‘விரல்மொழியர்

பார்வையற்றோரால் நடத்தப்படும்

முதல் தமிழ் மின்னிதழ்

 அறிமுகம்

​  பார்வையற்றவர்களால் பார்வையற்றவர்களுக்காகப்  பார்வையற்றவர்களே   தொடங்கும் ம் முதல் தமிழ் மின்னிதழ்  ‘விரல்மொழியர்’. இம்முயற்சியில்  பங்கேற்க, இம்முயற்சியை ஆதரிக்க பார்வையற்ற படிப்பாளிகளையும் படைப்பாளிகளையும் வரவேற்கிறோம்.
பார்வையுள்ளவர்களுக்கு இணையாக இன்று பார்வையற்றவர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் அதன் பயன்பாடு பெரும்பாலும்  படிப்பு,  பொழுதுபோக்கு அல்லது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல் என்கிற குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்கிறது என்பதைக் கண்டிப்பாக நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
  இயல்பிலேயே அதிகமான சிந்தனை ஆற்றலையும் உயர்கல்வியில்  மொழிப் பாடத்தைப் படிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கும் பார்வையற்றவர்கள், எழுத்துலகில் குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டாதது சிந்திக்கவேண்டிய ஒன்று. அப்படியே வெகுசிலர்  எழுதினாலும், அது  பரவலாக வாசகர்களைச் சென்றடையாததும் அவர்களுக்கு சோர்வு மனப்பான்மையை ஏற்படுத்தியிருக்கும். இந்தச் சூழலை மாற்ற, பார்வையற்ற படைப்பாளிகளை ஒருங்கிணைக்க, அவர்களின் எழுத்துகளை பார்வையற்ற வாசகர்களிடம்  மட்டுமல்லாமல் பார்வையுள்ளவர்களிடையேயும் ஒரு தரமான மின்னிதழாக  கொண்டுசேர்க்க விரல்மொழியர் என்கிற எங்கள் இணைய இதழ் முயற்சியில் இணைந்திட உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இதழ் முழுக்க படைப்பாளிகளின் சொந்தப் படைப்புகளை மட்டுமே  இடம்பெறச் செய்யவேண்டும் என்பது எங்களது திட்டம். விளையாட்டு, திரைப்படம், அரசியல், தொழில்நுட்பம்,  சொந்தப் பட்டறிவுப் பகிர்வுகள்,  கவிதைகள், கதைகள்  எனப் பார்வையற்றவர்களின் சொந்த படைப்புகள் அனைத்தும் இதழில் வெளியிடப்படும். இவை தவிர, அட்டைப் படக் கட்டுரை, செவ்வி(பேட்டி)களும் இடம்பெறும் வகையில் திட்டமிட்டிருக்கிறோம். எனவே, தங்களின் அட்டைப் படக் கட்டுரையாகவும்,  நம் பார்வையற்றோர் சமூகத்தில் குறிப்பிடத்தக்கவராக நீங்கள் அடையாளம் காண்பவரின் செவ்வி(பேட்டி)யாகவும் இருக்கலாம். பார்வையுள்ளவர்களின் பார்வையற்றோரைப்பற்றிய படைப்புகளும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
 எந்த நிறுவனமும் சாராமல், முழுக்க நண்பர்கள் இணைந்து மேற்கொள்ளும் முயற்சி இது. இதில் தங்களையும் இணைத்துக்கொண்டு இதழியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க வாருங்கள்.
‘விழிச்சவால்’ பிரெயில் மாத இதழின் இணையாசிரியர் திரு. இரா. பாலகணேசன், சமூக வலைத்தளங்களில் ‘அறவழிச்சாலை’ என்கிற குழுமத்தில் பார்வையற்றவர்களின் கல்வி தொடர்பாகவும்,  அரசியல் விமர்சனங்களையும், அன்றாட வாழ்க்கைப் பட்டறிவுகளையும்  பதிவிட்டுவரும், புதுக்கோட்டை அரசு பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியின் ஆசிரியர் திரு. ப. சரவணமணிகண்டன், ‘வெளையாட்டுப்பய’, ‘பார்வையற்றவன்’ போன்ற புனைபெயர்களில் சமூக வலைத்தளங்களில் எழுதிவரும் காந்திகிராம் பல்கலையின் முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வன். பொன். சக்திவேல், ஊடாடு விளம்பர நிறுவனமான ‘ஐஏபி’  சென்னைக் கிளையில் பணியாற்றிவரும் செல்வன். பொன். குமரவேல், இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றிவரும் செல்வன். சோ.யோகேசு, செல்வன். இரா. சரவணன் ஆகியோர் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம்.
விருப்பமுள்ளவர்கள் தங்களின் படைப்புகளையும் இதழ் குறித்த தங்களின் எதிர்பார்ப்புகளையும் எங்களோடு பகிர்ந்து, பார்வையற்றவர்களுக்கான முதல் தமிழ் மின்னிதழ் முயற்சியில் இணைந்திட உங்கள் அனைவரையும் அழைக்கிறது உங்கள் ‘விரல்மொழியர்’. வாருங்கள்! நாம் உணர்ந்ததைச் சொல்வோம் உலகிற்கு!
தொடர்புக்கு:
பாலகணேசன்: 9894335053,
பொன். சக்திவேல் 9159669269.