பர்.நல்ல புத்தகங்கள் மட்டுமே எப்போதும் உற்ற நண்பனாக இருக்கும். என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



சென்னை எம்.ஐ.டி., கல்லூரியில் 1955-56ல் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, விடுதியில் இருந்த மாணவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டனர். நான் மட்டும் தனியாக விடுதியில் இருந்தேன். அப்போது எனது உறவினர் அகமது ஜலாலீன் என்பவர் ஃபோன் செய்து; "ராமேஸ்வரத்தை புயல் தாக்கிவிட்டது' எனக்கூறினார். உடனே ஊருக்கு செல்ல எனது மனம் துடித்தது. ஆனால், கையில் பணம் இல்லை. "என்ன செய்வது' என யோசித்தேன்.பேராசிரியர் லட்சுமணசாமி முதலியார் எனக்கு பரிசாக கொடுத்த 400 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் என் கையில் இருந்தது. அதை மூர்மார்க்கெட்டில் விற்று விட்டு ராமேஸ்வரம் சென்று குடும்பதை பார்த்து விட வேண்டும் என நினைத்தேன்.அதன்படி, மூர்மார்க்கெட் சென்று, அங்கு குடுமி வைத்த பிராமணர் ஒருவரிடம் புத்தகத்தை கொடுத்து பணம் கேட்டேன்.



உடனே அவர், "நீங்கள் அவசரமாக செல்ல இருப்பதால் பணம் கேட்பது போல் தெரிகிறது. இந்த புத்தகம் இங்கே இருக்கட்டும்; உங்களுக்கு நான் பணம் தருகிறேன்' எனக்கூறி 60 ரூபாய் கொடுத்தார்.அந்த பணத்தின் மூலம் நான் ராமேஸ்வரம் வந்தேன். பெற்றோரை பார்த்து விட்டு பழைய புத்தகக்கடைக்கு வந்தேன். "புத்தகத்தை யாரும் எடுத்து சென்று விடக்கூடாது' என மனது அலை பாய்ந்தது. அங்கு வந்ததும் அந்த பிராமணர் புத்தகத்தை கொடுத்தார். நான் அவருக்கு 60 ரூபாயை கொடுத்தேன். "புத்தகத்தின் மீது நீ வைத்திருக்கும் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். நீ நன்றாக வர வேண்டும்' என வாழ்த்தினார்.புத்தகங்கள் வாழ்க்கையில் இன்றியமையாதவை. சில சமயம் பணம் வாங்கவும் உதவி செய்கிறது.அறிவின் இலக்கணம் என்பது என்ன? அறிவு என்பது கற்பனை சக்தி, ப்ளஸ் மனத்தூய்மை, ப்ளஸ் உறுதி.கற்றல்; கற்பனை சக்தியை வளர்க்கிறது. கற்பனை சக்தி; சிந்தனையை வளர்க்கிறது.



சிந்தனை; அறிவை வளர்க்கிறது. அறிவு உன்னை மகானாக்குகிறது. ஒவ்வொருவர் உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும். மனத்தூய்மையை மூன்று பேரிடம் பெற முடியும். பெற்றோர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர், உன்னிடம் உள்ள உறுதி. இவை இவை மூன்றும்தான் மனத்தூய்மையின் அடையாளம்."எனக்கென்று புது பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன்; முடியாது என்று சொல்வதை முடியும் என நினைக்க வேண்டும். என் கடின உழைப்பாலும், உறுதியாலும் தோல்வியை தோல்வியடையச் செய்து வெற்றியை உண்டாக்குவேன்' என இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக வேண்டும் என்றால் 54 கோடி இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் முன் வர வேண்டும். தடைக்கற்களை தாண்டி வர வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக வர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.



