தமிழீழ விடுதலைக் கவிஞனே..!

விடுதலைப்புலிகளின் தாயகம் தமீழீழத் தாயகம் என்கிற பெருலட்சியத்தின் பிதாமகன் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் பிறந்தநாள் அண்மையில் கடந்தது. தொடர்ந்து சில நாள்களில் தமிழீழ விடுதலையை முன்னிறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாகத் தீபம் திலீபனின் பிறந்த நாள். அதனைத் தொடர்ந்து இன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சிக் கவியான புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள். இந்த ஒரே அலைவரிசை நேர்கோடு ஆச்சர்யமூட்டுகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பதிந்த முதன்மைப் பெயர்களில் புதுவை இரத்தினதுரையின் பெயரும் ஒன்றாகும். இவர் 1948-ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 3-ஆம் நாள் பிறந்தார். பொருள் பொதிந்த கவிதைகளின் வாயிலாக அறியப்பட்ட கவிஞர், சிற்பக்கலைஞர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முதன்மைப் பங்காற்றியவர் எனப் பாராட்டுக்குரிய பன்முகம் கொண்ட புதுவை இரத்தினதுரை, விடுதலைப் போராட்டத்துக்கு தனது கவிதைகளால் உரமூட்டியவர். புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்து இன எழுச்சிப் போராட்டத்தின் பக்கம் ஈர்த்தவர்.
தனது 14ஆவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கிய இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய “இந்த மண் எங்களின் சொந்த மண்” பலரது வரவேற்பைப் பெற்றதோடு, தமிழீழ வேட்கையின் உணர்வுப்பூர்வமானப் பாடலாக தமிழர்தம் நெஞ்சங்களில் வித்தூன்றியது.
“இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்
எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”
துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக…’’
– இது இரத்தினதுரையின் மகத்தான கவிதை வரிகளில் ஒன்றாகும். மேலும்,
‘‘அட மானுடனே!
தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில்தானே!
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில்தானே!
நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்!”-
என்று வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, 1935-ஆம் ஆண்டு தனது முப்பத்தேழாவது வயதில் விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினார்.
“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலை பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்று கூறியிருக்கிறார்.
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளைப் படித்தும், கவிதைப் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருந்தார் என்பது மறத்தற்கரிய வரலாறாகும்.
‘‘இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்
எல்லைகள் மீறி யார் வந்தவன்.
நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா – உந்தன்
கலைகள் அழிந்து கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா இன்னும்
உயிரை நினைத்து உடலைச் சுமந்து
ஓடவா போகிறாய்த் தமிழா….”-
என்கிற கவிஞரின் கனல் கக்கும் கவிதை வரிகள், தமிழீழ மக்களின் மனத்தில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும்  கேட்போரை நின்ற இடத்தை விட்டு அகலாதவாறு கட்டிப்போட்டு நிறுத்தி வைக்கும். அப்பாடலில், புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துகளும் நெகிழ்ச்சியான அனுபவங்களும் நிறைந்திருப்பதால் கேட்பவரை உறையவைத்திடும் என்பதே உண்மை.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் நடந்த இறுதிப்போருக்குப் பிறகு, இலங்கை இராணுவத்தின் வற்புறுத்தல்களுக்கு இணங்கி உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஏராளம். அவர்களின் குறிப்பிடத்தக்கவர்களில் பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை, யோகரட்ணம் யோகி ஆகியோரும் ஆவார்கள்.
ஆனால், இதில் இன்றுவரை நீளும் துயரம் என்பது இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட புதுவை இரத்தினதுரை முதலான எவரது நிலைமையும் இன்றுவரை இருக்கிறார்களா… இல்லையா… என்கிற எதிர்பார்ப்பு மிக்க கேள்வியாக தமீழழ மண்ணில் எரிதனலாக கொதித்துக் கொண்டு இருக்கிறது. அவர்களை இலங்கை அரசு உயிரோடு வைத்திருக்கிறதா அல்லது படுகொலை செய்து பாதகம் புரிந்து விட்டதா என்று அவர்களின் உறவினர்களின் நெஞ்சில் நீங்காத் துயரம் கனன்று கொண்டு இருக்கிறது.
கருணை கொன்ற காலம் இப்போது மீண்டும் போர்குற்றமிழைத்தவர்களின் கரங்களிலேயே அரசதிகாரத்தை அளித்திருக்கிறது. இது மீண்டும் ஈழத்தமிழர்களின் துயர் மேலோங்குமோ என்ற அச்சத்தை விதைத்திருக்கிறது. இந்நிலையில், புதுவை இரத்தினதுரை முதலானவர்களின் நிலைமைகளை என்னவென்று எதிர்பார்த்திருந்த காத்திருப்பு எண்ணம் கலக்கத்தில் இருக்கிறது.
தமிழீழ விடுதலைக் கவிஞனே… கால அறம் உன்னை உலகுக்கு மீண்டும் வெளிக்காட்டுமா..?
– பி. இரியாசு அகமது
தினச்செய்தி, 03.12.2019