அகரமுதல
கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு –
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்
தமிழ்நூல் வெளியீடு – விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் கடந்த ஆகட்டு 17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா சென்னை இ.கி.அ.(ஒய்எம்சிஏ) திடலில் நடைபெற்றது.
புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று( ஆவணி 11, 2049 -27.08.2018 அன்று) , 2017-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களை எழுதிய படைப்பாளர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன.
இவற்றுள் கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘எங்கிருந்து தொடங்குவது’ நூல், தமிழில் வெளியான சிறந்த பெண்ணிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன.
இவ்விழாவிற்குத் தலைமையேற்ற தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கவிஞர் அ.வெண்ணிலாவிற்கு உரூ.5,000/- பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்.
சிறந்த பெண்ணிய நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கும் கவிஞர் அ.வெண்ணிலா, வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்தவர்.
கடந்த 27 ஆண்டுகளாக ஆசிரியப் பணியை செய்துவரும் இவர், தற்போது வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமின்றி, பள்ளியின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார்.
தே.வே.ஊ.மே.வங்கி(NABARD) மூலமாகப் பள்ளிக்கு 16 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்படுவதற்கும்,
மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து உரூ.20 இலட்சம் செலவில் 15 கழிப்பறைகள் கட்டப்படுவதற்கும்
தலைமையாசிரியரோடு இணைந்து நின்று முன்முயற்சி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு படைப்பாளியாகவும் தமிழகம் கடந்தும் அறிமுகமாகியுள்ள அ.வெண்ணிலா, இதுவரை
கவிதை நூல்கள் – 6, சிறுகதை நூல்கள் -2, கட்டுரை நூல்கள் – 3, தொகுப்பு நூல்கள் – 4, மடல் நூல் – 1 என 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
கவிதை உறவு, சிற்பி அறக்கட்டளை, தேவமகள் அறக்கட்டளை, ஏலாதி அறக்கட்டளை, திருப்பூர் அரிமா சங்கம், தமுஎகச செல்வன் கார்க்கி , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் வழங்கிய பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
2007-ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கிய சிறந்த கவிதை நூலுக்கான விருதையும் பெற்றுள்ளார்.
2002-ஆம் ஆண்டில் பன்னாட்டுப் பெண் எழுத்தாளர்கள் (ஐதராபாத்து) கலந்துகொண்ட தெ.நா.ம.கூ.( SAARC) மாநாட்டிலும்,
2011-சனவரியில் தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய (Commonwealth) எழுத்தாளர்களுக்கான மாநாட்டிலும் தமிழகச் சார்பாளராகப் பங்கேற்றுள்ளார்.
2010-ஆம் ஆண்டில் மத்திய அரசின் கலைஇலக்கியக்கழக (சாகித்திய அகாதெமி) அழைப்பின் பேரில் மேற்கு வங்காளம் சென்று, அங்குள்ள எழுத்தாளர்களோடும் மக்களோடும் கலந்துரையாடியுள்ளார்.
2017-இல் தமிழக அரசு வழங்கிய ‘நல்லாசிரியர் விருதி’னையும் பெற்றுள்ளார்.
இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன.
இவரது படைப்புகளை இதுவரை 10 பேர் இளமுனைவர் (எம்ஃபில்.,) ஆய்வும், 4 பேர் முனைவர் (பி.எச்டி.,) பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன.
கேரள அரசின் தமிழ்ப் பாடப் பிரிவில் இவரது கவிதை, பாடமாக இடம்பெற்றுள்ளது.
2009-10 வரை சமச்சீர்க் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து, புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.
இவரைப்போலவே பல்வேறு விருதுகள் பெற்றுள்ள படைப்பாளர் கவிஞர் முருகேசன் இவரின் கணவராவார்.
விழாவிற்கு வருகை புரிந்தோரை சிரீசெண்பகா பதிப்பகம் ஆர்.எசு.சண்முகம் வரவேற்க,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக