(தோழர் தியாகு எழுதுகிறார் 213 :தமிழ்ப் பணி, பின் ஆலயப் பணி)

தோழர் தியாகு எழுதுகிறார்
வான்தொடு உயரங்கள்

இனிய அன்பர்களே!

வட அமெரிக்கா என்பது புவியியல் நோக்கில் ஒரு கண்டத்தைக் குறிப்பது போல் அரசியல் நோக்கில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் குறிக்கும் சொல்லாக ஆளப்படுகிறது.

வட அமெரிக்காவின் அரசியல் தலைநகராக வாசிங்குடன் உள்ளது. வாசிங்குடன் என்ற பெயரில் ஒரு மாநிலமும் (அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு நாடு) இருப்பதால் தலைநகரம் வாசிங்குடன் – Washington D.C. எனப்படுகிறது. DC என்றால் District of Columbia. வாசிங்குடன், கொ.மா. என்று சொல்லலாம். வாசிங்குடன் ஒரு மாநிலம் அல்லது நாடன்று. அது கொலம்பியா மாவட்டம் அல்லது வட்டம்தான். “பத்து சதுரக் கல்லுக்கு மேற்படாத பரப்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசின் இருப்பிடம் அமையும்” என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசமைப்பிலேயே வகை செய்யப்பட்டுள்ளது. தலைநகரம் விடுதலைப் போரின் தலைவர் சியார்சு வாசிங்குடனின் பெயரால் அமைந்துள்ளது.

பல விதத்திலும் வாசிங்குடனை விடவும் முகன்மையானது ‘நியூ யார்க்கு’ (New York). New Delhi தமிழில் புது தில்லி ஆவது போல் New York என்பதைப் புது யார்க்கு என்றே சொல்லலாம் என நினைக்கிறன். புது யார்க்கு ஒரு மாநிலத்தின் பெயராகவும் அதன் ஒரு மூலையில் உள்ள பெருநகரத்தின் பெயராகவும் விளங்குகிறது. புது யார்க்கு நகரம் மன்ஃகாட்டன், இலாங்கு, இசுடேட்டன் ஆகிய மூன்று தீவுகளைக் கொண்டது.

மன்ஃகாட்டன் தீவில்தான் உலக வணிக மையத்தின் இருப்பிடமான இரட்டைக் கோபுரம் அமைந்திருந்தது. 2001 செட்டம்பர் 11ஆம் நாள் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட செய்தி தெரிந்ததே. அரசியல் வரலாற்றில் 9/11 ஒரு திருப்புமுனை நாளாயிற்று.

அதற்கு முன் 1994 சூலை அல்லது ஆகட்டு மாதம் அமெரிக்கப் பயணத்தின் போது இந்த இரட்டைக் கோபுரத்தின் உச்சியில் நின்றேன். பிற்காலத்தில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு குறித்தும், அல் கொய்தா, பின் லேடன் குறித்தும் தமிழ்த் தேசம் திங்களேட்டில் நீண்ட கட்டுரை எழுதி வெளியிட்ட போது, இரட்டைக் கோபுரத்தின் உச்சியில் நின்ற படத்தை வெளியிட்டு, அந்த நேரம் இந்தத் தாக்குதல் நடைபெறவில்லை என்று வேடிக்கையாகச் சுட்டியிருந்தேன்.

அணு வெடிப்பு நிகழும் துல்லியமான புள்ளிக்கு Ground Zero என்ற பெயருண்டு. சுழிமையம் அல்லது அழிவுப் புள்ளி என்று மொழிபெயர்க்கலாம். இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின் அந்த இடம் Ground Zero என்று பெயர் பெற்றது. 2010ஆம் ஆண்டு மீண்டும் புது யார்க்கு சென்றிருந்த போது அந்தச் சுழிமையத்தைப் போய்ப் பார்த்தேன். பாரியக் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

புது யார்க்கு இரட்டைக் கோபுரத்துக்கு முன் பேரரசு மாநிலக் கட்டடம்(Empire State Building)தான் உலகின் ஓங்குயர் கட்டடமாக மதிக்கப்பட்டு வந்தது. அதன் இடத்தை இரட்டைக் கோபுரம் கைப்பற்றியது. 110 தளங்களுடன் அதன் உயரம் 1362 அடி. அதை விடவும் உயரமான கட்டடமாக சிக்காகோ சியர்சு கோபுரம் அமைந்தது. அந்தக் கோபுர உச்சிக்கும் போயிருக்கிறேன். கனடா தொரண்டோ நகரில் உள்ள சி.என்.என். கோபுரமும் உலக அளவில் உயரமானது எனப் பெயர் பெற்றது. நான் ஏறிப் பார்த்ததில்லை. கடைசியாக மலேசியாவின் பெட்ரோனாசு இரட்டைக் கோபுரங்கள் உலகிலேயே உயரமான கட்டடம் என்று புகழ்பெற்றன. பெட்ரோனாசு உச்சியில் இருக்கும் உணவு விடுதியில் நடந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டுள்ளேன்.

இந்த வானளாவிய கட்டுமானங்களுடன் ஒப்பிட்டால் உயரம் என்ற பார்வையில் இடையன்குடி தூய திரித்துவ ஆலயத்தின் மணிக் கோபுரம் ஒன்றுமே இல்லை. தமிழ்நாட்டின் பெருங்கோயில் கோபுரங்களுடன் ஒப்பிட்டாலும் ஒன்றுமே இல்லை.

புதுமக் காலக் கட்டடங்களில் படியேறத் தேவையில்லை. எல்லாவற்றிலும் மின்தூக்கி (லிஃப்ட்) வசதி உள்ளது, அதிலும் மீவிரைவு மின்தூக்கிகள்! ஆனால் இடையன்குடி தேவாலயத்தின் உயரம் ஒப்பளவில் குறைவே என்றாலும் அதன் குறுகலான, உயரமான படிகளில் ஏறி உச்சியை அடைவது கடினமாகத்தான் இருந்தது. எனக்குத்தான் அப்படி இருந்தது என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

உச்சித் தளத்தில் அமர்ந்து கீழே அழகிய ஊரையும் தொலைவில் கடலையும் இடையிடையே ஆலயக் கோபுரங்களையும் பார்த்தபடி காலுடுவெல் வாழ்ந்து உருவாக்கிய இடையன்குடியின் புகழை அருள்திரு கிப்புசன் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 241