சீரழியும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்: கொந்தளிக்கும் பெ.மணியரசன்! 
 தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா (சி.பி.எசு.இ.பள்ளி) அமைப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு இறங்கியுள்ளதற்குத் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் இந்தித் திணிப்புப் பள்ளியான கேந்திரியா வித்தியாலயா பள்ளி தொடங்கப்படுவது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் முதன்மொழியான தமிழுக்கு உலகிலுள்ள ஒரே பல்கலைக்கழகம், தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். 1981 செட்டம்பர் 15 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஞ்சிஆர். அவர்கள், இப்பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார்.
  25 துறைகளின் உயராய்வுக்காக தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்திற்கு, 972 காணி( ஏக்கர்) அரசு நிலத்தையும் எம்ஞ்சிஆர். வழங்கினார். ஆனால், எம்ஞ்சிஆருக்குப் பிறகு வந்த தி.மு.க-வை விட அ.தி.மு.க. அரசுகள் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிலத்தை தமிழ் வளர்ச்சி அல்லாத பிறப் பயன்பாடுகளுக்குத் திருப்பி விடும் பணிகளைச் செய்து வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும்  முறையாக நடத்தாமல் சீரழித்து வருகின்றனர்.
  முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலிகைப் பண்ணையின் 25  காணி(ஏக்கர்) நிலத்தை இந்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு வழங்கியது தமிழ்நாடு அரசு. அதன்பின், 50 காணி(ஏக்கர்) நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு அளித்தது. அங்கு இப்போது வீடு கட்டித் தனியாருக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், 2012 – இல் தஞ்சை மாவட்ட ஆட்சியர்,  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்காக 62  காணி நிலம் வழங்கப்பட்டது.
  இப்போது, அதையெல்லாம் விட மிக மோசமாக இந்தி – சமற்கிருதத் திணிப்பில் ஈடுபட்டு வரும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிக்கே – தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இடமளிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றார்.