நீலத்திமிங்கிலம் என்னும் இணையக் கொலைக்களம்
கூகுள் தேடுபொறியில் நீலத்திமிங்கிலம்
(Blue Whale) என்று போட்டாலே நீலத்திமிங்கிலம் என்னும் இணைநிலை விளையாட்டு
குறித்த விக்கிபீடியா தளத்தைத் தான் காட்டுகிறது. அந்த அளவிற்கு, தற்போது
ஒட்டுமொத்த உலகையும் அச்சத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
இரசியாவில் உருவாக்கப்பட்ட இந்த நீலத்திமிங்கில விளையாட்டு,
கிலியூட்ட வேண்டும் என்பதற்காக மிகவும் கொடூரமான முறையில் வடிவமைத்து உள்ளார்கள்.
இந்த விளையாட்டு இணையவழி மட்டுமே
விளையாடக்கூடியது. பெருந்தலை போல இதிலும் ஒரு செயலாண்மையர்(நிருவாகி)
இருப்பார். இந்த விளையாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அவர் அன்றாடம் ஒரு
வேலை கொடுப்பார். இந்தப் போட்டியாளர்கள் தான் ‘புளூ வேல்’ எனப்படும் நீலத்
திமிங்கலம். இவர்கள், இயல்பான உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு கற்பனையான
மாய உலகினுள் தள்ளப்படுவார்கள்.
“இன்று முழுவதும் யாரோடும் பேசக்கூடாது,
விடியற்காலையிலேயே பேய்ப்படம் பார்க்க வேண்டும், கத்தியால் உடலை
வெட்டிக்கொள், கட்டடத்தின் நுனிக்குச் செல், மேம்பாலத்தின் சுவரில் ஏறி
நில் என்பது போல உயிருக்கு அச்சுறுத்தலான வேலைகளாகத்தான் ஒவ்வொரு நாளும்
கொடுக்கப்படும். கொடுக்கப்படும் வேலையைச் செய்யும்படியாக ஒருவித
ஆட்கொள்ளப்பட்ட மனநிலைக்கு இதன் போட்டியாளர்கள் மாறியிருப்பார்கள். எனவே
கொடுத்த ஒவ்வொரு வேலையையும் செய்து முடிப்பதில் முனைப்பாக இருப்பார்கள்.
போட்டியின் இறுதிப் பணியாக தற்கொலை
செய்யவும் தூண்டப்படுவார்கள். இதனை ஏற்றுக்கொண்டு இதுவரை இரசியாவில்
மட்டும் 130 இளச்சிறுவர்கள் உயிரிழந்து உள்ளார்கள். அதுமட்டுமின்றி,
பிரேசில், அர்செண்டினா, சீனா என பல்வேறு நாடுகளிலும் இவ்விளையாட்டால்
உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை பரவத் தொடங்கிவிட்டது.
தற்போது இந்தியாவிலும் இவ்விளையாட்டில்
சிக்கித் தற்கொலை செய்வது தொடங்கி விட்டது. மும்பை, அந்தேரி பகுதியைச்
சேர்ந்த, 14 அகவை சிறுவன் மான்பிரீத்து சிங்கு சகானி, கடந்த சூலை மாதம்
29ஆம் தேதி, ஏழாவது மாடியில் உள்ள தனது வீட்டின் உப்பரிகையில் இருந்து கீழே
குதித்துத் தற்கொலை செய்துள்ளான். மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை
செய்யுமுன் ஒளிப்படமெடுத்து, படப்பகிரி (instagram) வலைத்தளத்தில்
பதிவிட்டுள்ளான். அதேபோல், கேரள மாநிலம், பெருங்குளம் பகுதியைச் சேர்ந்த
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மனோசு, இந்த விளையாட்டால் அதே சூலை மாதத்தில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துள்ளான்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த
தனியார் பள்ளியில் பயின்று வந்த 7ஆம் வகுப்பு மாணவன், தனது தந்தையின்
அலைப்பேசியில் இந்த விளையாட்டை விளையாடியுள்ளார். அந்த விளையாட்டில்
கொடுக்கப்பட்ட கட்டளைப்படி, பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து, மாணவன்
குதிக்க முயன்றான். தற்செயலாகப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாணவனைக்
கண்டு, தற்கொலையிலிருந்து தடுத்து நிறுத்தினார். இதனால் அவனது
முட்டாள்தனமான உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளால், நீலத்திமிங்கிலம்
என்னும் இணைய விளையாட்டைத் தடை செய்ய வேண்டியதன் தீவிரத்தை அனைவரும்
உணர்ந்து, மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து, மத்திய
அரசும் இவ்விளையாட்டைத் தடை செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழகக் காவல்துறை சார்பாக இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நெறியுரை கொடுக்கத் தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சமூக நல
அமைப்புகளும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைகளைச் செய்து
வருகின்றன.
இணைய விளையாட்டு என்ற வடிவில்,
சிறுவர்களையும் இளைஞர்களையும் சைக்கோவாக்கி தற்கொலைக்குத் தூண்டும்
இம்மாதிரியான இணைய விளையாட்டுகளை மட்டுமின்றி, இரம்மி வட்டம்
போன்ற பணம் பறிக்கும் விளையாட்டுகளில் இருந்தும் தங்களது குழந்தைகளைக்
காக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது. எனவே குழந்தைகள்
இணையத்தில் அல்லது அலைப்பேசியில் விளையாடும்போது கண்காணிப்புடன் இருந்து,
அவர்களோடு மனம் விட்டுப் பேசி, அவர்களுக்காக நேரம் செலவழித்து, அவர்கள்
அந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் பாதுகாக்க வேண்டியது பெற்றோர் மற்றும்
நண்பர்களின் கடமையாகும்.
– தெ.சு.கவுதமன்
‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழ் நாள் : செப்.1-15, 2017 பக்.40-41
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக