(தோழர்தியாகுஎழுதுகிறார்  80 தொடர்ச்சி)

வெண்மணியும் பெரியாரும் 2

திமுக ஆட்சி இந்தச் சம்பவத்தை எப்படி எதிர்கொண்டது?

அண்ணாவால் இந்தச் சம்பவத்தை நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது. இது அவருக்குத் தெரிந்து நடந்தது என்றோ அவர் காவல்துறையை அனுப்பினார் என்றோ சொல்ல முடியாது. ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் “உழவர் காவல்துறை” ஆரம்பிக்கப்பட்டது. ஒருமுறை சட்ட மன்றத்தில் அண்ணா பேசும்போது, “உங்கள் தோழர்களில் சிலர் “பகலில் மார்க்குசியர்கள், இரவில் நக்சலையர்கள்” என்றே சொல்லியிருக்கிறார். வேளாண் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஏ.சி.கே., மீனாட்சிசுந்தரம் போன்றவர்களைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார்.

தொழிலாளர்களின் சார்பாக நின்று அந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பது; மக்களிடம் நேரடியாகச் சென்று அந்தச் சிக்கலை அணுகுவது, காவல்துறை அடக்குமுறையைத் தவிர்ப்பது என்றெல்லாம் கொள்கை இல்லாமல், அதிகாரவருக்கம் எடுத்த முடிவுகளுக்கு இடம்கொடுத்துவிட்டபோது அண்ணா மீது குற்றச்சாட்டு வரத்தானே செய்யும்!

முதலமைச்சர் என்ற முறையில் வெண்மணிக்கு அண்ணாவை அரசியல் பொறுப்பாக்குவதில் தவறில்லை.

பெரியாரைப் பொறுத்தவரை கூலி உயர்வுப் போராட்டங்களின் மீதே அவருக்கு நம்பிக்கையில்லை. தன்னிடமிருந்து விலகிப்போனவர்கள் மீதான கோபமும் திமுக ஆட்சி மீதான பரிவும் சேர்ந்துகொண்டன. பெரியார் நிலைப்பாட்டை ஏற்க முடியாதுதான்!

அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

‘செவ்வாழை’ சிறுகதையில் நிலப் பிரபுக்களின் கொடுநெஞ்சை சித்திரித்த அண்ணாவால் இப்போது காலம்காலமாய் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரபுத்துவத்தின் கோர முகத்தைக் காண முடியவில்லை. இந்தச் சிக்கலை மக்களுக்கு இடையிலான மோதலாகவோ அமைதிக் குலைவாகவோதான் அவரது அரசால் பார்க்க முடிந்தது. ஆக, காங்கிரசு அரசுக்கும் திமுக அரசுக்கும் வேறுபாடு இல்லாமல்போனது. அதே அதிகாரிகள்.. அதே காவல்துறைக் கொள்கை!

கேரளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தபோது தொழிலாளர் போராட்டத்தில் காவல்துறை தலையிடாது என்ற கொள்கையை எடுத்தார்கள். ஆனால், காவல்துறைக் கொள்கையில் திமுக எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. வெண்மணியில் படுகொலைக்குக் காரணமானவர்கள், தொழிலாளர்கள் என்று இரு தரப்பினர் மீதும் வழக்கு போடப்பட்டது.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு மாநில அரசு கலைக்கப்படாமலிருந்த இடைக்காலத்தில் கட்சி சார்பில் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. வெண்மணி நிகழ்ச்சிக்கு முன் நடந்த கொலை தொடர்பாகச் சிறையிலிருந்த தோழர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணைவிடுதலை பெற உதவ வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார்.

அவர்கள் விடுதலை பெற்று வெளியே சென்றார்கள். அதைப் போல வெண்மணி நிகழ்ச்சிக்குக் காரணமான கோபாலகிருட்டிண நாயுடுவுக்குப் பிணையை நீக்கி சிறையிலடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது. அவரும் பாலு நாயுடுவும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். திமுக ஆட்சி கலைக்கப்பட்ட( ‘டிசுமிசு’ ஆன) பிறகுதான், அவர்களைப் பிணையில் வெளியே எடுக்க முடிந்தது.

வெண்மணி நிகழ்ச்சிக்குப் பிறகு பொதுவுடைமைக் கட்சி ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்ன?

இது வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல. எடுத்துக் காட்டாகத், தொழிற் சாலைகளில் முதலாளி உயர்ந்தவர், தொழிலாளர்கள் தாழ்ந்தவர்கள் என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், வேளாண் தொழிலாளிகள் அப்படிக் கிடையாது. கூனிக் குறுகி, அடிபணிந்து வாழ்ந்த மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஊட்ட வேண்டியிருந்தது. பண்ணைகளுக்குக் காரியக்காரர்களாக இருந்தவர்கள், வேளாண் தொழிலாளர்களைக் கடுமையாக ஒடுக்கினார்கள். ஊருக்குள் என்ன சிக்கல் என்றாலும், அது கணவன் – மனைவி சண்டையாகவே இருந்தாலும்கூட, அவர்களைக் கையைக் கட்டி பண்ணையார்களின் முன்பாக நிறுத்திவிடுவார்கள்.

பொதுவுடைமைக் கட்சி இவற்றையெல்லாம் மாற்றியமைத்தது. மாதம் ஒருமுறை அமாவாசை அன்று வேலைக்குப் போகாமல் கூட்டம் நடத்துவார்கள். அங்கு அத்தனை பேரும் கூடிச் சிக்கல்களை யெல்லாம் பேசித் தீர்த்துக்கொள்வார்கள். தொழிலாளர்களிடம் தன்னம்பிக்கையும் தன்மதிப்பு உணர்ச்சியும் உருவாகின.

பண்ணையார்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்ததா?

இப்படியான சூழல் உருவானதைத் தொடர்ந்து, கூலி ஒரு சிக்கலில்லை,  முதலில் சங்கத்தைக் கலையுங்கள் என்று பண்ணையார்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். உண்மையில், வெண்மணிச்சிக்கலுக்கு அடிப்படைக் காரணமே இதுதான்: ‘நெல் உற்பத்தியாளர் சங்க’க் கொடிகளை ஏற்ற வேண்டும் என்ற கட்டளையை ‘விவசாயத் தொழிலாளர் சங்க’ நிருவாகிகள் மறுத்தார்கள். மறுப்பவர்களுக்கு அபராதம் போடப்பட்டது. அபராதத்தைக் கொடுக்க மறுத்தவர்கள் கடத்தப்பட்டார்கள். அப்படித்தான் வெண்மணியில் தகராறு முற்றியது.

ஆகச், சங்கம் வைக்கிற உரிமை இருக்கிறதா இல்லையா என்பதுதான் சிக்கலே. சங்கம் வைத்தால் என்ன கிடைக்கும் என்பதற்குக், கீழத் தஞ்சை வேளாண் தொழிலாளர்களுக்கு என்று இயற்றப்பட்ட குறைந்த அளவுக் கூலிச் சட்டமே சான்று. வேளாண் தொழிலாளர்கள் என்ற முறையில், பொதுவுடைமை இயக்கம் தீவிரமாக இருந்தது. குறிப்பாக, மா.பொ.க.(சிபிஎம்.) அந்தப் பகுதியில் வலுவாக இருந்தது. திமுகவைச் சேர்ந்த மன்னை நாராயணசாமி போன்ற சிலரும் வேளாண்த் தொழிலாளர்களின் கோரிக்கையை ஆதரித்தார்கள். பேச்சுவார்த்தையில் வேளாண் தொழிலாளர்களின் சார்பில் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இவற்றில் கிடைத்த பலன்களைப் பற்றிச் சொல்லுங்கள்

நீ மனிதன், நீ இன்னொருவனுக்கு அடிமை கிடையாது என்ற உணர்வைத் தொழிலாளர்களிடம் ஊட்டி வளர்த்தெடுத்தது பொதுவுடைமை இயக்கம். அதுபோல், வேளாண் தொழிலாளியின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கொடுக்க வேண்டும், போதிய ஓய்வு வேண்டும், வயலில் வேலை பார்க்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் உரிமை வேண்டும் என்ற உரிமைகளையெல்லாம் வென்றெடுத்தது.

கீழத் தஞ்சையில் வென்றெடுத்த முக்கியமான உரிமை ‘விழுந்த கூலி’. அதற்கு முன்னர் அற்றக் கூலிதான் கொடுக்கப்பட்டது. அற்றக் கூலியைப் பொறுத்தவரை, ஒரு நாள் உழைப்புக்குக் கூலியாக நெல்லோ பணமோ கொடுக்கப்பட்டது. அற்றக் கூலிக்கு விடிவதற்கு முன்பே வயலுக்குச் செல்ல வேண்டும், மாலை அந்தி சாய்ந்த பிறகுதான் கரையேற முடியும்.

விழுந்த கூலியின்படி, ஒரு கலத்துக்கு இத்தனை படி நெல் கொடுக்க வேண்டும். இரண்டாவதாகக், கலத்துக்கு இத்தனை படி, கலத்துக்குள்ளேயே அளப்பதா அல்லது வெளியே அளப்பதா என்ற சிக்கல் வந்தது. அந்தப் போராட்டமும் வெற்றி பெற்றது. இன்றைக்கு வெண்மணியைச் சுற்றியுள்ள சிற்றூர்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறிவிட்டன. வெண்மணி ஊர் மட்டும் மாறவில்லை. இன்னும் அங்குச் செங்கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது.

இன்றைய சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காவிரித் தண்ணீர் இல்லாமல் போனதால், பழைய வருக்க உறவுகளே மாறிவிட்டன. வேலைக்கு ஆட்கள் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். இப்போது கூலி முக்கியமான சிக்கல் இல்லை. கூலி உயர்வுக்காக இவ்வளவு ஈகங்கள் செய்து, காவல்துறையினரையும் அடியாட்களையும் எதிர்கொண்டு கொலைகளுக்கும் சாவுகளுக்கும் நடுவில் நின்று வெற்றிபெற்ற ஓர் இயக்கம், ஏன் காவிரி உரிமைகளை இழந்தபோது மெளனமாக இருந்தது? அந்த உரிமைகளை மீட்பதற்கு என்ன செய்தது? நிலம் இருப்பவன், இல்லாதவன் என எல்லோருக்குமான உயிர்நாடி காவிரிதானே.

நிலம் உள்ளவர்கள் மாற்று வழிகளைத் தேடிக்கொள்ளலாம். நிலமற்றவர்கள் அகதிகளாகத் திருப்பூருக்கும் கோவைக்கும் பெங்களூருக்கும் இடம்பெயர்ந்து போக வேண்டியிருக்கிறதே! கல்வி, வேலைவாய்ப்புகளுக்குப் பிறகு வேளாண் வேலைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் இல்லை. எனவே, நடுத்தர வயதுள்ளவர்கள் மட்டும்தான் அந்த ஊர்களில் உழவு வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

வேளாண் தொழிலாளர்கள் என்ற உரிமையை வென்று கொடுத்துச், சங்கங்களை உருவாக்கிய பொதுவுடைமை இயக்கம் தமிழர்களே என்று அவர்களை ஒருநாளும் அழைக்கவில்லை. தொழிலாளியாகக் கூலி உரிமையை இழக்கும்போது போராடிய இயக்கம், தமிழக உரிமைகள் சார்ந்து அவர்களைப் பயிற்றுவிக்கவே இல்லை. அகில இந்தியப் போராட்டத்தில் இவர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவார்கள்.

ஆனால், இவர்களின் மாநில உரிமை என்னும் தேசிய இன உரிமை மறுக்கப்படும்போது இவர்களுக்காக யாரும் வர மாட்டார்கள். அந்த இடத்தில் ‘தமிழா இன உணர்வு கொள்’ என்று சொல்லும் திராவிட இயக்கம் வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இன உணர்வு என்பதைத் தேசிய இன உணர்வாக முழுதாக அடையாளப்படுத்தவே இல்லை. அது அவர்களுக்குத் தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு பொழுதுபோக்கு!

+++

அன்பர் துரை கேட்கிறார்…  

தேசியம் தேசம் போன்ற வார்த்தைகள் தமிழா?

ஆம், தேயம் தமிழ்தான். அது மருவி தேசம் ஆயிற்று. தேசத்திலிருந்து தேசியம் வந்தது.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 50