அது உங்களின் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்.இதற்கு நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி தேவை. 2020ல் எப்படி வளமான நாடாகும் என நான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளேன். அதாவது, சிந்தனை, செயல் ஒன்றுபட்டால் லட்சியம் நிறைவேறும். சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் எரிசக்தி கிடைக்கும் அளவுக்கு இந்தியாவை மாற்ற வேண்டும். அனைவருக்கும் கல்வி கிடைக்க பாடுபட வேண்டும். தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். ஊழல் இல்லாத நாடாக மாற்ற வேண்டும். பாதுகாப்பான, சுகாதாரமான பீடு நடைபோடும் நாடாக மாற்ற இளைஞர்கள் பாடுபட வேண்டும். 54 கோடி இளைஞர்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி.கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க முன்வர வேண்டும்.



வருங்காலத்தை பற்றி பயப்படாமல் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் தேவை. பூமி சூரியனை வலம் வர ஓராண்டாகிறது. நிமிடம், வினாடி, வாரம், மாதங்கள் பறக்கும். நம்மால் இதை கட்டுப்படுத்த முடியாது. பறக்கும் நாட்களை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பயனடைய செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.விண்ணில் இருக்கும் விண்மீனை பார்க்கிறேன்; நான் அதை அடைய வேண்டும் என மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யும் பட்சத்தில் நிச்சயம் வந்தடையும். வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும். லட்சியத்தை அடையக்கூடிய அறிவு புத்தகமே. அனைவரும் நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். செங்குந்தர் கல்வி நிறுவன தாளாளர் சுத்தானந்தன், தேசியநல விழிப்புணர்வு இயக்க தலைவர் மயிலானந்தன், ஈரோடு கலெக்டர் சுடலைகண்ணன் ஆகியோர் பேசினர்.

சனி, 8 ஆகஸ்ட், 2009

சகமனிதன் மீது அன்பு
ஆற்றல் பயன்பட வேண்டும்:
பாரதி கிருஷ்ணகுமார்



ஈரோடு,ஆக. 7: சகமனிதன் மீது அன்பு செலுத்த மட்டுமே மனித ஆற்றல் பயன்படவேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு "எய்த விரும்பியதை எய்தலாம்' என்ற தலைப்பில் மேலும் அவர் பேசியது:இலக்கியப் படைப்புகள் சமயங்களுக்கு அப்பாற்பட்டவை. நல்ல புத்தகங்கள்தான் மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துகின்றன. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் யாவும் வல்லரசாகிவிட முடியாது. வறுமையும், மதப் பிரச்னைகளும் எங்கு இல்லையோ அந்த நாடுதான் வல்லரசு தகுதியைப் பெறுகிறது.பேச்சும், எழுத்தும் சம அளவில் வைத்து போற்றப்பட வேண்டும். ஆற்றல்மிக்க பேச்சுகள் மூலம் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அன்பினால் பெறும் அதிகாரம்தான் நிலைக்கும். உலகில் பல நாடுகள் தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள, தன் சொந்த நாட்டு மக்களோடு சண்டையிட்டு வருகின்றன. அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் சிந்தனைகளை அடக்க நினைக்கும் நாடுகள் கண்டிப்பாக சிதைந்துபோகும்.சகமனிதனின் வளர்ச்சிக்கு மட்டுமே மனித ஆற்றலை பயன்படுத்தும் நிலை உருவாக வேண்டும். தற்போது உள்ள சந்ததியினர் ஒரு நல்ல சமுதாயத்தைப் பார்க்க வாய்ப்பில்லாமல் போனாலும், எதிர்கால சந்ததி, நல்ல சமுதாயக் கட்டமைப்பில் வாழ்வதற்கு களம் அமைத்துக் கொடுக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே ஒவ்வொரு பெற்றோரும், குழந்தைகள் மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.தவறுகளை தட்டிக்கேட்கும்தன்னம்பிக்கை வேண்டும்"இனி ஒரு விதி செய்வோம்' என்ற தலைப்பில் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியது:உலகில் உள்ள அனைத்து மொழிகளைக் காட்டிலும், தமிழ்மொழியில்தான் திறமையான எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் இவர்களுக்குரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. கேரளம் போன்று தமிழகத்திலும் சாகித்ய அகாதெமி ஏற்படுத்த வேண்டும். பிழைப்புக்காக தமிழை உரிமை கொண்டாடும் நிலை மாறி, தமிழுக்காக உண்மையாக உழைக்கும் நிலை ஏற்பட வேண்டும். உணவுக்கு வழியில்லாதவர்களின் வாழ்க்கை நிலையை எவ்வாறு முன்னேற்ற முடியும் என்பதை ஒரு நாடு சிந்திக்க வேண்டும். இதேபோல் வசதியுள்ளவர்களுக்குக் கிடைக்கும் தரமான கல்வி, மருத்துவம் போன்றவை சாதாரண மக்களுக்கும் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும். காந்திய சிந்தனைகள் உள்ள மக்கள் இந்த நாட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தவறுகளைத் தட்டிக்கேட்கும் தன்னம்பிக்கை, படித்தவர்களிடமும் உருவாக வேண்டும். நாட்டின் கலாசாரம், உணவு, உடை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் சமுதாய கட்டமைப்பை சீரழித்துவிடும். இந்தியர்களுக்கு உலகியல் சிந்தனை உண்டு. இவர்கள் மூலம் இந்தியா உலகுக்கு நிச்சயம் வழிகாட்டும் என்றார்.எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி கெüரவிக்கப்பட்டார். கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளர் வி.ஆர்.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.

கருத்துகள்

2/2) (1/2 இன் தொடர்ச்சி) எதற்கெடுத்தாலும் அரசையே நம்பி யிருப்பதை விட இலக்கிய ஆர்வலர்களும் படைப்பாளர்களும் வெளியீட்டாளர்களும் இலக்கியக்கழகம் ஒன்றைத் தொடங்க முன் வர வேண்டும். பேச்சுத் திறனும் செயல் திறனும் மிக்க ஆசிரியர் அதற்கான ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/8/2009 2:52:00 AM

1/2) புத்தகத் திருவிழாவில் அனைவரும் அருமையாகப் பேசியுள்ளனர். பழ.கருப்பையா, பாரதி கிருட்டிணகுமார், ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோர் உரைகள் அனைவரும் உள்ளத்தில் பதிந்து வைத்துப் போற்றப்பட வேண்டியவையே. தமிழ் நாட்டில் 'சாகித்ய அகாதமி' தொடங்க வேண்டும் என ஆசிரியர் பேசியுள்ளார். அதன் கிளை தமிழ் நாட்டில் உள்ளது. அது போன்ற அமைப்பு தொடங்க வேண்டும் என்று பேசியிருந்தார் எனில், அவ்வாறு சொல்லித்தான் 'குறள் பீடம்' தொடங்கப்பட்டது. ஆனால், செயல்பாடின்றியே மறைந்து விட்டது. தமிழ் நாட்டில் யாருக்கேனும் பதவி கொடுக்க வேண்டும் என்றால் அமைப்பு தொடங்கப்படும். வைரமுத்துவிற்குப் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது. அவ்வாறு முடிவெடுத்தால்கூடக் குறள்பீடம் தொடங்கப்படலாம். ஆனால், தமிழ்நாட்டு அமைப்புகள் எல்லாம் துதி பாடவும் தமிழ்நலச் செயல்பாடின்மைக்காகவுமே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் பயன்பெற உதவலாம். ஆகவே, எந்த அமைப்பு இருந்தாலும் பயன் என்ன? புத்தக விழாக்கள் நடத்தும் அமைப்பினர் ஒன்று கூடி அப்படிப்பட்ட ஓர் இலக்கிய அமைப்பைத் தொடங்கி 'சாகித்ய அகாதமியின்' பணியை ஆற்றலாம். தொடர்ச்சி 2/2 காண்க.

By Ilakkuvanar Thiruvalluvan
8/8/2009 2:52:00 AM