தோழர் தியாகு எழுதுகிறார்
உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா?

இனிய அன்பர்களே!

கல்வி பெறுவது மக்கள் உரிமை! கல்வி தருவது அரசின் கடமை! என்பது கல்வி உரிமையை வலியுறுத்துகிற நாம் தரும் முழக்கம். ஒரு சிலர் கேட்கின்றனர்: அரசினால் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி தர முடியுமா? இது கட்டுப்படியாகுமா? என்று சிலர் கேட்கின்றனர்: அரசின் நிதி நிலைக்கு இது சரிப்படுமா? வரவுக்கு மேல் எப்படிச் செலவு செய்ய முடியும்?

ஏழைபாழைகளுக்கு இலவயக் கல்வி (கட்டணமில்லாக் கல்வி) கேட்பதில் தவறில்லை. எல்லாருக்கும் கேட்டால் எப்படி? வசதியுள்ளவன் பணம் கட்டிப் படிக்கட்டுமே? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். சிலர் வாய்விட்டுக் கேட்கா விட்டாலும் மனத்திற்குள் இந்தக் கேள்விகளை வைத்துள்ளனர்.

இந்த வகைக் கேள்வி கேட்பவர்களின் பார்வையில் கல்வி என்பது ஓர் உடைமை, ஒரு வணிகப் பண்டம். கல்வி உடைமை என்றால் அஃது ஒருவரிடம் இருக்கும், ஒருவரிடம் இருக்காது, ஒருவரிடம் கூடுதலாக இருக்கும், ஒருவரிடம் குறைவாக இருக்கும். வணிகப் பண்டம் என்றால் விற்கலாம். விற்கப்பட்ட பின் அது அயன்மைப்பட்டு விடும். வாங்கியவர் அதனைக் கைவயமாக்கிக் கொள்ளலாம்.

உண்மையிலேயே கல்வி இப்படிப்பட்டதுதானா? ஒவ்வொரு மனிதர்க்கும் கல்வி இன்றியமையாதது என்கிறோம். கல்வி இல்லாத மாந்தர் மாந்தரே அல்லர். கல்விதான் தனிமனிதரைக் குமுக மனிதராக்கும். யார் குமுக மனிதர் இல்லையோ அவர் மனிதராக இருப்பது உயிரியல் நோக்கில் மட்டுந்தானே தவிர குமுகியல் நோக்கில் உண்மையில்லை. நல்ல தேசம் என்றால், நல்ல சமூகம் என்றால், அதில் உரிய அகவை அடைந்த ஒவ்வொருவரும் கல்வி கற்றவராக இருக்க வேண்டும். சமூகம் தனிமாந்தரைப் படைக்கிறது. தனிமாந்தர்கள் சேர்ந்து சமூகத்தைப் படைக்கிறார்கள். ஒவ்வொரு தனிமாந்தரும் ஒரு சமூக விளச்சல்தான்.

ஒவ்வொரு குழந்தையையும் படிக்க வைப்பது பெற்றோரின் கடமை என்பதன் பொருள். பெற்றோர் வழியாகச் சமூகம் அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதே. தாய்தந்தையைச் சமூகத்தை விட்டு விலக்கிப் பாருங்கள், அவர்களால் குழந்தையைப் படிக்க வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, உணவூட்டி வளர்க்கக் கூட முடியாது.

மாதா பிதா குரு தெய்வம் நான்கில் முதல் மூன்றும் எளிதில் விளங்கும். நான்காவதாக வரும் தெய்வம் என்பது விளங்காப் புதிராக உள்ளது. சமூகம் என்பதன் குறியீட்டுத் தொன்மம்தான் அது. தெய்வத்தை விடவும் சமூகம் பெரிய புதிர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
குழந்தை வளர்ப்பில், குறிப்பாகக் குழந்தைக் கல்வியில் சமூகத்திற்கு உள்ள இந்தக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்குள்ளது. மருத்துவத்தையும் கல்வியையும் கடைச் சரக்காக்கி விட்டு மக்கள்நல அரசு என்று சொல்லிக் கொள்வதில் பொருளில்லை.
அரசு உண்மையிலேயே மக்கள்நல அரசாக இருக்கிறதா? என்று கேட்கலாம். மக்கள்நல அரசாக இயங்கும் படிக் கோரும் கடமை நமக்குள்ளது. கல்வி தருவது அரசின் கடமை என்று நாம் முழங்குவதன் பொருள் இதுவே.
இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரை “உரிமை, நிகர்மை, தோழமை” (LIBERTY, EQUALITY AND FRATERNITY) என்று முழங்குகிறது. குமுக அறத்தை (சமூகநீதி) குறிக்கோளாக அறிவிக்கிறது. இந்த விழுமியங்களின் படிச் சமூகம் அமையக் கல்வி இல்லாமல் எப்படிக் கூடும்? அந்தக் கல்வி ஏதோ ஒரு கல்வியாக இல்லாமல் இந்த விழுமியங்களை உள்ளடக்கமாகக் கொண்ட கல்வியாக இருத்தல் வேண்டும் அல்லவா?
கல்வி என்ற அமுதம் பருக ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் உரித்துள்ளது. அதற்குச் சமூகம் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பொறுப்பேற்றலின் தனியொருவருக்குக் கல்வி இல்லையேல் இந்த செகத்தினை அழித்திடுவோம்! என்ற புது முழக்கம் ஓங்கட்டும்.

உணவும் உடையும் உறைவிடமும் போல் – இன்று குடிநீரும் நல்ல காற்றும் போல் – நல்ல கல்வியும் நலவாழ்வும் சமூகத்தின் சார்பில் அரசு நிறைவேற்றித்தர வேண்டிய அடிப்படைத் தேவைகள் என்ற தெளிவு நம் சமூகத்தில் படரச் செய்வோம். அரசுக்குள்ள இந்தப் பொறுப்பின் ஆவணமாக அதன் கல்விக் கொள்கை அமைதல் வேண்டும்.

குடிமக்கள் வறுமையில் உழன்று நெருக்கடியில் தவிக்கும் போது மக்கள்நல அரசு அவர்தம் துயர்தணிக்கத் தன்னாலியன்றதைச் செய்ய வேண்டியதுதான். இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் தமிழ்நாட்டரசின் திட்டத்தை இப்படித்தான் புரிந்து கொள்கிறோம். அதே போது இந்தத் தொகையில் ஒரு பெரும் பகுதி கல்வி வணிகர்களுக்கும் சாராய வணிகர்களுக்கும் போய் விடுமோ? என்ற அச்சம் நமக்குள்ளது. அரசுச் சாராய(டாசுமாக்) வணிகம் பெருகியுள்ளது என்று வேண்டுமானால் அரசு மகிழ்ந்து கொள்ளலாம்.

கல்வி உரிமை பெற்றோரின் பெருஞ்சுமையைக் குறைக்கப் பயன்படும், மக்களிடையே விழிப்பூட்டி போதைப் பழக்கத்தையும் குறையச் செய்யும். குடி குடியைக் கெடுக்கும், அரசையும் கெடுக்கும்! மிகையான குடிப் பழக்கத்தால் ஈரல் கெட்டு அரசு மருத்துவமனைகளின் நோய்ப் படுக்கைகளில் கிடப்பவர்களுக்கான மருத்துவச் செலவு குறைந்தால் அரசுக்கு நன்மைதானே?

இளைஞர் அரண் கேட்பது – தமிழ்நாட்டின் கல்வி உரிமை ஆர்வலர்கள் கேட்பது – கல்வி உரிமை! முழுமையான கல்வி உரிமை! இதை உறுதி செய்தால் – கல்விக்குக் கட்டணமில்லை என்ற நிலை ஏற்படச் செய்தால், உரிமைத் தொகைக்கான தேவை குறையும், முடிவில் அற்றும் போகும்.

உரிமைத் தொகை கூடாது என்று நாம் சொல்லவில்லை. உரிமைக் கல்வி வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

இன்றைய இந்திய அரசும் அரசமைப்பும் இருக்கும் நிலையில் தமிழக அரசினால் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வகுக்க இயலுமா? வகுத்தாலும் அதனைச் செயலாக்க இயலுமா? என்று கேட்கின்றனர். இருக்கும் நிலையைச் சொல்வது அதனை மாற்றுவதற்காக இருக்க வேண்டுமே தவிர அத்தோடு ஓய்ந்து விடுவதற்காக இருக்கலாகாது.

இன்றைய நிலையில் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று தமிழக அரசு சொல்கிறதா? அது தமிழ்நாட்டுக்கு ஒரு கல்விக் கொள்கை வகுக்க முடியும் என்று நம்பித்தானே அதற்கான ஒரு குழுவையும் அமைத்தது? அந்தக் குழு ஒரு கொள்கையை வகுக்கட்டும், அதனைச் செயலாக்குவதில் என்ன தடை வரினும் எப்படிக் கடப்பது என்று பேசுவோம். குடியாட்சியத்தில் வெளிப்படைத் தன்மை இன்றியமையாத ஒன்று. எதுவானாலும் தமிழக மக்களுக்குத் தெரிய வேண்டும்.

ஒவ்வொரு தமிழரின் கல்வி உரிமையும் தமிழ்த் தேசத்தின் கல்வி இறைமையைச் சார்ந்துள்ளது என்பதை நன்கறிவோம். இந்த உரிமைக்கும் இறைமைக்கும் தடையாக நிற்பது இந்திய அரசுதான். எனவே நமது போராட்டம் இந்திய அரசுக்கு எதிராகத்தான். இந்தப் போராட்டத்தில் தமிழக அரசு இயல்பாகவே நம் பக்கம் நிற்க வேண்டும் என்று விரும்பி எதிர்பார்க்கிறோம். தமிழக அரசே இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குத் தலைமையேற்றால் மகிழ்வோம். ஆனால் தமிழக அரசு இந்தப் போராட்டத்தைத் தனக்கெதிரானதாக நினைத்துக் கொண்டு குறுக்கிட்டுத் தடுக்கவோ ஒடுக்கவோ முயலாதிருக்கட்டும்.

தூக்க வரும் பருந்திடமிருந்து குஞ்சுகளைக் காக்கும் கடமை தாய்க் கோழிக்குண்டு. பருந்தின் வலிமை கோழிக்கு இல்லை என்பதால் இந்தக் கடமையைப் புறக்கணிக்க இயலாது. குஞ்சுகளைத் தன் சிறகில் அரவணைத்துக் கொண்டு சிலிர்த்துச் சீறிப் பருந்தை விரட்டியடித்தால் அதுதான் தாய்க் கோழி. என்ன செய்யப் போகிறது தமிழ்நாட்டரசு?

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 248