செவ்வாய், 12 செப்டம்பர், 2017

புலவரேறு அரிமதிதென்னகன் மறைவுக்கு இரங்கல்





புலவரேறு அரிமதிதென்னகன் மறைவுக்கு இரங்கல்


புதுச்சேரியின் முன்னணிப் புலவர் அரிமதிதென்னகன் மறைந்து விட்டார் என்பது பெருந்துன்பச்செய்தி. தமிழாசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கிய அரிமதிதென்னகன் நாமதேவன் என்னும் இயற்பெயர் கொண்டவர். பாட்டு, பாவியம், சிறுகதை, சிறுவர் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, நாடகம், உரைவரைதல் என்னும் இலக்கியத் துறைகள் அனைத்திலும் தம் அடையாளத்தை ஆழமாகப் பதித்தவர். ஓய்வில்லா எழுத்துப் பணியில் ஈடுபட்டு 200க்கு மேற்பட்ட நுால்களை எழுதிக் குவித்த அரிமதியாரின் எழுதுகோல் இன்று மூடிக்கொண்டது. 
 இலக்கியப் படைப்புகளுக்காகத் தமிழகஅரசின் பல பரிசுகள் அவர்க்குக் கொடுக்கப்பட்டன. புதுச்சேரிஅரசின் பல பரிசுகள் அவருடைய நுால்களுக்குக் கிடைத்தன. 
 தொட்க்கத்திலிருந்து தந்தைபெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு காட்டி வாழ்ந்தவர். அண்ணாவின் திராவிடநாடு, காஞ்சி ஆகிய ஏடுகளில்  பலவகையான படைப்புகளைத் தொடர்ச்சியாக எழுதிய பெருமைக்குரியவர் அரிமதி தென்னகன்.
 அவர் இளைஞர்களை ஊக்கப்படுத்திப் பாராட்டும் பண்பினர். பாவலர்கள் பலருக்கும் விருதுகள் அளித்துச் சிறப்பித்தவர் அவர். குறள்நெறிமன்றம், சிறுவர்இலக்கியச் சிறகம் போன்ற இலக்கிய அமைப்புகளை அமைத்துத் தமிழ்ப்பணி செய்த தமிழ்மாமணி அரிமதியாரின் மறைவு இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு.
  தமிழ்ப்புலவர்களில் எவ்வகையான தீய பழக்கமும் இல்லாத சிறப்புக்குரியவர் அவர். அனைவரையும் உயர்த்த வேண்டும் என்று மேடைகளில் முழங்கிய அவரின் முழக்கம் இன்று ஓய்ந்துவிட்டது.
அரிமதி தென்னகன் அவர்களின் மறைவுக்குப் புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஆழ்ந்த இரங்கலுடன்,

முனைவர் க.தமிழமல்லன்,9791629979
தலைவர் தனித்தமிழ்இயக்கம்,புதுச்சேரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக